நல்ல கதையில் யாருடனும் நடிக்கலாம் : பெமினா ஜார்ஜ்
சவுதி அரேபியாவில் பிறந்து வளர்ந்த மலையாள பொண்ணு பெமினா ஜார்ஜ். மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். 'மின்னல் முரளி' படத்தில் அறிமுகமாகி, அதன்பிறகு தீப்பொறி பென்னி, சேஷம் மைக் இல் பாத்திமா, கரகம் படத்தில் நடித்தவர் 'ஹெக்கூ' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
'ஹைக்கூ' படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறும்போது “மலையாளத்தில் நடிக்கும் எல்லா நடிகைகளுக்குமே தமிழ் படங்கள் எப்போதும் ஸ்பெஷல்தான். நானும் தமிழ் படத்தில் நடிக்கும் ஆசையில் இருந்தேன். அதற்கான முயற்சிகளும் செய்தேன், சில வாய்ப்புகள் வந்தன நல்ல கதையாக இருந்தால் புரொடக்ஷன் கம்பெனி நம்பிக்கை தருவதாக இல்லை, நல்ல கம்பெனியாக இருந்தால் கதை நன்றாக இல்லை. இப்படி தள்ளிப்போய் கடைசியாக இரண்டும் சரியாக அமைந்த படம்தான் 'ஹைக்கூ'.
'பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஆண் என்பதுதான் படத்தின் ஒன் லைன்' என்றதுமே பயந்து விட்டேன். ஆனால் சில இப்படித்தான் நடக்கும், சிலவற்றை இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வோமே அதுதான் என்று விளக்கம் தந்தார்கள். அதோடு பெண்கள் கல்லூரியில் ஆண் படிப்பதற்கான லாஜிக்கான விஷயமும் படத்தில் இருக்கிறது. இது படத்தின் ஒரு பகுதிதான் வேறொரு களத்திலும் கதை பயணிக்கும்.
படத்தில் நீங்கள் மட்டுமே ஹீரோயின் இல்லை. இன்னொருவர் (ஸ்ரீதேவி அப்பல்லா) இருக்கிறார், என்று முன்பே கூறிவிட்டார்கள். எனக்கு அது பிரச்னை இல்லை. நல்ல கதை என்றால் யாருடனும் நடிக்கலாம் என்பதுதான் எனது கருத்து. இருவருமே அவரவர் கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறோம்.
சிலர் நான் நஸ்ரியா மாதிரி இருப்பதாக சொல்வார்கள். தோற்றத்தில் அவர் மாதிரி இருந்தால் போதாது அவர்போல் சாதிக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொள்வேன். என்றார்.