மூக்குத்தி அம்மன் 2
தயாரிப்பு : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் : சுந்தர்.சி
நடிப்பு : நயன்தாரா, ரெஜினா, துனியா விஜய், யோகிபாபு, ஊர்வசி,
ஒளிப்பதிவு : கோபிஅமர்நாத்
இசை : ஹிப்ஹாப் தமிழா.
வெளியான தேதி : நவம்பர் 6, 2026
நேரம் : 2 மணிநேரம் 24 நிமிடம்
ரேட்டிங் : 2.5 /5
மைலாஞ்சி கிராம தேவதை மூக்குத்தி அம்மனுக்கும் (நயன்தாரா), தீய சக்தி ரெஜினா மற்றும் துனியா விஜய்க்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பகை. அப்போது சில கணக்குகள் தீர்க்கப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் 9 கிரகணங்கள் நேர்கோட்டில் சந்திக்கும்போது இவர்கள் மீண்டும் மோதுகிறார்கள். என்ன தான் அம்மன் என தெரியாமல் போலீஸ் வேலை பார்க்கிறார் நயன்தாரா. அவரை கொடுமைப்படுத்தி அழிக்க நினைக்கிறார் ரெஜினா. இந்த சண்டையில் நடப்பது என்ன என்பது மூக்குத்தி அம்மன் 2 படக் கதை. முதற்பாகத்திற்கும் இந்த கதைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.
இரவில் தன் கண்முன்னே மாயக்குதிரை ஓடுவதால், ஒரு படை தெரிவதால் பயப்படும் நயன்தாராவிடம் 'நீ மைலாஞ்சிக்கு போ' என பலரும் சொல்கிறார்கள். நரபலி கொடுக்கும் மந்திரவாதி கருடா ராமிடம் இருந்து ஒரு குழந்தையை காப்பாற்றி மைலாஞ்சி ஸ்டேஷனுக்கு மாற்றல் வாங்கி செல்கிறார் நயன்தாரா. அங்கே இன்னொரு மந்திரவாதி சுனில் 'ஜீவசாமதியான' ரெஜினாவுக்கு உயிர் கொடுக்கிறார். அரசியல்வாதியாக இருக்கும் அவரின் முன்ஜன்ம கணவர் துனியா விஜயும் அவருடன் சேர்ந்து, நயன்தாராவை அழித்து உலகை ஆளும் சக்தியை பெற நினைக்கிறார்கள். இதற்கிடையே மைலாஞ்சி கிராமத்தில் பல ஆண்டுகளுக்குமுன்பு காணாமல் போன மூக்குத்தி அம்மன் 2 கோயில் புனரமைக்கப்படுகிறது. அங்கே தெய்வம் வந்ததா? மூக்குத்தி அம்மன், வில்லி ரெஜினா சண்டை எப்படி முடிந்தது என்பதை ஆன்மிகம், மாய மந்திரம், அம்மன், கெட்ட சக்தி, காமெடி, சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறார் சுந்தர்.சி.
சாமி வந்ததாக பொய் சொல்லி பகலில் துாங்கும் அப்பாவி போலீஸ் நயன்தாரா, இரவில் கெட்ட கனவு, குதிரை சத்தத்தில் துாங்க முடியாமல் தவிக்கிறார். என்ன நடக்கிறது என்பதை அவர் அம்மா ஊர்வசியும் பார்க்க, மைலாஞ்சிக்கு போகிறார்கள். அங்கே தெய்வ சக்தி, கெட்ட சக்தி இடையே ஆட்டம் ஆரம்பம் ஆக கதையும் சூடுபிடிக்கிறது. ஆரம்பத்தில் அப்பாவி போலீஸ் கேரக்டர் வேடம் நயன்தாராவிற்கு செட்டாகி இருக்கிறது. அவருக்கும், ஊர்வசிக்குமான சீன்கள் கலகலப்பு. மைலாஞ்சி வந்து அவர் தவிப்பது, தான் அம்மன் என தெரியாமல் பயந்து ஓடுவது, அவ்வப்போது சில ஆச்சரியம் செய்வது என ஓரளவு நடித்து இருக்கிறார். மூக்குத்திஅம்மனாக அந்த அம்மன் கெட்அப்பில் அவர் இடைவேளையின் போது மாறுவது புல்லரிக்கிறது. ஒரு குழந்தையை காப்பாற்றும் சீன், குழந்தைக்கு உயிர் கொடுக்கும் சீன்களும் பிரமாதம். அந்த பாம்பு படிகட்டு, சிங்கம் சீன்கள் பக்கா மாஸ். ஆனாலும் அம்மன் கெட்அப்பில் நயன்தாரா முகத்தை சீரியஸ் ஆக வைத்து நடித்து இருக்கிறார். அவர் முகத்தில் அம்மன் அருள், அந்த சாந்த சிரிப்பு கூட மிஸ்சிங். பல காட்சிகளில் போஸ் மட்டும் கொடுக்கிறார். அம்மனாக கண்களால், உடல்மொழியால் மிரட்ட வேண்டாமா? முதற்பாகம் அளவுக்கு கூட, இதில் அவர் நடிக்கவில்லை.
வில்லியாக வரும் ரெஜினா நேர் எதிர். படம் முழுக்க நடித்து தள்ளியிருக்கிறார். அவர் கெட்அப், மேக்கப், ஹேர்ஸ்டைல் வித்தியாசம் என்றாலும், இந்த கதைக்கு பெரிதாக செட்டாகவில்லை. அவரின் கேரக்டர் பின்னணி புதுசாக இருந்தாலும், நடிப்பும், டயலாக் டெலிவரியும் கதைக்குள் வரவில்லை. சில சமயம் மம்மி பட கேரக்டரை அவர் நினைவு படுத்துகிறார். அவர் கணவராக வரும் துனியா விஜய் வீரபாகு சிவாஜி கேரக்டரை நினைவுப்படுத்துகிறார். அவரின் வில்லத்தனமும் சினிமாதனம். இடைவேளைக்குபின் அவருக்கு கொடுக்கப்படும் ஓவர் பில்டப், படத்தின் மைனசும் கூட. இவர்களை தவிர, இடைவேளைக்குபின் பண்ணையார் ஆக யோகிபாபு வருகிறார். காமெடி பண்ணுகிறார். சிரிப்பு வரவில்லை. கிளைமாக்சில் வந்து சிரிக்க முயற்சி செய்கிறார். சிரித்தவர்கள் பாக்யவான்கள். சுந்தர்.சி படங்களில் இப்படிப்பட்ட காமெடி பஞ்சமா? ஓ மை காட்
நயன்தாரா அம்மாவாக வரும் ஊர்வசி தனக்காக காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். இவர்களை தவிர, ஒரு கவுரவ வேடத்தில் கர்ப்பிணியாக வருகிறார் இனியா. அந்த காட்சிகள் சென்டிமென்ட், அம்மன் பக்திக்காக வைக்கப்பட்டுள்ளது. கருடா ராம் கெட்அப் போதி தர்மரை நினைவுப்படுத்துகிறது. காமெடியன் சுனில் மந்திரவாதியாக வந்தாலும், ஈர்க்கவில்லை. இப்படியாக படம் முழுக்க பல கேரக்டர்கள், அவர்களின் நடிப்பு மைனஸ்
படத்தில் முதற்பாதியில் ஒன்றுமே இல்லை. கதை எங்கே செல்கிறது. என்ன நடக்கிறது என்று கேள்வி வருகிறது. அடுத்த பாதியில்தான் படம் ஸ்பீடு ஆகிறது. படத்தில் பெரிய பிளஸ் கிராபிக்ஸ் மற்றும் ஏஐ வொர்க். அம்மன் ஊருக்கு வரும்போது கோபுர சிற்பங்கள் வரவேற்பது அழகோ அழகு. குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளில், கிளைமாக்சில் பிரமாண்டமும், சண்டைக் காட்சிகளும் மனதில் நிற்கிறது. அரை மணி நேரம் கிளைமாக்ஸ் அமர்க்களம். அதில் மூக்குத்தி அம்மனுடன் அவர் சகோதரிகளாக வரும் அம்மன்களான குஷ்புவும், சினேகாவும் சேர்ந்து ஆடும் ஆட்டமும், எதிரிகளை இணைந்து பந்தாடும் விதமும் அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும். ஆனாலும், அந்த பாடல் காட்சியை இன்னும் உணர்ச்சிபூர்வமாக, பக்திமயமான வார்த்தைகளை, இசைக்கருவிகளை பயன்படுத்தி ஹிப்ஹாப் ஆதி கொடுத்து இருக்கலாம். பாடல் இன்னும் ஹிட்டாகி இருக்கும்
நயன்தாரா, கிராபிக்ஸ் டீமை நம்பி சுந்தர்.சி இந்த படத்தை எடுத்து இருக்கிறார். அவர் படங்களில் வரும் காமெடி, சின்ன, சின்ன சுவாரஸ்யம், கமர்ஷியல் விஷயங்கள் இதில் மிஸ்சிங். இதிலும் அவர் பாணியில் ஒரு கல்யாண வீடு காமெடி வருகிறது. அதுவும் சுமார். தேவையில்லாத, இழுக்கிற சீன்கள் அதிகம். அதை கத்தரித்தால் படம் இன்னும் வேகமாக நகரும். அம்மன் அடி வாங்குவதை, அவர் கண் முன் நரபலி கொடுப்பதை, வில்லி கேரக்டரின் ஆதிக்கத்தை பக்தர்கள் ஏற்கமாட்டார்கள். பக்தி படங்களை விரும்புகிறவர்களுக்கு, நயன்தாரா ரசிகர்களுக்கு இந்த பாகம் பிடிக்கும்.
மூக்குத்தி அம்மன் 2 - பக்தி பரவசம் கம்மி