ஆர்ஆர்ஆர் படத்தை விட 5 முதல் 6 மடங்கு பிரம்மாண்டமானது வாரணாசி என்கிறார் ராஜமவுலி!
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி சமீபத்தில், மோஸ்ட்ரா டி சாவோ பாவ்லோ என்று அழைக்கப்படும் 50-வது சாவோ பாவ்லோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். பிரேசில் நாட்டிற்கு அவர் சென்றது இதுவே முதல் முறையாகும். அங்குப் பார்வையாளர்களுடன் உரையாடிய போது, மகேஷ் பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் வாரணாசி படம், தனது வரலாற்றுப் காவியமான ஆர்ஆர்ஆர் படத்தை விட 5 முதல் 6 மடங்கு பெரிய அளவில் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், வாரணாசி படத்தின் படப்பிடிப்பு குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
வாரணாசி படத்திற்காக நான் அதிக திட்டமிடுதல்களை செய்து, முழுமையான ஆயத்தத்துடன் படப்பிடிப்பிற்குச் சென்றேன். நாங்கள் ஆர்ஆர்ஆர் படத்தை 315 நாட்களில் படமாக்கினோம். ஆனால் வாரணாசி படம் அதைவிடப் பெரியதாக இருந்தபோதிலும், 275 நாட்களில் படமாக்கி 40 நாட்களைச் சேமித்துள்ளோம் என்று கூறினார் ராஜமவுலி.
வாரணாசி படத்தைப் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய ராஜமவுலி, பிரேசிலில், ஆர்ஆர்ஆர் படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானதைப் போல இல்லாமல், இந்த வாரணாசி படத்தை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று அதற்கான பணிகளில் தான் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்துளளார். கே.எல்.நாராயணாவின் துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில், பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.