3000 மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்த தனுஷ் : வெள்ளி விளக்கு பரிசு
நடிகர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடிகர்கள் பலருக்கும் அரசியல் ஆசை இன்னும் துளிர் விட்டுள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ். சமீபத்திய அவரது ஒவ்வொரு நிகழ்வுகளும் அரசியல் கட்டத்தை நோக்கியே பயணிப்பது தெரிகிறது. அவரது ரசிகர் மன்றம் இப்போது நற்பணி இயக்கமாக மாறிவிட்டது. விரைவில் அரசியல் கட்சியாக மாறப்போகிறது என தகவல்கள் தொடர்ந்து வருகின்றன.
சில வாரங்களாக இதற்கான பணிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேகம் எடுத்து வருகின்றன. சில தினங்களுக்கு முன் தனுஷ் டில்லி சென்று வந்ததாக கூட செய்திகள் பரவின. இந்நிலையில் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று(அக்., 25) தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நந்தது. இதில் தமிழ்நாடு முழுக்க உள்ள 3000க்கும் அதிகமான பெண் ரசிகைகள், மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் மழை உள்ளிட்ட காரணங்களால் மதியத்திற்கு மேல் தான் துவங்கியது. முன்னதாக வந்திருந்த பெண்களுக்கு கமகம பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. பின்னர் தனுஷ், பெண் நிர்வாகிகளை சந்தித்தார். ஒரு சில நிமிடங்கள் மட்டும் பேசி உள்ளார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்தார். அனைவருக்கும் வெள்ளியில் காமாட்சி விளக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூறியதாவது : எங்கள் எல்லாருக்கும் பரிசாக விளக்கை கொடுத்தார் தனுஷ். இதை நாங்கள் தினமும் ஏற்றுவோம். பெண்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும், பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்'' என்றார்.