பிளாஷ்பேக் : பாடல் ரகசியம் உடைத்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
எஸ்பி பாலசுப்பிரமணியம் நாயகனாக அறிமுகமான படம் 'கேளடி கண்மணி'. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராதிகா நடித்திருந்தார் அவரது மகளாக அஞ்சு நடித்திருந்தார். கே பாலச்சந்திரன் உதவியாளராக இருந்த வசந்த் இயக்கிய முதல் படம்.
நடுத்தர வயதை தாண்டியவர்களுக்கு இடையிலான காதல், அதன் உடன் மரணத்தை எதிர்கொள்ளும் மகள். இதன் பின்னணியில் தான் இந்த படம் நகரும். மனைவியை இழந்த எஸ்பி பாலசுப்ரமணியம் ராதிகாவை காதலித்து திருமணம் செய்ய விரும்புவார். ஆனால் அதற்கு அவரது மகள் அஞ்சு எதிர்ப்பு தெரிவிப்பார். பின்நாளில் இவர்களின் காதலை உணரும் அஞ்சு, ராதிகாவை தேடி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் சேர்த்து வைப்பது தான் கதை.
இந்த படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அறிமுகமாகும் போது 'என்னை பாடகராக மட்டும் நடிக்க வைத்து விடாதே அதைத்தான் தினந்தோறும் செய்து கொண்டிருக்கிறேன்' என்று வசந்திடம் நிபந்தனை விதித்தார். ஆனால் பாலு என்னும் சிறந்த பாடகர் ஹீரோவாக நடிக்கும் போது அதில் அவர் பாடிய பாடல் இல்லாமல் இருந்தால் எப்படி என்று பிறர் வற்புறுத்த, அதற்காக வசந்த் யோசித்ததுதான் 'மண்ணில் இந்தக் காதல் அன்றி' என்ற பாடல்.
'மூச்சு விடாமல் இதைப் பாட வேண்டும்' என்ற ஐடியாவை வசந்த், பாலுவிடம் தெரிவிக்க 'சரி... நான் பாடுறேன்... அதற்கப்புறம் யாரை வெச்சு படத்தை முடிப்பீங்க... ஐந்து நிமிஷத்திற்கு மேல மூச்சு விடாம பாடினா ஒருத்தன் செத்துடுவான்யா' என்று தன் பாணியில் செல்லமாக கேட்டிருக்கிறார் பாலு. என்றாலும் அந்தப் பாடலை மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடி முடித்து விட்டார்.
இன்றைக்கும் இனிமையாக ஒலிக்கிற மெலடி அது. இன்றைக்கு மேடை பாடகர்கள் பலரும் அந்த பாடலை பாடுவது ஒரு சாதனையாக கருதிக் கொண்டு பாடுகிறார்கள்.
ஆனால் உண்மையில் இந்த பாடலை மூச்சு விட்டுத்தான் பாடியிருந்தார் எஸ்பி பாலசுப்ரமணியம். இது குறித்து பின்னாளில் அவர் பேசும்போது ‛‛மண்ணில் இந்த காதல் என்ற பாடல் நான் மூச்சு விட்டு தான் பாடினேன் மூச்சை வெளியே விடும்போது ஒரு வரியையும், உள்ளே இழுக்கும்போது ஒரு வரியையும் சேர்த்து பாடினேன். சற்று கடினமானது தான் ஆனாலும் அதை பாடி முடித்தேன். ஆனால் தற்போது மேடைகளில் பல பாடகர்கள் அதனை நிஜமாகவே மூச்சு விடாமல் பாடுகிறார்கள் அதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது எனவே என்னை விட அவர்களை சிறந்த பாடகர்கள்'' என்றார்.