மீசைய முறுக்கு 2
தயாரிப்பு : அவ்னிமூவீஸ்
இயக்கம் : ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு : ஹிப்ஹாப் ஆதி, கருணாஸ், பாபா பாஸ்கர், சைத்ரா, ரம்யா ரங்கநாதன், கெட்டிகா சர்மா, ஹர்சத்கான்
ஒளிப்பதிவு : பாலாஜி சுப்ரமணியம்
இசை : ஹிப்ஹாப் தமிழா
வெளியான தேதி : செப் 25, 2026
நேரம் : 2 மணிநேரம் 21 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
அப்பா, மகன், பேரன் என 3 தலைமுறையினர் வெவ்வேறு காலகட்டங்களில் இசைத்துறையில் சாதிக்க நினைக்கிறார்கள். ஆனால், ஒரு தரப்பால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். வெற்றி பெற முடியாமல் தவிக்கிறார்கள். கடைசியில் 3 பேரும் எப்படி சாதிக்கிறார்கள் என்பது மீசைய முறுக்கு 2 படத்தின் கதை. ஹிப்ஹாப் ஆதி இயக்கி, இசையமைத்துள்ளார். 3 பேராக வருபவரும் அவரே.
1970களில் தாஸ் என்ற பிரபல கானா பாடகராக இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. அவரை பாடலை ரிக்கார்ட்டிங் செய்ய கூட முடியாமல் அவமானப்படுத்தி துரத்துகிறார்கள். அடுத்து அவர் மகன் டைகர் சிவா என்ற பெயரில் கானா பாடகர் ஆகிறார். அவராலும் ஜெயிக்க முடியாத நிலை. 3வதாக ஜீவா என்ற பெயரில் இளம் இசை கலைஞரான பேரன் ஹிப்ஹாப் ஆதியும் போராடுகிறார். அவருக்கும் அதே நிலை. கடைசியில், பேரன், அப்பா, தாத்தா என மூன்றுபேரும் கூட்டணி அமைத்து கானா பாடல் பாடுகிறார்கள். என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.
கானா இசைக்கும், கர்நாடக சங்கீத இசைக்கும் போட்டி என்ற ரீதியில் இந்த கதையை நகர்த்தியிருக்கிறார் ஆதி. பேரன் சம்பந்தப்பட்ட காட்சிகளே அதிகம். அரசு பஸ் டிரைவர் பாபா பாஸ்கர் மகனான அவர், நண்பன் ஹர்சத்கானுடன் சேர்ந்து சினிமா வாய்ப்புகளை தேடுகிறார். சிலர் உதவினாலும், சினிமா தயாரிப்பாளரின் மகன், சினிமா தயாரிப்பாளர், இளம் சினிமா இசையமைப்பாளர் உட்பட பலர் அவரை துரத்துகிறார்கள். அப்போது அவரின் நடிப்பு, அவமான சீன்கள் டச்சிங். ஹீரோயின் கெடிகா சர்மாவை காதலிப்பது, அதில் தோற்பது, நண்பனுடன் சண்டை ஆகிய இடங்களிலும் ஆதி நடிப்பு ஓகே. ஆனால், பெரும்பாலான இடங்களே ஒரு மாதிரி நடிப்பது சலிப்பு. இவரை விட பிளாஷ்பேக் காட்சியில் அப்பா ஆதியாக வரும் சீன், அவருக்கும் ரம்யா ரங்கநாதனுக்குமான காதல், திருமண சீன் கலர்புல். அடுத்த பிளாஷ்பேக் காட்சியில் தாத்தா ஆதி, அவர் மனைவி சைத்ரா பாசம், அவர்களும் புறக்கணிக்கப்படுவது மனதில் நிற்கிறது. 3 கால கட்டங்களிலும் ஆதியின் எனர்ஜி, நடிப்பு, ஆடல், பாடல் கதையை கமர்ஷியல் ஆக்கி இருக்கிறது.
முதற்பாதியில் சீன்களில் கோர்வை இல்லை. பல இடங்களில் ஏதாவது பேசிக் கொண்டே, சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆதி தவிர, அவர் நண்பனாக வரும் ஹர்சத் நடிப்பு, அவரின் குறும்புதனங்கள் ஓகே. ஆனால் காமெடியாக வரும் யோகிபாபு, சாரா, வரதராஜ் நடிப்பில் சிரிப்பு வரவில்லை. பல இடங்களில் வெறுப்புதான் வருகிறது. மீசையமுறுக்கு முதல்பாகத்தில் மறைந்த விவேக் இருந்தார். அந்த மாதிரியான வலுவான கேரக்டர் இதில் இல்லை. ஏகப்பட்ட நடிகர் இருந்தாலும் காமெடி பஞ்சம், சில தன்னம்பிக்கை காட்சிகளில் தாத்தாவாக வரும் கருணாஸ், அப்பாவாக வரும் பாபாபாஸ்கர் ஸ்கோர் செய்து இருக்கிறார்கள். இவரின் இளமை காட்சிகளில் ஆதியே அந்த கேரக்டராக வருகிறார். முதுமை காட்சிகளில் ஆதிக்கு பதில் பாபாபாஸ்கர், கருணாஸ் என மாற்றியது புத்திசாலிதனம்.
ஹீரோயின்களில் கெட்டிகா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆகிறார். ஆனால், அவர் கேரக்டரை சரியாக கொண்டு செல்லவில்லை. ரம்யா ரங்கநாதன் போர்ஷன் கதைக்கு பிளஸ். நல்ல நடிகையான சைத்ரா சில சீன்களில் காணாமல் போகிறார். மற்ற படங்களை போலவே, சினிமா தயாரிப்பாளர் மகனை கோமாளியாக, வில்லனாக காண்பித்து இருக்கிறார்கள். நண்பனாக வரும் ஹர்சத்கான் இனி அதிக படங்களில் நடிப்பார். அவர் பாடிலாங்குவேஜ் பலருக்கு பிடித்து போகிறது.நாசர் நடித்து கொட்டியிருக்கிறார்.
பிளாஷ்பேக் காட்சியில் இருக்கும் அழுத்தம், வலு இப்போது நடக்கும் காட்சிகளில் இல்லை. பாபா பாஸ்கர், ஆதி சீன்களில் அப்பா மகன் பாசம் செட்டாகி இருக்கிறது. ஆனால், பல இடங்களில் காட்சியில், வசனங்களில் விறுவிறுப்பு இல்லை. ஒரே இடத்தை கதை சுற்றிக் கொண்டே இருக்கிறது. எதற்காக ஒரு தரப்பினர், ஆதி குடும்ப வாய்ப்பை தடுக்கிறார்கள், என்ன பிரச்னை என்பதை வலுவாக சொல்லவில்லை. ஆதிக்க சாதியினர் அப்படிதான் இருப்பார்கள். அவர்கள் குணம் அப்படிதான் என வெளிப்படையாக குற்றம் சாட்டி, அதிலும் ஒரு தரப்பை இன்னும் வன்மயைாக குற்றம்சாட்டி வம்பு இழுத்து இருக்கிறார்கள். அந்த தரப்பு உடை, பேச்சு வழக்கை கூட வில்லத்தனத்துக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படி ஒரு தரப்பை மட்டும் காலங்காலமாக காயப்படுத்துவதை, குற்றம் சொல்வதை சென்சார் கட்டுப்படுத்தாது போல. இசையில் ஒரு வர்க்கம் முன்னேறுகிறது, இன்னொரு வர்க்கம் அவர்களை தடுக்கிறது என்பதை ஜாதிப் பின்னணியில் சொன்னது செட்டாகவில்லை. படத்தில் பேசப்படும் தன்னம்பிக்கை விஷயங்கள், இளைஞர்களின் வேகம், அவர்களின் உழைப்பை சொன்னது ஓகே. ஆனால், அதற்கு பின்னால் ஜாதி, நெப்போடிசத்தை அதிகம் சேர்த்தது சினிமாதனமாக்கி, கதையை வலு இழக்க வைக்கிறது. சில இடங்கள் எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தை நினைவுப்படுத்துகிறது.
ஹிப்ஹாப் ஆதி படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும். இதில் அப்படியே. ஆனாலும் கானா பாடகர்களின் கதை சொல்லும் படத்தில் உருப்படியான, ரசிக்கும்படியான கானா பாடல் இல்லை. பாலாஜி கேமரா பாடல்காட்சிகளை கலர்புல்லாக காண்பிக்கிறது. முதற்பாதியில் வரும் வசனங்கள், சீன்கள் இழுக்கிறது. சில இடங்களில் அட்வைஸ் மழை, கொஞ்சம் பிரச்சார நெடி. பிற்பாதி ஓகே. இளைஞர்கள், ஜென்ஸீயை மையமாக வைத்து வசனங்கள், காட்சிகள் அதிகம் இருக்கிறது. அவர்கள் ரசிக்கலாம். மற்றவர்கள் கொஞ்சம் நெளிவார்கள். மீசையமுறுக்கு முதற்பாகத்துக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை. அந்த பாகத்தில் இருந்த கமர்ஷியல் விஷயங்கள் இதில் மிஸ்சிங்.
மீசைய முறுக்கு - தாத்தா, அப்பா ஆகியோருக்கு இசை வாழ்வு கொடுக்கும் பேரனின் கதை