ஏ.ஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு : உள்துறை அமைச்சரிடம் சிரஞ்சீவி, ராம்சரண் கோரிக்கை
சமீபகாலமாகவே செயற்கை நுண்ணறிவு என்கிற ஏ.ஐ. (AI) தொழில்நுட்பம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் பிரபலங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தவறாகப் பயன்படுத்தி மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி, அவர்களது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இது குறித்து அவ்வப்போது பிரபலங்கள் பலரும் எதிர்ப்புக் குரல் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நடிகர் சிரஞ்சீவியும், அவரது மகன் நடிகர் ராம்சரணும் சேர்ந்து நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அவரிடம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டைத் தடுக்கக் கோரி முறையிட்டுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டியும் உடன் இருந்தார்.
கலைஞர்களை பாதிக்கும் இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலிக்கும் என்றும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டைத் தடுத்து கடுமையான சட்டப் பாதுகாப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய அமித்ஷா, உடன் இருந்த அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் இது குறித்த பொறுப்பை வழங்கியுள்ளதாக நடிகர் சிரஞ்சீவியும் ராம்சரணும் தெரிவித்துள்ளனர்.