நீ ஒரு காதல் சிங்கீதம்… சினிமா மொழியின் தெய்வீகம்!
சினிமாவுக்கு மொழி இல்லை என்று சொன்னபடி 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரையுலகில் ஆழமாக தடம் பதித்த சிங்கீதம் சீனிவாச ராவ் தனது 95ம் வயதில் திரைமொழியிலிருந்து விடுபட்டு இறைமொழியில் ஆசுவாசமாகி இருக்கிறார்.
இன்றைக்கு 60 வயதைத் தாண்டி வாழ்கிறவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று ஆகிவிட்ட சூழலில், தனது 95வது வயதில் 'சிங்கீதம்' என்று தனது பெயரிலேயே ஒரு படமும் இயக்கி திரையுலகினரையே திகைக்க வைத்தவர் சிங்கீதம்.
கமலின் 100வது படமான 'ராஜ பார்வை'யை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற சிங்கீதம் அவரை வைத்து 'புஷ்பக்' என்னும் மவுனப்படம் உள்ளிட்ட 10 படங்களை இயக்கியவர் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி.
சினிமா பயணம் எளிதானதல்ல
'ராஜபார்வை' வெளிவந்த ஆண்டு 1981. ஆனால் சீங்கீதத்தின் சினிமா பயணம் துவங்கியது அதற்கும் 30 ஆண்டுகளுக்கு முன்னால். உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி, நாகிரெட்டியின் விஜயா வாகினி ப்ரொடக்ஷன் தயாரிப்பான பாதாள பைரவி (1951) படம் மூலம் பெரும் புகழ் பெற்று விட்ட இயக்குனர் ஜாம்பவான் கே.வி.ரெட்டியை சந்திப்பதற்கே சிங்கீதம் நடையாய் நடந்திருக்கிறார். இறுதியில் ஒருநாள், ஒரு ஆங்கில சிறுகதையை சிங்கீதத்திடம் கொடுத்து அதற்கு திரைக்கதை எழுதச் சொல்லி அதன் பிறகே அவரை உதவி இயக்குனராக ஏற்றுக் கொண்டு மாயாபஜார் (1957) படத்தில் பணிபுரிய வாய்ப்பு தந்திருக்கிறார் கே.வி.ரெட்டி.
அடுத்த பல ஆண்டுகள் உதவி இயக்குநராக, படம் இயக்க வாய்ப்பு தேடுபவராக சீங்கீதத்துக்கு சினிமாவில் அவ்வளவு சுலபத்தில் க்ரீன் சிக்னல் கிடைக்கவேயில்லை. அவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்த ஆண்டு 1972. 'நீதி நிஜயாலு' என்ற கன்னடப்படம். அப்படம் சுமாரான கவனிப்பு பெற்றது.
அடுத்து தமிழில் அவர் இயக்கிய முதல் படம் ரொம்ப சீரியஸானது. சுதந்திரா கட்சியின் ஆதரவாளரான சிங்கீதம், ராஜாஜியின் நாவலான 'திக்கற்ற பார்வதி'யை இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் ஒப்பந்தத்துக்காக கையெழுத்திட்டதுதான் ராஜாஜியின் கடைசி கையெழுத்து என்று தகவல். படத்தின் வினியோக உரிமையை வாங்கி, வெளியிட்டவர் எம்.ஜி.ஆர் என்பது பலரும் அறியாத செய்தி. இப்படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. சினிமாவை வெறுக்கும் ராஜாஜி எழுத்தில் வெளிவந்த ஒரே சினிமாவும் 'திக்கற்ற பார்வதி'தான்.
பின்னர் மீண்டும் கன்னடம், தெலுங்கு மொழிகளுக்குத் திரும்பிய சிங்கீதத்தின் திறமையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பறைசாற்றிய படம் 'மயூரி'. விபத்தில் கால் ஊனமுற்ற பரத நாட்டியக் கலைஞரான சுதா சந்திரனின் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் திரைக்கதையாக்கப்பட்ட இப்படம் இன்றைய பான் இந்தியா படங்களுக்கு முன்னோடி என்றே சொல்லலாம். டப்பிங் செய்து வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைத்த இப்படம் சீங்கீதத்தின் புகழை இந்தியா முழுக்க கொண்டுபோய்ச் சேர்த்தது.
ராஜபார்வை
அடுத்து அவருக்கு தொடர்ந்து வெற்றி மேல் வெற்றிதான். 72ல் தொடங்கி 2026ல் முடித்துக்கொண்ட அவரது சினிமா பயணத்தில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் 60 படங்கள் வரை இயக்கியிருந்தாலும் அவரது ஸ்பெஷல் காம்போ என்பது நம்மவர் கமலுடன் அமைந்த படங்கள்தான்.
கமலை 1970 வாக்கில் நடந்த பம்பாய் பிலிம்பேர் விழாவில் முதன்முதலில் சந்தித்ததாக நினவுகூர்கிறார் சிங்கீதம். அந்த சந்திப்பில் உலக சினிமாக்கள் குறித்து பேசத்துவங்கி அது நட்பாக மாறி முதன் முதலில் இருவரும் இணைந்தது 'சொம்மாக்காதிது சொக்கக்காதிது' என்கிற தெலுங்குப் படத்தில். கமலுக்கு இரட்டை வேடம். ஜெயசுதா, ரோஜா ரமணி என்று இரு இளமை ததும்பி வழிந்த கதாநாயகிகள். தமிழில் 'இரு நிலவுகள்' என்ற பெயரில் டப் ஆகி இரு மொழிகளிலும் சுமாராகப் போன படம்.
ஆனாலும் சிங்கீதத்தின் மேல் சிறிதும் நம்பிக்கை இழக்காமல் தனது 100 வது படமான 'ராஜபார்வை'யையும் அவரிடமே ஒப்படைத்தார் கமல். ஆனால் ராஜபார்வையுமே வசூல் ரீதியாக தோல்விப்படமே என்றாலும் 'ஆபரேஷன் பெயிலியர் பட் நோயாளி எஸ்கேப்' என்கிற கதையாக விமர்சன ரீதியாக இந்தக் கூட்டணிக்கு நல்ல பெயர் கிடைத்தது. அப்படி நோயாளி எஸ்கேப் ஆகக் காரணமாயிருந்தவர் படத்தின் இன்னொரு டாக்டராக அமைந்திருந்த இளையராஜா.
அடுத்து இதே கூட்டணி தொடர்ந்த மவுனப்படமான 'புஷ்பக்' ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்தது. இதன் பின்னர் அவரது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட கமல் 'மைக்கேல் மதன காமராஜன்', 'அபூர்வ சகோதரர்கள்', 'மகளிர் மட்டும்', 'காதலா காதலா', 'மும்பை எக்ஸ்ப்ரஸ்' என்று சிங்கீதம் எக்ஸ்பிரஸ் வண்டியை விட்டு வழியில் இறங்காமல் பயணம் செய்தார்.
சமீபத்தில் கூட தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பாக ஒரு விழா எடுத்து சிங்கீதத்தை கவுரவித்த கமல் தங்களது சினிமா பயண அனுபவங்களை சிலிர்ப்புடன் பகிர்ந்து கொண்டு, 'எங்கள் பயணம் இனியும் தொடரும்' என்று அறிவித்தார்.
ஆனாலும் கமலின் வார்த்தைகளை மீறி, பயணக் களைப்பு காரணமாக சிங்கீதம் தனது ஸ்டேஷன் வந்ததும் இறங்கிக் கொண்டார் போல.