உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான்கே நாட்களில் காணாமல் 6 மணி காட்சிகள்

நான்கே நாட்களில் காணாமல் 6 மணி காட்சிகள்

தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக புதிய படங்களுக்கான அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்க அரசு மறுத்து வந்தது. 2023ல் 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியின் போது சென்னை கோயம்பேட்டில் ஒரு ரசிகர் லாரி மீதிருந்து விழுந்து மரணமடைந்தார். அதற்குப் பிறகு நீதிமன்ற வழக்குகள் வந்ததால் அப்போதைய அரசு காலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுத்தது.

அதே சமயம் முதல் காட்சியை படம் வெளியாகும் நாளில் மட்டும் காலை 9 மணிக்கு நடத்திக் கொள்ள சிறப்பு அனுமதி ஆணை வழங்கப்பட்டது. விஜய் தலைமையிலான அரசு மே மாதம் பதவியேற்றதும் முந்தைய அரசு செய்ததையே தொடர்ந்தது.

இந்நிலையில் திரையுலகினரின் கோரிக்கையை அடுத்து மீண்டும் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு மட்டுமல்ல ஒரு வாரம் நடத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்த படங்களுக்கான காலை 6 மணி சிறப்புக் காட்சிகள் நடைபெற்றது.

படம் வெளியான நாளில் மட்டுமே இதற்கு வரவேற்பு இருந்தது. அதுவும் சூர்யா நடித்து வெளிவந்த 'சீன்' படத்தை மட்டும்தான் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்தார்கள். மற்ற படங்களான 'மூக்குத்தி அம்மன் 2, ராமாயணா' ஆகிய படங்களுக்கு அந்த சிறப்புக் காட்சிகளுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஓரிரு தியேட்டர்களில் மட்டும் அக்காட்சிகள் நடந்தன.

இன்றும் அரசு விடுமுறை தினம் என்பதால் சில தியேட்டர்களில் காலை 6 மணி காட்சிகள் நடந்தன. நேற்று தீபாவளி தினத்திலும் மிகக் குறைவான தியேட்டர்களில்தான் காலை 6 மணி காட்சிகள் ஹவுஸ்புல் ஆகின.

ஒரு வாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நான்கே நாட்களில் இந்த 6 மணி சிறப்பு காட்சிகள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. நாளை முதல் 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவைப் பார்க்கவே முடியவில்லை. ஓரிரு தியேட்டர்களில் 9 மணிக்குக் காட்சிகளை ஆரம்பிக்கிறார்கள். அவற்றிற்கான முன்பதிவும் மிகவும் குறைவாகவே உள்ளது.

டாப் நடிகர்களின் படங்களுக்கு மட்டும், அதுவும் சில நாட்களுக்கு மட்டும்தான் இந்த காலை 6 மணி காட்சிகளுக்கான வரவேற்பு இருக்கும் என்பது முதல் வாரத்திலேயே வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

இதன் பின் தனுஷ், மம்முட்டி நடித்து நவம்பர் 20ல் வெளியாக உள்ள 'ஓம்' படத்திற்கு வேண்டுமானால் காலை 6 மணி காட்சிகளுக்கு இதைப் போலவே சில நாட்களுக்கு வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !