பிளாஷ்பேக்: வெற்றிப் படத் தயாரிப்பாளர் கே பாலாஜி தயாரித்து வீழ்ச்சியைக் கண்ட “என் ரத்தத்தின் ரத்தமே”
தமிழ் திரையுலகின் தரமான தயாரிப்பாளர்கள் வரிசையில் தனித்துவமிக்க ஒருவரும், பிறமொழியில் வெற்றி பெற்ற திரைப்படங்களை மட்டுமே தமிழில் மீள் உருவாக்கம் செய்து சாதனை படைத்த தயாரிப்பாளர் என்ற பெருமைக்கும் உரியவர்தான் நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மை கொண்ட திரைக்கலைஞர் கே பாலாஜி. “ஜெமினி ஸ்டூடியோஸ்” தயாரித்த “ஒளவையார்” திரைப்படத்தில் முருக பெருமான் வேடம் தரித்து, வெள்ளித் திரைக்கு அறிமுகமான இவர், ஒரு குணச்சித்திர நடிகராக, வில்லனாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றிருந்ததோடு, பின்னாளில் சிவாஜியை வைத்து 17 திரைப்படங்கள் வரை தயாரிக்கும் வாய்ப்பினையும் பெற்றவராவார்.
எம் ஜி ஆர், சிவாஜிக்குப் பின் அடுத்த தலைமுறை நாயகர்களான ரஜினி மற்றும் கமல்ஹாசனையும் தனது தயாரிப்பில் நடிக்க வைத்து, 1980களில் பல வெற்றித் திரைப்படங்களை தந்திருக்கின்றார். அந்த வரிசையில் திரைக்கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்ற பன்முகம் கொண்ட திரை ஆளுமையாக 80களில் வலம் வந்து கொண்டிருந்த நடிகர் கே பாக்யராஜை வைத்து இவர் தயாரித்த ஒரு திரைப்படம்தான் “என் ரத்தத்தின் ரத்தமே”.
ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் உரிமையை வாங்கி, அவற்றை தமிழில் மறு உருவாக்கம் செய்து, வெற்றித் திரைப்படங்களாக்கும் சாமர்த்தியமிக்க தயாரிப்பாளரான இவர், கே பாக்யராஜை வைத்து தயாரித்த முதல் திரைப்படமான இந்த “என் ரத்தத்தின் ரத்தமே” திரைப்படம், ஹிந்தியில் நடிகர் அனில்கபூர், ஸ்ரீதேவி நடித்து, 1987ல் வெளிவந்த “மிஸ்டர் இந்தியா” என்ற திரைப்படத்தின் மீள் உருவாக்கம் ஆகும். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து, சேகர்கபூர் இயக்கியிருந்த “மிஸ்டர் இந்தியா” திரைப்படம், அந்த ஆண்டில் அதிக வசூலை ஈட்டித் தந்த இரண்டாவது மிகப் பெரிய திரைப்படம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தது.
தமிழில் கே பாலாஜி தயாரிக்க, கே பாக்யராஜ் நடிக்க, கே விஜயன் படத்தை இயக்க என பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த திரைப்படம்தான் இந்த “என் ரத்தத்தின் ரத்தமே” திரைப்படம். படம் வளர்ந்து வந்து கொண்டிருந்தபோதே படத்தின் இயக்குநர் கே விஜயன் மரணிக்க, படத்தை தொடர்ந்து இயக்கித் தந்தவர் அவரது மகனும், இயக்குநருமான சுந்தர் கே விஜயன். சங்கர்-கணேஷ் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் ஹிந்தி நடிகை மீனாட்சி சேஷாத்ரி நாயகியாக தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார். ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுக்கிடையே 1989ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக வந்த இந்தத் திரைப்படம், ரசிகர்களுக்கு மட்டுமின்றி தயாரிப்பாளருக்கும் பெரிய ஏமாற்றத்தைத் தந்து, ஒரு தோல்விப் படமாக பெட்டிக்குள் சுருண்டு கொண்டது. இந்தத் திரைப்படத்தின் தோல்விக்குப் பின் நடிகரும், தயாரிப்பாளருமான கே பாலாஜி தமிழில் படங்களைத் தயாரிப்பதையே முற்றிலும் நிறுத்திக் கொண்டார்.