உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / பிளாக் கோல்ட்

பிளாக் கோல்ட்

தயாரிப்பு: எம்.எம். ஸ்டூடியோஸ்
இயக்கம்: தீரன் அருண்குமார்
நடிப்பு: வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், அருள்.டி சங்கர், கராத்தே வெங்கடேசன்
இசை: கவாஸ்கர் அவினாஸ்
ஒளிப்பதிவு: சந்தோஷ்குமார் வீராசாமி
வெளியான தேதி: நவம்பர் 13, 2026
நேரம்: 2 மணி 04 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5

கோல்டு தெரியும், அதென்ன பிளாக் கோல்டு என கேட்கலாம். அது தலைமுடி. ஆம். கோயில்களில் பக்தர்கள் நேர்த்திகடனாக செலுத்தும் தலைமுடிக்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு. விக், அழகு சாதனப் பொருட்களுக்காக அதை ஏலம் எடுத்து பல கோடிக்கும் வியாபாரம் செய்யும் இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதல் படத்தின் கரு என்பதால் இந்த தலைப்பு. இதை அப்பா மகன் பாசம் பின்னணியில் ரவுடியிசம் கலந்த திரில்லர் கதையாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

தலைமுடி பிஸினஸ் செய்யும் ரவுடி ஏ.வெங்கடேஷ் கம்பெனியில் டிரைவராக வேலை செய்கிறார் லிவிங்ஸ்டன். அவரின் மகன் ஹீரோ வெற்றி. முன்பகை, தொழில் போட்டி காரணமாக அவருடன் மோதுகிறார் இன்னொரு வில்லன் அருள்.டி.சங்கர். இதற்கிடையே, பல கோடி மதிப்புள்ள தலைமுடியை ஏற்றுமதிக்கு அனுப்பும் வண்டி காணாமல் போகிறது. அதை ஓட்டிய டிரைவர் லிவிஸ்டனும் மிஸ்சிங். என்ன நடந்தது என வில்லன்கள், போலீஸ் தவிக்க, அப்பாவை தேடுகிறார் மகன். அந்த சம்பவம் பின்னணி என்ன? அந்த தலைமுடியை கடத்தியது யார்? குற்றவாளிகளை கண்டுபிடித்து பாசக்கார மகன் என்ன செய்கிறார் என்பது படம்.

அப்பா, மகன் பாசம், ஹீரோவின் காதல், அதற்கு ஹீரோயின் பிரியாலயா வீட்டில் எதிர்ப்பு, வில்லன் டீம் அறிமுகம், தலைமுடி பிஸினஸ் என கொஞ்ச நேரம் வழக்கமான சினிமாவாக, எந்த பரபரப்பும் இல்லாமல் செல்கிறது கதை. ஏ.வெங்கடேஷ், அருள் டி.சங்கர் அணிகள் மோத ஆரம்பிக்க கதை விறுவிறுப்பாகிறது. இதற்கிடையே கராத்தே வெங்கடேசன் குழுவும் வேறு பாணியில் பணத்துக்காக பல வேலைகள் செய்ய ஆரம்பிக்க, அந்த தலைமுடி வண்டி கடத்தப்பட கதை சூடுபிடிக்கிறது. கொஞ்சம் அமைதியான நடிப்பு, அளவான பேச்சு, சுமாரான ரொமான்ஸ் என நடித்து இருக்கிறார் வெற்றி.

ஹீரோ என்றால் அதற்கான பில்டப், ஒருவித சுறுசுறுப்பு அவரிடம் மிஸ்சிங். அப்பா பாசம் சம்பந்தப்பட்ட காட்சியிலும், அப்பாவுக்காக வில்லன்களுடன் சண்டை போடுகிற சீனிலும் மட்டும் கொஞ்சம் நடித்து இருக்கிறார். காதல் சீன்கள் ஒரு கட்டத்தில் காணாமல் போய், ஆக் ஷன் சீன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட, ஹீரோவும் ஆங்காங்கே காணாமல் போகிறார். கதைதான் ஹீரோ என வெற்றி நினைத்துவிட்டதால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

அப்பாவாக வரும் லிவிஸ்டன் நடிப்பு, அவரின் முதலாளி விசுவாசம், மகன் பாசம் காட்சிகள் படத்தை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. என்ன, அவருக்கு வயதாகிவிட்டதை பல சீன்கள் அப்பட்டமாக காண்பிக்கிறது. மேக்கப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். தலைமுடி கடத்தல் சீன், வில்லன்களிடம் சிக்கி கதறுகிற சீன்களில் அனுபவம் காரணமாக அவர் நடிப்பு அபாரம். வில்லன்களாக அருள் டி.சங்கர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் வருகிறார்கள். வழக்கமான சினிமா வில்லன் ஏ.வெங்கடேஷ். ஆனால், அருள்.டி.சங்கர் நடிப்பு, அவரின் கோபம், குறிப்பாக, சுருள்வாள் கொண்டு அவர் போடும் சண்டைகாட்சி செம.

இன்னொரு சைலண்ட் வில்லனாக கராத்தே வெங்கடேசன் வருகிறார். அவரும், அவர் டீமும் செய்கிற கொடூர கொலைகள், அவர்களின் பிளான், அவர்கள் செய்யும் சில செயல்கள்தான் படத்தின் உயிர் நாடி. அதை உணர்ந்து அவரும், அவர் டீமில் இருக்கும் 3 பேரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். அந்த டீம் பணத்தை கொள்ளை அடிக்க செய்யும் பிளான் திக் திக். பல படங்களில் டான்சராக புகழ்பெற்ற ஜப்பான் குமார் கூட, வாய்பேச முடியாத வில்லனாக மனதில் நிற்கிறார். அருள் டி.சங்கர் மகளாக சபிதாராய் வருகிறார். போலீஸ் அதிகாரியாக அபிராமி இடைவேளைக்குபின் வருகிறார். படம் முழுக்க முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் அலைகிறார். அவரை வீணடித்து இருக்கிறார்கள். ஹீரோ அம்மாவாக வரும் துளசி கடைசியில் 2 டயலாக் பேசும்போதும் மட்டும் நடித்து இருக்கிறார்.

கெட்ட போலீசாக வரும் தயாரிப்பாளர் மூர்த்தி நடிப்பு, அவர் செய்யும் விஷயங்கள் ஓகே. அவர் கேரக்டர் கதை ஓட்டத்துக்கு உதவி செய்கிறது. லாரி ஓனர் சங்க தலைவராக சில சீன்களில் வந்து பவர் காண்பிக்கிறார் நிழல்கள் ரவி. கவாஸ்கர் பின்னணி இசை கவர்கிறது. ஆக் ஷன் காட்சிகளில் திறமை காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்.

பிளாக் கோல்டு என அழைப்படும் தலைமுடி வியாபாரம், அது உருவான பின்னணி, மார்க்கெட் அதன் மதிப்பு ஆகியவற்றை சொல்வது புதுசு. இதற்கெல்லாம் தலைமுடி பயன்படுகிறதா என்ற அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

என்ன, அந்த சீன்களில் ஏ.ஐ.,யில் எடுத்து வலுவை இழக்க வைத்துவிட்டார்கள். தலைமுடி வியாபாரம் குறித்து இன்னும் புது தகவல்களை சொல்லியிருக்கலாம். 3 வில்லன் டீம் சண்டை, அப்பா - மகன் பாசம் என கதை நகர்ந்தாலும் திரில்லர், ஆக் ஷன் படங்களுக்கான அழுத்தம், ஒருவித பரபரப்பு கதையில் இல்லை. ஹீரோ மந்தமாக டயலாக் பேசுகிறார். ஆர்வம் இல்லாதது போல நடிக்கிறார்.

ஒரு புதிதான நல்ல கதைக்களம். நிறைய சீன்கள் புதுசு. ஆனால், கதை சொன்ன விதத்தில் சொதப்பி இருக்கிறார்கள். படம் போரடிக்கவில்லை என்றாலும் கிரைம் திரில்லர் படங்களுக்கு உரிய ஸ்பீடு இல்லை.

பிளாக் கோல்டு - தலைமுடி வியாபாரத்துக்கு பின்னால் நடக்கும் கிரைம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !