பள்ளிக்கூடங்களில் விவசாயக் கல்வித் திட்டத்தின் அரசு தூதராக மாறிய மோகன்லால்
நடிகர் மோகன்லால் ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு, சமூகப் பணிகளிலும் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். குறிப்பாக, கேரள அரசு மக்களுக்காக உருவாக்கும் சில நல்ல திட்டங்களுக்கு முன்னின்று அவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியையும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கேரள அரசு கல்வி மற்றும் விவசாயத் துறைகளுடன் இணைந்து செயல்படுத்தும் 'கதிர்' என்கிற திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் மோகன்லால்.
மாணவர்களிடையே விவசாய ஆர்வத்தை வளர்க்கவும், இளம் தலைமுறைக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தைக் கற்பிக்கவும் இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கேரளாவில் உள்ள 500 பள்ளிகளில் இந்த 'கதிர்' கிளப்புகள் தொடங்கப்பட உள்ளன. அடுத்த கல்வி ஆண்டில் மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறதாம். விவசாயத்தில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டும் மாணவர்களுக்கு அதற்கான தனி மதிப்பெண் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.
இந்தத் திட்டத்தில் தன்னைத் தூதுவராக இணைத்துக் கொண்ட மோகன்லால் இது குறித்துக் கூறும்போது, குழந்தைகள் டிஜிட்டல் மற்றும் விர்ச்சுவல் உலகின் திரைகளில் இருந்து வெளிவந்து மண்ணுடன் பழகவும், விவசாயத்தில் ஈடுபடவும் முன்வர வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் இன்று குறைந்தபட்சம் ஒரு விதையாவது நட்டுத் தங்களது பணியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.