சிங்காரம்
தயாரிப்பு : ராக் புரடக் ஷன்ஸ்
இயக்கம் : கே.வி.கதிர்வேலு
நடிப்பு : யோகிபாபு, வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், தீபா, மனோபாலா, மாரிமுத்து
ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ்.குமார்
இசை : சாம்.சி.எஸ்
வெளியான தேதி : அக்டோபர் 30, 2026
நேரம் : 2 மணிநேரம் 04 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
கோவை ஆனைமலை பகுதிக்கு அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அம்மா தீபா மற்றும் தங்கள் குழுவுடன் வியாபாரம் செய்ய வருகிறார் நரிகுறவரான யோகிபாபு. அந்த ஊரில் இருக்கும் அரசியல்வாதி மாரிமுத்துவின் தம்பி சென்ட்ராயனுக்கும், யோகிபாபு குழுவுக்கும் சண்டை வருகிறது. பல்வேறு அவமானங்களை, பிரச்னைகளை அந்த சமூகம் சந்திக்கிறது. அந்த சமயத்தில் பணப்பிரச்னை காரணமாக எம்.எஸ்.பாஸ்கர் தற்கொலை செய்கிறார். அவர் வாங்கி வைத்திருந்த லாட்டரிக்கு ஒன்றரை கோடி பரிசு கிடைக்க, யோகிபாபு நிலை உயர்கிறது. அந்த ஊரில் பணக்காரர் ஆகிறார். ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து எம்எல்ஏ ஆக போட்டி போடுகிறார். அந்த தேர்தலில் ஜெயித்தாரா என்பது சிங்காரம் படக்கதை.
1990களில் கதை நடக்கிறது. நரிகுறவர் சமூகம் குறித்து நிறைய ஆராய்ச்சி இந்த கதையை எடுத்து இருக்கிறார் இயக்குனர். நரிகுறவர் சமூகத்தில் மூத்தவராக , யோகிபாபு அப்பாவாக வாழ்ந்து இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர் என்றே சொல்லலாம். அவரின் பாடிலாங்குவேஜ், அவர் பேசுவது, சின்ன, சின்ன எக்ஸ்பிரசன் கலக்கல். அவர் மனைவியாக வரும் தீபாவும் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார். ஒரு பாடலுக்கு எனர்ஜியுடன் ஆடுவது ஆச்சரியம். அந்த கூட்டத்தில் இருக்கும் சாம்ஸ், கணேஷ், மறைந்த மனோபாலா உள்ளிட்ட பலருக்கும் கெட்அப் செட்டாகி இருக்கிறது. அந்த மக்களின் வாழ்க்கை, பேச்சு, பிரச்னைகள், சந்தோஷம், கிண்டல் கேலிகளை அழகாக பதிவு செய்து இருக்கிறார்கள்.
காமெடியனாக நடித்த யோகிபாபு இதில் கதைநாயகன். அதனால் காமெடி மிஸ்சிங். எந்த இடத்திலும் சிரிப்பு வரவில்லை. அவர் கேரக்டரிலும் புதுமை அல்லது நடிக்க வாய்ப்பு இல்லை. மற்றவர்கள் நடிப்பில் கலக்க, அவரோ சீரியஸ் ஆக இருக்கிறார். அவ்வப்போது தன் ஸ்டைலில் ஒன்லைன் பன்ச் பேசுகிறார். நடிப்பிலும் பெரிய வித்தியாசம் இல்லை.
அந்த ஊர் பெரிய மனிதராக, நல்லவராக வருகிறார் வேல.ராமமூர்த்தி. அவரின் குணம், செய்யும் செயல்கள் ரசிக்க வைக்கிறது. கெட்ட அரசியல்வாதியாக மறைந்த மாரிமுத்தும், அவர் தம்பியாக சென்ட்ராயனும் வந்து வில்லத்தனம் செய்கிறார்கள். அது படத்துக்கு பிளஸ் ஆக இல்லை. எத்தனையோ படங்களில் பார்த்ததுதான். இன்னொரு அரசியல்வாதியாக படவா கோபி வருகிறார். மனோபாலா சில சீன்களில் வந்து போகிறார்.
முதற்பாதி முழுக்க நரிகுறவ மக்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், பணத்துக்காக, மானத்துக்காக போராடுவது, சென்டிமென்ட் காட்சி என ஓரளவு மனதிற்கு நெருக்கமாக செல்கிறது. அடுத்தபாதியில் யோகிபாபு பணக்காரர் ஆகி, ஊருக்கு உதவி செய்வது, அரசியலில் நிற்பது, அதில் ஜெயிப்பது எல்லாம் பக்கா சினிமாதனம். அது கதையில் இருந்து விலகி இன்னொரு திசையில் செல்கிறது. இடையில் யோகிபாபுக்கு காதல் சீன் இருக்கிறது. அதுவும் கடைசிவரை செட் ஆகவில்லை . நரி குறவ மக்களின் டென்ட், அவர்களின் வாழ்க்கை பின்னணியை எதார்த்தமாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார். சாம்சிஎஸ் இசையில் தனித்துவம் இல்லை.
மழை வந்தால் தவிப்பது, திருவிழாவில் கடை போட முடியாமல் சண்டை போடுவது, அவர்களுக்கு அங்கீகாரம் இல்லாதததால் ரேஷன் கடையில் அரிசி வாங்க முடியாமல் தவிப்பது, அரசு ஆஸ்பத்திரிக்குள் போக முடியாமல் துரத்தப்படுவது, ஊர் மக்களால் அந்த குழந்தைகள் சரியாக சாப்பிட முடியாமல் அழுவது ஆகியவை டச்சிங் சீன்கள். நரிக்குறவ மக்களின் அன்றாட பிரச்னைகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, ஊசிமணிக்கு பணம் கொடுக்காமல் சென்ட்ராயன் பஸ்சில் எஸ்கேப் ஆவது கண்களில் தண்ணீரை வரவழைக்கும். ஒரு வாழ்வியல் கதை, ஒரு அழுத்தமான சமூகக்கதை, ஒரு கட்டத்தில் திசைமாறுகிறது. பணம், ஹீரோயிசம், அரசியல் தடம் மாறுவது ரசிப்புதன்மையை குறைக்கிறது. நரிகுறவ மக்களின் அரசியல் பயணம் என்பது புதுமையான விஷயம். அதை சொன்ன விதத்திலும் ஈர்ப்பு இல்லை. படம் முடிந்தபின் இந்த சமூகத்தில் இப்படிப்பட்ட மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான அரசு சலுகைகள் கிடைக்கின்றன என சில வீடியோ, தகவல்களால் விவரிக்கிறார் இயக்குனர். அந்த இடம் மட்டும் மனசுக்கு நெருக்கமாகிறது. மற்றபடி, பலவகையிலும் திருப்தி தராத படம்.
சிங்காரம் - நரிகுறவ இனத்தை சேர்ந்த கதை நாயகன் எம்எல்ஏ ஆகும் சீரியஸ் கதை.