உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா மாறிவிட்டது இப்ப கட்டிங் இல்லை : சங்க நிர்வாகிகள் புகழாரம்

சினிமா மாறிவிட்டது இப்ப கட்டிங் இல்லை : சங்க நிர்வாகிகள் புகழாரம்

சென்னையில் நேற்று நடந்த சினிமா நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் பேசிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன், ‛‛தமிழ் சினிமாவில் பல சங்கங்களுக்கு சொந்தமாக கட்டடம் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு இல்லை, அரசு நிலம் கொடுத்தால் அதை கட்டிக்கொள்வோம். அதேப்போல 10 ஆண்டுகளாக சிறுபட்ஜெட் படங்களுக்கு மானியம் வழங்கப்படுவது இல்லை. அதை வழங்க வேண்டும் என்றார்.

நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகி டி.சிவா பேசுகையில், ‛‛முன்பெல்லாம் பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்தினால், டிராபிக் போலீஸ், ரோந்து வாகனத்துக்கு கட்டிங் கொடுக்க வேண்டும். பலர் பஞ்சாயத்து பண்ணுவார்கள். இப்போது நான் படப்பிடிப்பில் இருந்து வருகிறேன். யாரும் கட்டிங் கேட்கவில்லை. லோக்கல் தவெக எம்எல்ஏ ஸ்பாட்டுக்கு வந்து யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம். எதாவது உதவி என்றால் என்னை கேளுங்கள் என்கிறார். சினிமா மாறிவிட்டது என்றார்.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ‛‛ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி அளவுக்கு சினிமா பிஸினஸ் இருக்கிறது. அதில் 500 கோடி வரை ஜிஎஸ்டி கட்டுகிறோம். அதில் சில கோடிகளை தான் அரசு மானியமாக தருகிறது. இத்தனை ஆண்டுககளில் பெப்சி தொழிலாளர்களுக்கு நிலம் மட்டுமே அரசு கொடுத்துள்ளது'' என்றார்.

கடைசியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ‛‛நான் யுடியூபபராக, தொகுப்பாளராக பல சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கிறேன். உட்கார இடம் இல்லாமல் தவித்து இருக்கிறேன். இன்று இந்த துறைக்கு என்னை அமைச்சர் ஆக்கியிருக்கிறார் முதல்வர். அவர் அனுமதியுடன் பல திட்டங்களை செய்ய உள்ளோம். விரைவில் மானியம் வழங்கப்படும். அதை முதல்வர் சொல்லிவிட்டார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !