சாய் பாதானந்தா வாழ்க்கை சினிமாவாகிறது : ஸ்ரீராதா கிருஷ்ணஸ்வாமி யார் தெரியுமா?
திருச்சி அருகே உள்ள பொய்யாமணி கிராமத்தில் பிறந்து, மும்பை, ஊட்டியில் வாழ்ந்தவர் ராதா கிருஷ்ணன். ஊட்டியில் தனது குருவான நரசிம்மசாமியை சந்திக்க, அவர் வாழ்க்கை மாறியது. ஷீரடி சாய்பாபா சீடர் நரசிம்மசாமி. பவானியில் பிறந்த இவர் பிரபல வக்கீல், ஒரு சூழ்நிலையில் தனது 2 குழந்தைகள் இறக்க, துறவறம் பூண்டு சாய்பாபா சிஷ்யர் ஆனார். சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயில், அகில இந்திய சாய் சமாஜயத்தை நிறுவியவர். இவர் சமாதி மயிலாப்பூரில் உள்ளது.
இவரின் சீடர் ஆன ராதாகிருஷ்ணன், பிற்காலத்தில் சாய் பாதானந்தா என அழைக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள சாய் ஸ்ப்ரிசுவல் சென்டரை நிறுவி, சாய் சேவை செய்தார். சென்னை சாய் சமாஜம் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார். பல ஆண்டுகள் சாய்பாபா பக்தியை பரப்பினார். 1980ல் காலமானார். இவர் வாழ்க்கையை சாய் பாதானந்தா என்ற பெயரில் சாய் டிரஸ்ட் சார்பில் அவர் சிஷ்யரான கிருஷ்ணகுமார் உருவாக்கி உள்ளார். இந்த படத்தை நித்தியானந்தம் இயக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. சாய் பாதானந்தாவாக ஆனந்தமவுலி நடித்துள்ளார். திருச்சி வாழ்க்கை, ஊட்டி வாழ்க்கை, பெங்களூர், சென்னை வாழ்க்கை என பல பகுதிகளை இந்த படம் காண்பிக்கிறது. விரைவில் ஓடிடி, தியேட்டரில் வருகிறது.
திருச்சி அருகே உள்ள பொய்யாமணி கிராமத்தில் சாய் கோவிலில் படமாக்க முயற்சித்தபோது கடும் மழை, ஆனால் சரியான நேரத்தில் அது நின்றது. படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் பெய்தது. இப்படி படப்பிடிப்பிலும் பல அதிசயங்கள் நடந்தன என்கிறார் இயக்குனர் நித்தியானந்தம். இந்த பட நிகழ்ச்சியில் இயக்குனர் சிறுத்தை சிவா கலந்து கொண்டார். அவர் தீவிர சாய்பாபா பக்தர். இன்றைக்கு வாழ்க்கை வரலாறு உருவாக்குவது கஷ்டமான விஷயம். இந்த படத்தில் சாய் பாதானந்தா சேவை, ஆன்மிக பயணத்தை அருமையாக காண்பித்து இருக்கிறார்கள் என்றார்.