ப்ளாக்
தயாரிப்பு: வைரப்பிரகாஷ்
இயக்கம்: எஸ்.பி.பொன்சங்கர்
நடிப்பு: தீஹான், மிக்கி மக்கிஜா, அமீர்மாலிக், கார்த்திக், கிரி, பப்புஷா
ஒளிப்பதிவு: எஸ்.பி.பி
இசை: ராஜா ரவிவர்மா, பாலசுப்ரமணியம்
வெளியான தேதி: நவம்பர் 13, 2026
நேரம்: 2 மணி 10 நிமிடங்கள்
ரேட்டிங்: 2.5 / 5
கர்நாடக மாநிலம் ஹூப்ளில் உள்ள பெங்கெரி பகுதியில் உள்ள கர்நாடகா காதி கிராமோத்யோக்கில்தான் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் பணியாற்றும் தாத்தா மிக்கிமக்கிஜாவிடம் சூழ்நிலை காரணமாக வருகிறான் பேரன் தீஹான். தாங்கள் தயாரிக்கும் தேசிய கொடியை டில்லியில் மரியாதையுடன் ஏற்றப்படுவதை தாத்தா பார்க்க விரும்புகிறார். அவர் உடல் காரணமாக அது முடியவில்லை. தாத்தா ஆசையை நிறைவேற்ற கொஞ்சம் பணத்துடன், தனியாளாக டில்லி இந்தியா கேட் பகுதியை பார்க்க ரயிலில் புறப்படுகிறான் பேரன் தீஹான்.
ஆனால் டில்லிக்கு போவதுக்கு பதிலாக தவறான வழிகாட்டுதல், தவறான புரிதலால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர் என பல்வேறு மாநிலங்களுக்கு செல்கிறான். அந்த சமயத்தில் டில்லியில் பயங்கரவாத செயல்களை நிறைவேற்ற ஒரு குரூப் திட்டமிடுகிறது. சில காரணங்களுக்காக அந்த சிறுவனை பயங்கரவாதிகள், உளவுதுறையினர் தேடுகிறார்கள். பயங்கரவாத செயல் முறியடிக்கப்பட்டதா? கடைசியில் டில்லியில் தேசிய கொடி ஏற்றப்படுவதை சிறுவன் பார்த்தானா? இதுதான் 'ப்ளாக்' கதை.
தேசிக்கொடி பின்ணணியில், நாட்டின் மாறுப்பட்ட கலாசாரம், பல்வேறு மாநில மக்களின் பின்னணியில் தேசப்பற்றை விவரிக்கும் படம் என சுருக்கமாக சொல்லலாம். பேரனாக நடித்த தீஹான் ('இட்லிகடை' படத்தில் குட்டி தனுஷ் ஆக நடித்த பையன்)தான் கதை நாயகன். தாத்தா ஆசைக்காக தப்பான ரயில் ஏறி ஒவ்வொரு மாநிலத்திலும் தவிப்பதும், அங்கே உள்ள நல்லவர்கள் அவனுக்கு உதவுவதும், சிலர் ஏமாற்றுவதும் என கதை நகர்கிறது. ஒரு தவறான கும்பல் பிடியில் சிக்கி தவிக்கும் சிறுமி பப்புஷாவும் ஒரு கட்டத்தில் தீஹானுடன் சேர்ந்து மாநிலம், மாநிலமாக சுற்றுகிறார். அண்ணன், தங்கை மாதிரி இருவரும் பழகுகிறார்கள். அந்த சிறுமிக்கு என்ன ஆகிறது என்பது தனிக்கதை.
இந்தியாவின் முக்கியமான பகுதிகளை உள்ளடக்கிய இந்த தேசப்பக்தி கதையை இயக்கிய எஸ்.பி.பொன்சங்கரே படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட. அதனால், தேசத்தில் மிக முக்கியமான படங்கள், வரலாற்று சின்னங்கள், புவியியல் அமைப்புகளை அழகாக பதிவு செய்து இருக்கிறார். அதுதான் படத்தின் பெரிய பிளஸ். தாஜ்மஹால், படேல் சிலை, ஜடாயு சிலை, திருவள்ளுவர் சிலை, ராமானுஜர் பிரமாண்ட சிலை என நாட்டின் பாரம்பரிய இடங்கள், நினைவு சின்னங்கள் சுற்றியுள்ள இடங்களில் கதை நடப்பது போல சீன்கள் அமைத்தது இன்னும் புத்திசாலிதனம். ஒரே படத்தில் இந்தியாவை சுற்றி பார்த்த உணர்வு ஏற்படுகிறது.
சிறுவன் தீஹானின் துறுதுறு நடிப்பு, நக்கல் கலந்த பேச்சு, அவ்வப்போது கேட்கும் கேள்விகள், அப்பாவித்தனம் இதெல்லாம் படத்தின் பிளஸ். சிறுவனுக்கு பல விருதுகள் கிடைக்கலாம். ரயில் மாறி பாலக்காட்டில் இறங்குவது, பின்னர், டில்லிக்கு பதில் மும்பை செல்வது, டில்லியில் உள்ள இந்தியா கேட்டையும், மும்பையில் உள்ள கேட் வே ஆப் இந்தியாவையும் பிரித்து பார்க்க தெரியாமல், தானும் குழப்பி, மற்றவர்களையும் குழப்பும் இடங்கள் பிரமாதம். குறிப்பாக, மும்பையில் கேட் வே ஆப் இந்தியாவை பார்த்து ஏதோ வேலை நடக்குது போல கமென்ட் அடிப்பதும், சிறுமிக்கு உதவுவதும், கடைசியில் உளவுத்துறையினர் விசாரணையில் கோபத்தில் பொங்குவதும் சிறப்பான இடங்கள். சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் மாதிரி தெரிந்தாலும், கதைக்கு தீஹான் நடிப்பு பெரிய பிளஸ்.
தவறான கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சிறுமியாக வரும் பப்புஷா நடிப்பும், அவரின் அன்பும் அட போட வைக்கிறது. வில்லன்களாக சிலர் வருகிறார்கள். விஜயகாந்த் படத்தில் வரும் பயங்கரவாதிகளை போல அவர்களை சித்தரித்து இருக்கிறார் இயக்குனர். அவர்கள் நடிப்பில் செயற்கை தனம் அதிகம். அதேபோல் பட்ஜெட் காரணமாக ஒரு சின்ன அறையில் அமர்ந்து உளவுதுறை அதிகாரிகள் பேசுவது, சிறுவனை, பயங்கரவாதிகளை தேடுவது சினிமாதனம். அதை இன்னும் சீரியஸ் ஆக சொல்லியிருக்கலாம்.
சில சீன்களில் வந்தாலும் தாத்தாவாக வரும் இந்தி நடிகர் மிக்கி மக்கிஜா தேர்ந்த நடிப்பை தந்து இருக்கிறார். நல்லவராக வரும் லாரி டிரைவர், புல்லாங்குழல் விற்கும் வில்லன், பப்புஷா உறவினர், சரியான நேரத்தில் வந்து உதவும் மிலிட்டரி ஆபிசர் என படம் முழுக்க புதுப்புது கேரக்டர் அறிமுகமாகி கதையை நகர்த்துகிறார்கள். யார் நல்லவர், யார் கெட்டவர்கள் என்ற டுவிஸ்ட் ரசிக்க வைக்கிறது. இசையில் இன்னும் கவனம் செ லுத்தியிருக்கலாம்.
தேசிய கொடி, தேசிய சிந்தனை சம்பந்தப்பட்ட இடங்கள் தேசப்பக்தியை உணர்த்து இருக்கிறது. இந்தியாவில் ஏகப்பட்ட மொழிகள், அனைத்தையும் நான் கற்க ஆசைப்படுகிறேன் என சிறுவன் சொல்வது மெய்சிலிர்க்க வைக்கிறது. டில்லியில் தேசிய கொடி ஏற்றுவதை சிறுவன் பார்க்க ஆசைப்படுவதே கதை. அதை இன்னும் விரிவாக, அழுத்தமாக, உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கலாம். அதை கிராபிக்ஸ் பயன்படுத்தி காண்பித்து இருப்பது சற்றே ஏமாற்றம். சின்ன பட்ஜெட் படம் என்பது பல இடங்களில் தெரிகிறது. டில்லி போக நினைக்கும் சம்பந்தம் இல்லாமல் காஷ்மீர் வரை சுற்றுகிறான். அதை இன்னும் நேர்த்தியாக, கதையுடன் பூகோள ரீதியாக தொடர்பு படுத்தி சொல்லியிருந்தால் படம் இன்னும் பேசப்பட்டு இருக்கும். இப்படி செல்லாமல் இந்த சிறுவன் இங்கே ஏன் சுற்றுகிறான் என கேள்வி வருகிறது. சில இடங்களில் ஆவணப்பட சாயல் வருவதை தவிர்த்து இருக்கலாம்.
ஆனாலும், தேசிய கொடி பின்னணியில் தேசிய சிந்தனையை, நம் கலாசாரம், பண்பாட்டை காதல், மோதல், ஆக் ஷன், ஹீரோயிசம் என வழக்கமான பில்டப் இல்லாமல், நாட்டுப்பற்றை வளர்க்கும் கதையை சொன்னதற்காக படக்குழுவை பாராட்டலாம். குழந்தை நட்சத்திரம் ஹீரோ என்பதால் குழந்தைகளுடன் சேர்ந்து தாரளமாக பார்க்கலாம்.
ப்ளாக் - தேசிய கொடி பின்னணியில் ஒரு தேசப்பக்தி படம்