உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / நுாறு கோடி வானவில்

நுாறு கோடி வானவில்

தயாரிப்பு : பாலாஜிகபா, அருண்அருணாசலம்
இயக்கம் : சசி
நடிப்பு : ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், ரினில்மோகன், கோவை சரளா
ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ்.குமார்
இசை : சித்துகுமார்.
வெளியான தேதி : நவம்பர் 6, 2026 (நேரடியாக ஓடிடி ரிலீஸ்)
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் போன்ற நல்ல படங்களை கொடுத்த சசி இயக்கிய படம். பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் தவித்த இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.

மும்பையில் தனியார் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ஹரிஷ் கல்யாண் சில பிரச்னைகள் காரணமாக கோவாவுக்கு வருகிறார். அங்கே சின்ன பட்ஜெட்டில் ஒரு நிகழ்ச்சி தயாரிக்க பிளான் பண்ணுகிறார். டிவியில் தொகுப்பாளினி ஆக ஆசைப்படும் சித்தி இத்னானியை சந்திக்க, அவர் வாழ்க்கையை மையமாக வைத்து கோவா ஸ்கூட்டர் கேர்ள் என்ற நிகழ்ச்சியை தயாரிக்கிறார். இருவருக்கும் இடையேயான நட்பு, காதலாக மாறுகிறது. ஆனால், ஏற்கனவே சித்தி இத்னானிக்கு ஒரு காதலன் இருக்கிறான். விபத்து காரணமாக கோமாவில் இருக்கிறான். ஒரு கட்டத்தில் அவனும் குணமடைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பல பிரச்னைகள் முளைக்க, சண்டைகள் வர, கடைசியில் எந்த காதல் ஜெயித்தது என்பது படத்தின் கதை. அதாவது, பல படங்களில் சொல்லப்பட்ட முக்கோண காதல் தான் கதை.

பல படங்களில் துறுதுறு ரோலில் நடித்த ஹரிஷ் கல்யாணுக்கு இதில் கொஞ்சம் சீரியஸ் ரோல். அவருக்கும் அப்பா பிரச்னை, குடும்ப பிரச்னை, ஆபீசில் பிரச்னை. அந்த இடங்களில் அவர் நடிப்பு பரவாயில்லை ரகம். காதல் காட்சிகளில் பெரிதாக ஸ்கோர் பண்ணவில்லை. சில எமோஷன் காட்சி, கிளைமாக்சில் மட்டும் திறமையை காண்பித்து இருக்கிறார். முழு கதையும் சித்தி இத்னானியை சுற்றி வருகிறது. அதை புரிந்து கொண்டு அவரும் நடிப்பு, குறும்புதனம், கோபத்தில் முத்திரை பதித்து இருக்கிறார். அந்த கோவா கேர்ள் கேரக்டர் அவருக்கு செட்டாகி இருக்கிறது. இரண்டு காதலுக்கு இடையே அவர் சிக்கி தவிப்பதும், கிளைமாக்சில் கோவா போய் சில விஷயங்கள் செய்வதும் டச்சிங்.

இவர்களை தவிர, ஹீரோ மாமாவாக சின்னி ஜெயந்த் வருகிறார். நடிப்பில், பேச்சில் அவ்வளவு செயற்கை தனம், ஹீரோயின் பாட்டியாக கோவை சரளா வருகிறார். அவரை இயக்குனர் பயன்படுத்தவே இல்லை. கவுரவ வேடத்தில் சம்பத் வருகிறார். அவர் ஏதாவது செய்யப் போகிறார் என்று நினைத்தால் அதுவும் இல்லை. டிவி சேனல் அதிகாரியாக, டிப்டாப் ஆசாமியாக நடித்து வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் தம்பி ராமையா. அவருக்கு பல இடங்கள் பொருந்தவில்லை. இப்படியாக எந்த நடிகரும் மனதில் நிற்கவில்லை.

ஹரிஷ் கல்யாண் டீமில் கேமரா உமனாக பணியாற்றும் விஜே பார்வதி மட்டும் ஆங்காங்கே சின்ன, சின்ன வசனங்கள், சில குறும்புதனத்தால் படத்தை கொஞ்சம் கலகலப்பாக்கி இருக்கிறார். பொதுவாக சசி படங்களில் ஒவ்வொரு கேரக்டரும் நடிப்பால், சில விஷயங்களால் மனதில் நிற்கும். இதில் அப்படிப்பட்ட மாயஜாலம் நடக்கவில்லை. சசிக்கே உரிய திரைக்கதை உத்தி, திருப்பங்கள், அழுத்தமான காட்சியமைப்புகள், நச் சென்ற கிளைமாக்ஸ் என எதுவும் படத்தில் இல்லை. தலைப்பு மட்டுமே கவர்ச்சியாக இருக்கிறது.

காதலை புதுசாக சொல்வதில் சசி கில்லாடி ஆச்சே? கிளைமாக்சில் ஏதோ வைத்து இருக்கிறார் என ஆர்வமாக இருந்தால், அதிலும் பெரிய ஏமாற்றம். ஹீரோ, ஹீரோயின் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கதைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல நடிக்கிறார்கள். சில டயலாக், கோவா லொகேஷன் தவிர படம் முழுக்க ஏமாற்றம். ஒரு சில கோணங்களில் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார் மட்டும் ரசிக்க வைக்கிறார். இந்த மாதிரியான கதைக்கு பாடல் சிறப்பாக இருக்கணும். அதில் கூட சித்து குமார் பாஸ் மார்க்தான் வாங்கியிருக்கிறார். இந்த மாதிரி கதை சசிக்கு செட் ஆகலையே, அவர் பாணி வேறா? என படம் முழுக்க கேள்விகள் வந்துகொண்டே இருக்கிறது. ஆரம்பம் முதல் கடைசி வரை செயற்கைதனம் அதிகமாக இருக்கிறது. ஏன் இந்த படம் இவ்வளவு ஆண்டுகள் தியேட்டரில் வெளியாகவில்லை என புரிந்துவிடுகிறது.

நுாறு கோடி வானவில் - இது சசி படமா? என நுாறு கோடி சந்தேகம்?



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !