பிளாஷ்பேக் : 65 ஆண்டுகளுக்கு முன்பே அண்டர் வாட்டர் சண்டை காட்சி
மக்கள் திலகம் எம்ஜிஆரின் 50-வது படம் 'நல்லவன் வாழ்வான்'. பாண்டுரங்கன் எழுதிய கதைக்கு அண்ணாதுரை திரைக்கதை எழுதினார். எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனரான நீலகண்டன் தயாரித்து, இயக்கினார்.
பெண் பித்தரான வில்லன் எம்.ஆர்.ராதா எம்ஜிஆர் மீது கொலை பழி சுமத்தி சிறைக்கு அனுப்புகிறார். சிறை தண்டனை பெற்ற எம்ஜிஆர் சிறையில் இருந்து தப்பி போலீஸ் அதிகாரி நம்பியாருடன் இணைந்து உண்மையான குற்றவாளி கண்டுபிடித்து சிறைக்கு அனுப்புவது தான் படத்தின் கதை.
இதில் கொடூரமான வில்லனாக எம்ஆர் ராதா நடித்தார். வில்லனாக நடித்து வந்த எம்.என்.நம்பியார் இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்தார். எம்ஜிஆர் ஜோடியாக ராஜ சுலோச்சனா நடித்தார். டி.ஆர்.பாப்பா இசையமைத்தார். அனைத்து பாடல்களும் ஹிட்டானது குறிப்பாக வாலி முதன்முறையாக எம்ஜிஆருக்கு பாடல் எழுதியது இந்த படத்தில் தான்.
ஜி.துரை ஒளிப் பதிவு செய்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெற்ற அண்டர் வாட்டர் சண்டை காட்சி பாப்புலரானது. மும்பையில் இருந்து தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வந்து துரை இந்த காட்சியை படமாக்கினார்.
சுவாரஸ்யமான கதை, சிறந்த வசனங்கள் மற்றும் எம்.ஜி.ஆர், ராஜசுலோச்சனா, எம்.என்.நம்பியார், ஈ.வி. சரோஜா ஆகியோரின் சிறப்பான நடிப்பு இருந்தபோதிலும், இப்படம் திரையரங்குகளில் 80 நாட்கள் மட்டுமே ஓடியது. அக்காலகட்டத்தில் ஒரு எம்.ஜி.ஆர் படத்தைப் பொறுத்தவரை, இது வெற்றியாகக் கருதப்படவில்லை.