'ராமாயணா' படத்தில் பாடும் வாய்ப்பைப் பெற்ற மகிழ்ச்சியில் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி
இயக்குனர் சிவாவின் தம்பியும், 'வீரம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவர் படங்களில் நடித்து பிரபலமடைந்ததைவிட, கிட்டத்தட்ட மூன்று திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் செய்து நான்காவதாகத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளின் மூலம் தான் அதிகமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டார். இவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டது பிரபல மலையாளப் பாடகியான அம்ருதா சுரேஷைத்தான். 2010ல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் 2019ல் பிரிந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள 'ராமாயணா' திரைப்படத்தின் மலையாளப் பதிப்பில், தானும் ஒரு பாடலைப் பாடிய மகிழ்ச்சியில் இருக்கிறார் அம்ருதா சுரேஷ்.
இப்படத்தில் ராமர் மற்றும் சீதையின் திருமண நிகழ்வுகளின் பின்னணியில் இடம்பெற்ற 'மனம் போலே' என்கிற பாடலை இவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் தனக்கு கிடைத்தது குறித்து அவர் கூறும்போது, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடுவது என்பது எனது நீண்ட கால கனவு. அதுமட்டுமல்ல, இப்படி ஒரு பிரமாண்ட படத்தின் ஒரு பகுதியாக மாறுவேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த வியப்பில் இருந்து நான் இன்னும் மீளவில்லை என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.