உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 தீபாவளித் திரைப்படங்கள் ஓர் பார்வை…!

2026 தீபாவளித் திரைப்படங்கள் ஓர் பார்வை…!

ஒரு காலத்தில் தீபாவளி என்றாலே ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இருக்கும். இனிப்புகள், புது ஆடைகள், பட்டாசுகள் ஆகியவற்றுடன் புதிய படங்களைப் பார்ப்பதும் தீபாவளியின் கொண்டாட்டத்தில் ஒன்றாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அந்த அளவிற்கு பரபரப்பு இல்லை. புதிய படங்களும் அதிகமாக வருவதில்லை.

2026ம் ஆண்டின் தீபாவளி அதிக போட்டியில்லாமல் இரண்டே இரண்டு நேரடி தமிழ்ப் படங்களுக்கான போட்டியாக மட்டுமே இருக்கிறது. இரண்டு படங்களுமே வெவ்வேறு வகைத் திரைப்படங்கள் என்பதால் அவற்றிற்கான போட்டி என்பதும் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. வெளியாக உள்ள இரண்டு படங்களான 'சீன், மூக்குத்தி அம்மன் 2' ஆகிய இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் இதுவரையில் நிறைவாகவே உள்ளது. அதனால், இரண்டுமே வரவேற்பைப் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீன்

தயாரிப்பு - ழகரம் ஸ்டுடியோஸ், 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ஜித்து மாதவன்
இசை - சுஷின் ஷியாம்
நடிப்பு - சூர்யா, நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ்பிரியன் மற்றும் பலர்
வெளியாகும் தேதி - 6 நவம்பர் 2026
நேரம் - 2 மணி நேரம் 29 நிமிடங்கள்

மலையாளத்தில் தனது முதல் படமான 'ரோமாஞ்சம்' படத்தின் மூலமே அதிக வரவேற்பையும், வசூலையும் பெற்றவர் இயக்குனர் ஜித்து மாதவன். அடுத்து அவரது இயக்கத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளிவந்த 'ஆவேஷம்' படம் மலையாளத்தில் மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களுமே தயாரிப்பு செலவையும் விட மிக அதிகமாக வசூலைக் குவித்தது. அவரது மூன்றாவது படமான 'சீன்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.



தனது வெற்றிக்காகக் கடந்த சில வருடங்களாகப் போராடி வந்த சூர்யா, இந்த 2026ம் வருடத்தில் இதுவரையில் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளார். அவரது நடிப்பில் வெளிவந்த 'கருப்பு' படம் 340 கோடி வசூலையும், 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' 200 கோடிக்கும் அதிகமான வசூலையும் பெற்றது. இந்த ஆண்டில் சூர்யா நடித்து மூன்றாவது படமாக இந்த 'சீன்' படம் வெளியாக உள்ளது. டிரைலரைப் பார்க்கும் போது 'கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்களிலிருந்து, ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று யூகிக்க முடிகிறது. இந்தப் படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியையும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிப் பேசவும்' ஆகிய தமிழ்ப் படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் மலையாள நடிகையான நஸ்ரியா. நடிகர் பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்ட பின்பு நடிப்பதிலிருந்து சில வருடங்கள் விலகினார். மீண்டும் நடிக்க வந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. தமிழில் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் சுவாரசியமாக இருக்கும் எனத் தெரிகிறது.

நகைச்சுவையும், சுவாரசியமும், ஆக்ஷனும் கலந்த ஒரு படமாக இப்படம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு டிரைலர் மூலம் ஏற்பட்டுள்ளது. இளம் ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கப் போகும் ஒரு படமாக இப்படம் இருக்கும் என திரையுலகினர் எதிர்பார்க்கிறார்கள்.

மூக்குத்தி அம்மன் 2

தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - சுந்தர் சி
இசை - ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு - நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய் மற்றும் பலர்
வெளியாகும் தேதி - 6 நவம்பர் 2026
நேரம் - 2 மணி 24 நிமிடங்கள்

நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான 'மூக்குத்தி அம்மன்' படம் 2020ல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. கொரோனா காலகட்டம் என்பதால் அப்படம் ஓடிடியில் வெளியானது. தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் நல்ல வசூலைக் கொடுத்திருக்கும் என அப்போதே திரையுலக வட்டாரங்களில் பேச்சு இருந்தது.



சுமார் ஆறு வருடங்களுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான 'மூக்குத்தி அம்மன் 2' இந்த வாரம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி இந்தப் படத்தை இயக்கவில்லை. திரையுலகில் 30 வருட அனுபவம் கொண்ட அம்மன் சக்தி, பேய் பற்றிய படங்களான 'அரண்மனை' சீரிஸின் 4 பாகப் படங்களை இயக்கிய சுந்தர் சி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அவரது முந்தைய 'அரண்மனை' படங்களை விடவும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும், படத்தின் பிரம்மாண்டமும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனக்கான பெயரைத் தேடிக் கொள்ளும் நடிகை நயன்தாரா, 'மூக்குத்தி அம்மன்' முதல் பாகத்திலேயே அம்மன் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு மிகவும் நிறைவாக இருந்தது. அது இந்த இரண்டாம் பாகத்திலும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தெய்வ சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயான சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை என்பதை டிரைலரைப் பார்த்ததுமே அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

தீய சக்திகளான ரெஜினா கசான்ட்ரா, துனியா விஜய் செய்வதற்கு எதிராக தெய்வ சக்தியான நயன்தாரா என்ன செய்கிறார் என்பது படத்தில் பக்திமயமாக இருக்கப் போகிறது.

இந்த தீபாவளிக்கு பெண்கள் அவர்களது குடும்பத்தினருடன் வந்து பார்க்கக் கூடிய படமாக இப்படம் இருக்கப் போகிறது என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தனது இயக்கத்தில் வரும் படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு இயக்குனராக சுந்தர் சி இருப்பார். அது இந்தப் படத்திலும் தொடரும் என நம்பலாம்.

இராமாயணம் (ராமாயணா) - மொழி மாற்றுத் திரைப்படம்

தயாரிப்பு - பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ், டிஎன்இஜி
இயக்கம் - நிதேஷ் திவாரி
இசை - ஹன்ஸ் ஜிம்மர், ஏஆர் ரகுமான்
நடிப்பு - ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே, லாரா தத்தா, அருண் கோவில் மற்றும் பலர்
வெளியாகும் தேதி - 5 நவம்பர் 2026
நேரம் - 3 மணி 15 நிமிடங்கள்

இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை மையப்படுத்திய எத்தனையோ திரைப்படங்கள் இதற்கு முன்பு வெளிவந்துள்ளன. ஆனால், இதுவரையில் இப்படி ஒரு செலவுடன் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக ஒரு படம் உருவானதில்லை என்று சொல்லப்படும் விதத்தில் ஹிந்தியில் தயாரான ‛ராமாயணா' படம் 'இராமாயணம்' என்ற பெயரில் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.



ஹிந்தியில் 'டங்கல்' படம் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நிதேஷ் திவாரி இப்படத்தை இயக்கியுள்ளார். உலக அளவில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படமாக 'டங்கல்' படம் உள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. கடந்த 10 வருடங்களாக அந்த சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. அந்த சாதனையை இந்த 'இராமாயணம்' முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'அனிமல்' படம் 900 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. கடந்த மூன்று வருடங்களாக 'இராமாயணம்' படத்தில் மட்டுமே மிகுந்த நம்பிக்கையுடன் தனது திரையுலகப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் ரன்பீர் கபூர்.

தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவி இந்தப் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வானது பலருக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகளைப் பார்த்த பலரும் சீதை கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமான தேர்வாக உள்ளார் என்பது சாய் பல்லவியின் ஈடுபாட்டான நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுக்களாக அமைந்துள்ளது.

கன்னடப் படங்களான 'கேஜிஎப் 1, 2' மூலம் இந்தியத் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய யஷ் இந்தப் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'டாக்சிக்' படம் மூலம் இழந்த தனது இமேஜை இந்தப் படத்தில் அவர் மீட்டெடுப்பார் என்று நம்புகிறார்கள்.

உலக அளவில் இந்தப் படத்தைக் கொண்டு போய் சேர்க்கும் வேலைகளை படக்குழு ஏற்கெனவே செய்துள்ளது. இரண்டு பாகங்களையும் சேர்த்து மொத்தமாக 4000 கோடி பட்ஜெட் என்கிறார்கள். இந்த முதல் பாகம் இந்தியத் திரையுலகத்தின் புதிய உச்சத்தைக் காட்டும் என்ற நம்பிக்கை திரையுலகினருக்கும் உள்ளது.

இந்த தீபாவளிக்கு வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்களான 'சீன், மூக்குத்தி அம்மன் 2' ஆகிய படங்களுடன் இந்த டப்பிங் படமும் நல்ல வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

2026ம் வருட தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த மூன்று படங்களுமே சினிமா ரசிகர்களுக்கான கொண்டாட்டத்தைக் கூடுதலாக ஏற்படுத்தித் தரும் என நம்பலாம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !