உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / "மோகன்லாலுக்காக என் 35 வருடக் கொள்கையைத் தளர்த்துவேன்" : நெப்போலியன் உறுதி

"மோகன்லாலுக்காக என் 35 வருடக் கொள்கையைத் தளர்த்துவேன்" : நெப்போலியன் உறுதி

பாரதிராஜாவின் ‛புது நெல்லு புது நாத்து' படத்தில் அறிமுகமாகி, 'கிழக்கு சீமையிலே' படத்தில் பிரபலமாகி, பின்னர் கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்து, குணச்சித்திர நடிகராக மாறி, பின்னர் அரசியலுக்கும் சென்று பெரிய அளவில் சாதித்தவர் நடிகர் நெப்போலியன். தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது தமிழ்நாடு வந்து செல்லும் இவரது நடிப்பில் 'அமெரிக்கா ஆவி' என்கிற திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கான புரமோஷனுக்குச் சமீபத்தில் சென்னை வந்திருந்தார் நெப்போலியன். அந்த சமயத்தில் அவரிடத்தில் மலையாளப் படங்கள் குறித்துப் பேச்சு வந்தது.

மோகன்லாலுடன் அவர் மலையாளத்தில் கடந்த 1993-ல் நடித்த முக்கியமான படம் 'தேவாசுரம்'. பின்னர் அதன் இரண்டாம் பாகமாக 2001ல் 'ராவண பிரபு' திரைப்படம் வெளியானது. இதில் மோகன்லால் 'மங்களசேரி நீலகண்டன்' என்கிற பிரசித்தி பெற்ற கதாபாத்திரத்தில் நடித்தது போல, அவருக்கு நிகராக பேசப்பட்டது நெப்போலியன் வில்லனாக நடித்து அசத்திய 'முண்டக்கல் சேகரன்' என்கிற கதாபாத்திரமும். இன்னும் கூட பல ரசிகர்கள் தன்னைப் பார்க்கும்போது, சேகரேட்டா... தேவாசுரம் பகுதி 3 எப்போது? என ஆர்வமாகக் கேட்பதாக நெப்போலியன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “மோகன்லால் சம்மதித்து அழைத்தால் 'தேவாசுரம் 3' படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். கடந்த 35 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என்கிற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால் மோகன்லாலுக்காகவும் தேவாசுரம் திரைப்படத்திற்காகவும் இந்த முடிவை நான் மாற்றிவிட்டு உடனடியாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் நெப்போலியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !