உள்ளூர் செய்திகள்

சீன்

தயாரிப்பு : ழகரம் ஸ்டூடியோஸ்
இயக்கம் : ஜீத்து மாதவன்
நடிப்பு : சூர்யா, நஸ்ரியா, ஆனந்த்ராஜ், நஸ்லன், லால்
ஒளிப்பதிவு : வினித் அகஸ்டியன்
இசை : சுஷின் ஷ்யாம்
வெளியான தேதி : நவம்பர் 6, 2026
நேரம் : 2 மணிநேரம் 29 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

திறமையான போலீஸ் ஆபீசரான சூர்யா, ஒரு சைக்கோ கில்லரின் தொடர் கொலைகள் பற்றி துப்பறிந்து கொலைகாரனை சிறையில் அடைக்கிறார். மீண்டும் அதே பாணியில் சில கொலைகள் நடக்க, அதை செய்வது யார் என சூர்யா மீண்டும் விசாரணை ஆரம்பிக்கிறார். ஆனால் இந்த முறை அவர் போலீஸ் ஆபீசரும் இல்லை. கண்பார்வை அற்றவரும் கூட. இப்படிப்பட்ட சூழலில் அந்த வழக்கில் சக்சஸ் ஆனாரா? அந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளியை எப்படி சூர்யா பிடிக்கிறார் என்பது சீன் படத்தின் கதை.

மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆவேசம் படத்தை இயக்கிய ஜீத்து மாதவனின் திரில்லர் கலந்த இன்வெஸ்டிகேசன் படம் சீன். வழக்கமான கிரைம் திரில்லராக இல்லாமல், கண் பார்வையற்ற அதுவும் வேலையை ராஜினாமா செய்த ஒரு போலீஸ் ஆபீஸர் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்ற புது கோணத்தில் காமெடி கலந்து கமர்ஷியலாக கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர். கண் பார்வையற்ற சூர்யாவுக்கு 'கண்' மாதிரி உதவி செய்கிறார் நஸ்ரியா. ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்ட சூர்யா அப்பா ஆனந்த்ராஜ், குடிகாரியான அவர் அம்மாவும் ஒரு கட்டத்தில் சூர்யாவுக்கு உதவுகிறார்கள், வில்லன் நஸ்லன் டீமில் ஒரு ஆட்டோகாரர், ஒரு பெண் என கதை நகர்கிறது.

சூர்யாவின் கெட்-அப், அந்த கோபம், வேகம் படத்துக்கு பிளஸ். கண் பார்வையற்றவராக வந்தாலும் வழக்கமான சினிமா பாணியில் அவரை கருப்பு கண்ணாடி, கையில் ஸ்டிக் என இயக்குனர் காண்பிக்கவில்லை. அவர் கேரக்டரை வைத்து அனுதாபம் தேடவில்லை. அவரை ஸ்மார்ட் ஹீரோவாக காண்பிக்கிறார். தனக்கு கண்பார்வை கிடையாது என்பதை மறைத்து சூர்யா வெளியிடத்தில் நடந்து கொள்ளும் விதம், துப்பறியும் பாணி நல்ல திரைக்கதை யுக்தி. குறிப்பாக, நஸ்ரியா, சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகலப்பு. கிளைமாக்சில் தனது வீட்டில் வில்லன் நஸ்லனுடன் அவர் போடும் சண்டை செம. வழக்கமான காதல் காட்சி, பில்டப் இல்லாமல் கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர் நடித்து இருப்பது சிறப்பு.

12 ஆண்டுகளுக்குபின் தமிழில் நடித்து இருக்கிறார் நஸ்ரியா. அவரை சூர்யா இன்டர்வியூ செய்யும் விதத்தில் தொடங்கி கிளைமாக்ஸ் வரை, சின்ன, சின்ன வசனம், எக்ஸ்பிரசனில் கலக்குகிறார். அந்த கியூட்னஸ், ஒருவித தெனாவட்டு பாடிலாங்குவேஜ் படத்துக்கு பெரிய பிளஸ். மலையாள நடிகரான நஸ்லன் வில்லன் என முதல்காட்சியில் சொல்லிவிடுகிறார் இயக்குனர். ஆனாலும், அவரின் புத்திசாலிதனமான மூவ், மலையாளம் கலந்து பேசும் டயலாக், சூர்யாவை வீழ்த்த அவர் போடுகிற பிளான் கதையை ஸ்பீடு ஆக்குகிறது. அவரின் நடை, உடை நடிப்பு வில்லனாக மட்டுமல்ல, இன்னொரு ஹீரோவாக பார்க்க வைக்கிறது. ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிற லால் காமெடி கலந்து நடித்து இருக்கிறார்.

ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டவராக, சூர்யா அப்பாவாக வரும் ஆனந்த்ராஜ் தான் வரும் சீன்களில் அதகளம் பண்ணியிருக்கிறார். அவர் அம்மாவாக வந்த புதுமுகம் சரியான தேர்வு. படத்தில் பல புதுமுகங்கள். அனைவரும் மனதில் நிற்கிறார்கள். சூர்யாவை கண்காணிக்கும் இரண்டு போலீஸ், வில்லன் டீமில் இருக்கும் பெண், ஆட்டோக்காரர், நஸ்ரியா அப்பா கஜராஜ் என எல்லாரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்து மலையாள பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர்.

வினித் கேமரா, சுஷின் இசை படத்தை இன்னொரு தளத்துக்கு எடுத்து செல்கிறது. கவுரவ வேடத்தில் டொவினா தாமஸ் வருகிறார். ஒரே ஒரு சீனிில் ஜோதிகாவும் வருகிறார். ஒரு துப்பறியும் கதையை, சீரியல் கில்லர் கதையை ரத்தம், வன்மம் என சீரியஸ் ஆக சொல்லாமல், ஆங்காங்கே காமெடி, திருப்பங்களுடன் சொல்லியிருப்பதும், புதுசாக பல இடங்களில் யோசித்து இருப்பதும் சீன் படத்தை ரசிக்க வைக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் நான் பாலிடிக்ஸ் போக போறேன் என சூர்யா வசனம் பேசுகிறார். அது ஜீத்து மாதவன் கற்பனையா? சூர்யா கொடுத்த அழுத்தமா என தெரியவில்லை.

இவ்வளவு கொலைகள், பிரச்னைகள் நடக்கும்போது சிட்டியில் போலீஸ் ஆபீசர்களே இல்லையா? அவர்கள் சூர்யாவுக்கு உதவ மாட்டார்களா? தனியாக ஒருவரால் இவ்வளவு வேலைகளை செய்ய முடியுமா? பள்ளி மாணவனை கொலைகாரனாக காண்பிப்பதா? வில்லன் 100 கொலைகளை செய்திருந்தால் எவ்வளவு பிரச்னை வந்திருக்கும்? என பல லாஜிக் கேள்விகள் வருகிறது. ஆரம்பத்தில் சில இடங்களில் தொய்வும், முதல்பாகம் கொஞ்சம் இழுவையாகவும் தெரிகிறது. அகரம் பவுண்டேஷன் நடத்தி வரும் சூர்யா, அடிக்கடி சிகரெட் பிடிக்கிற காட்சிகளில் நடக்கலாமா? என்று கேள்வியும் முக்கியமாக எழுகிறது. இப்படி சில குறைகள் இருந்தாலும் போராடிக்காமல் படம் நகர்வதால் , கதைக்களம் பிரஷ் ஆக இருப்பதால் தீபாவளி வின்னராக சீன் அமைகிறது. கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் பின்னர் இந்தாண்டில் சூர்யாவுக்கு 3வது வெற்றி படமாகிறது.

சீன் - புத்திசாலி கொலைகாரனை கண்டுபிடிக்கும் பார்வையற்ற போலீஸ் ஆபிசரின் கதை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !