அட்லியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்பும் ஷாருக்கான்
சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்கானுக்கு, ஜவான் படத்தின் இயக்குநர் அட்லி, சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், ஷாருக்கானின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள கிங் படத்தின் து மில் ஜாயே பாடலைப் பாராட்டிய அட்லி, எனக்கு வழிகாட்டியாகவும், எனது மிகப்பெரிய உத்வேகமாகவும் திகழ்வதற்கு நன்றி. உங்களுடன் செலவிட்ட காலம் சினிமா பற்றி மட்டுமல்லாமல், வாழ்க்கை மற்றும் எளிமையாக இருப்பது குறித்தும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அட்லியின் வாழ்த்துக்குப் பதிலளித்த ஷாருக்கான், நன்றி என் ஜவான் கேப்டன். நம் படப்பிடிப்பின் சுவாரஸ்யமான நாட்களை நான் மிகவும் நினைவு கூர்கிறேன். விரைவில் மீண்டும் இணைந்து புதிய சாதனைகளைப் படைப்போம். அன்புடன் என பதிவிட்டுள்ளார்.
2023-ல் வெளியான ஜவான் படம், உலகளவில் 1,150 கோடிக்கும் மேல் வசூலித்து ஷாருக்கானின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக சாதனை படைத்தது. இந்தியாவில் அதிக வசூல் செய்த 10 சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.