உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோசியல் மீடியா நெகட்டிவிட்டி... கைவசம் 7 படங்கள்... அண்ணாமலை ரீமேக் : சிவகார்த்திகேயனின் சுவாரஸ்ய பேச்சு

சோசியல் மீடியா நெகட்டிவிட்டி... கைவசம் 7 படங்கள்... அண்ணாமலை ரீமேக் : சிவகார்த்திகேயனின் சுவாரஸ்ய பேச்சு

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது : பெரிய படம், சின்ன படம் என்பதை பட்ஜெட் வைத்து தான் பார்க்கிறோம். சின்ன பட்ஜெட் படங்கள் ஓடுவது, பெரிய பட்ஜெட் படங்களுக்கும் நல்லது. தவிர, அதனால நிறைய திறமைசாலிகள் வெளியே வருவாங்க. முன்பு சின்ன பட்ஜெட் படங்களை ஓடிடியில் பார்த்தாங்க. இப்ப, அதை தியேட்டர்ல பார்க்க ஆரம்பிக்கிறாங்க.

நான் தயாரித்த தாய்கிழவி மற்றும் சிறை, டூரிஸ்ட் பேமிலி, என பல படங்கள் அப்படி ஜெயித்தது. இதனால் சினிமா துறை நன்றாக இருக்கிறது. இதற்கு மீடியா, சோஷியல் மீடியா என எல்லாருடைய பங்கும் முக்கியம். பெரிய பட்ஜெட் படங்களுக்கு பட்ஜெட், நடிகர்களின் வெளிச்சம் உதவுகிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு விமர்சனம், மக்களின் கருத்து வெற்றிக்கு துணையாக இருக்கிறது. என்னை பற்றி நிறைய ரூமர் (அரசியல்) வந்திட்டு இருக்கிறது. அதை பற்றி இப்ப பேச வேண்டாம்.

டிவி தான் படிகட்டு

நான் ஆங்கிரிங் பண்ணும்போது எந்த கவலையும், பிரஷரும் இல்லாமல் இருந்தது. அதனால், அது எனக்கு படிகட்டு மாதிரி. அதுதான் எனக்கு சினிமாவில் ரசிகர்களை கொடுத்தது. என் மீது காசு போட்டு படம் எடுக்கலாம் என்று தயாரிப்பாளர்களை உருவாக்கியது. அதை மறக்கவே மாட்டேன். நான் டிவியில் இருந்தபோது சினிமா பண்ண வேண்டும் என்று பலர் சொன்னாங்க. அப்போது பசங்க பட இயக்குனர் பாண்டியராஜ் படம் பண்ண இருந்தார். நான் ஆடிசன் போனேன். மறுநாளே உங்களுக்கு படப்பிடிப்பு இருக்கிறது. மெரினா வந்திடுங்க என்றார். எனக்கு பயம் சந்தேகம் இருந்தது. அதனால், பட போஸ்டர் வரும் வரை அந்த படம் பற்றி சொல்லவில்லை. ஒருநாள் என் பட போஸ்டர் வந்தபோது என் அம்மா கேட்க, ஆமா, படம் பண்ணுறேன்னு சொன்னன். உன் மனைவிக்கு தெரியுமானு கேட்டாங்க. இன்னும் சொல்லவில்லை என்றேன்.

வில்லன் வேடம்

பெண் வேடம் உட்பட பல கேரக்டரில் நடித்துவிட்டேன். அதை துணிந்து நடித்த என் சொந்த கேரக்டரை ரொம்ப பிடிக்கும். பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் பார்த்து நடிக்கவில்லை. அனைத்து படங்களை ரசித்து 60, 70 நாட்கள் நடிக்கிறேன். அடுத்து அமரன் மாதிரி படங்கள் பண்ண ஆசை. வில்லன் கேரக்டர் எனக்கு வரவில்லை. நான் மக்களை என்டர்டெயின்ட்மென்ட் பண்ண ஆசை. அதனால், வில்லனாக யோசித்து பார்க்கவில்லை. அப்படி சில கதைகள் வந்து இருக்கிறது. ஒருவேளை ஜாலியாக, பொழுது போக்கு வில்லனாக, டூயட் ரோல் ஆக அமைந்தால் நல்லா இருக்கும். ஹீரோவாக ஏற்றபின், வில்லன் ஏன் என யோசிக்கிறேன்.

நெகட்டிவ் கமென்ட் பாதிக்காது

சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் கமென்ட் பார்ப்பது, படிப்பது இல்லை. என் சோஷியல் மீடியா பணிகளை என் டீம் பார்க்கிறது. இப்ப, ஒரே நேரத்துல 2 படங்களில் நடிச்சிட்டு இருக்கிறேன். அடுத்து 2 பட ஸ்கிரிப்ட் வொர்க் போயிட்டு இருக்கிறது. தவிர, என் தயாரிப்புல 3 படங்கள் போயிட்டு இருக்கிறது. ஆக 7 கதைகள் மனதிற்குள் இருக்கிறது. வீட்டுக்கு, குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கணும். 3 குழந்தைகள், கடைசி மகனுக்கு இரண்டடைர வயது. சோஷியல் மீடியாவில் கவனம் செலுத்தினால் அவனுடன் விளையாட முடியாது. மேலும் படத்துக்கு உடல் அளவில் தயாராக நேரம் ஒதுக்கணும். நம்மை நம்பி காசு போடுற தயாரிப்பாளருக்கு வேலை பார்க்கணும். அவ்வப்போது ரசிகர்களை சந்திக்கணும். இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும்போது, முகம் தெரியாத ஒருவர் போடுகிற நெகட்டிவ் கமென்ட் என்னை பாதிக்காது. நான் ஜெயிலர் 2 பார்த்துவிட்டு, ஒரு ரசிகனாக ரஜினி சாரிடம் பேசினேன். படம் பயங்கரமாக வந்து இருக்கிறது என்றேன். ஆனால், நான் அவரை அழைத்து பாராட்டியதாக ஒரு வீடியோ வந்தது. இதை அனுமதிக்க கூடாது.

அண்ணாமலை ரீமேக்

ஆரம்பத்தில் எனக்கு ரீமேக் பண்ண ஆசைப்பட்டேன். காலேஜ் படிக்கும்போது தில்லு முல்லு பண்ண ஆசைப்பட்டேன். ஆனா, அப்படி படம் வந்துவிட்டது. இப்ப, அண்ணாமலை ரீமேக் பண்ண ஆசைப்படுறேன். நம்மை மாதிரி இருக்கான் என என்னை மக்கள் பார்க்கிறாங்க. அதனால்தான் நம்ம வீட்டு பிள்ளை என்று பசங்க பாண்டிராஜ் தலைப்பு வைத்தார். முதல் படத்தில் நான் பெரிய நடிகன் அல்ல. நான் தொடர்ச்சியாக முயற்சிக்கிறேன். புதுசா செய்வதை மக்கள் ஏற்கிறாங்க. நீ காமெடியன், நீ ஏன் அமரன் கதையில நடிக்கிறே என கேட்கவில்லை. என் வெற்றிக்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கதை, சக நடிகர்கள் என பலர் இருக்கிறார்கள்.

என் பெஸ்ட் மெமரி டிவி

என் சின்ன வயதில் செய்தி வாசிப்பாளர்தான் என் ஹீரோக்கள், அப்ப, ஷோபனா ரவி, பாத்திமாபாபு, தமிழன்பன் ஆகியோரை வீட்டில் பேசுவாங்க. அப்படிதான் நான் வளர்ந்தேன். இந்த துறையினர் இருப்பதால் எல்லா குடும்பங்களிலும் அழகான தமிழ் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நான் சிகரெட் பிடிக்க மாட்டேன், டிரிங்ஸ் பண்ண மாட்டேன் என படங்களில் சொல்ல முடியாது. ஆரம்பத்தில் சில காட்சிகளில் நடித்தேன். இப்ப, அதை நிறுத்திவிட்டேன். நான் வேலை பார்த்த டிவியை மறக்கமாட்டேன். சினிமாவை கொடுக்கிற சம்பளத்தை டிவியில் கொடுத்து இருந்தால் அங்கே இருந்து இருப்பேன் என வேடிக்கையாக சொல்வேன். டிவியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் சினிமாவுக்கு போனேன் என்றார். என் பெஸ்ட் மெமரியாக டிவி இருக்கிறது. சேயோன் படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகிறது. படம் நல்லா வந்து இருக்கிறது. அதை குடும்பத்துடன் பார்க்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !