பாட்டியின் முந்தானை முடிச்சு: 'மொதராத்திரி' இயக்குனர் ராஜா கருப்பசாமி
படம் வெளியாகி மாதங்கள் கடந்த பிறகும் கூட தொடர்ந்து வரும் பாராட்டு மழையால் மிகுந்த உற்சாகத்திலிருக்கிறார். இதனால் முதல் படத்தை விட அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக காய்களை நகர்த்தவும் துவங்கியிருக்கிறார்.
சிட்டி முதல் சி சென்டர்கள் வரை தியேட்டர்களில் வரவேற்பை பெற்றிருக்கிற 'மொதராத்திரி' பட இயக்குனர் ராஜா கருப்பசாமி தான் இவர். பார்க்க பக்கத்து வீட்டு பையனாக தோற்றமளிப்பதாலோ என்னவோ, பட வெற்றி விழாக்களுக்கு செல்லுமிடங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அழைத்து அணைத்து முத்தமழை பொழிவதாக நெகிழ்ச்சியுறுகிறார் ராஜாகருப்பசாமி. அவர் கூறியது:
துாத்துக்குடி சொந்த ஊர். சினிமாவில் நடிப்போம் என சிறிய வயதில் நினைத்து பார்த்தது கூட கிடையாது. அப்போது வீட்டில் டிவி கூட கிடையாது. அரசின் இலவச டிவி வந்த பிறகு தான் நிகழ்ச்சிகளை பார்க்க துவங்கினேன். பி.எஸ்.சி., படித்த பிறகு கிடைத்த வேலைகளை செய்தேன். இந்நிலையில் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பில் சென்னைக்கு கிளம்பினேன். அங்கு ஓராண்டு பிலிம் மேக்கிங் டிப்ளமோ முடித்தேன்.
அப்போது வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள், சந்தித்த தருணங்களை எடுத்து ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்தேன். அப்படி பொழுதுபோக்காக அமைந்த படம் தான் 'மொதராத்திரி'.
பொதுவாக ரசிகர்களிடம் புதுசா காட்டினா வரவேற்பு இருக்கும். முடிந்தமட்டும் புதுமுகங்களை இறக்கினேன். கிராமத்து சப்ஜெக்ட் என்பதால் இவர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து ரிஷிகாந்த், அனிஷ்மா, திவ்யா, பகவதிபெருமாள் போன்றவர்களை நடிக்க வைத்தேன்.
படத்துல முதலில் நான் நடிப்பதாக இல்லை. அந்த கேரக்டருக்கு புதுமுகம் தேவைப்பட்டது; கிடைக்கவில்லை. எனக்கும் சிறு ஆசை. இதனால் நாமே நடித்தால் என்ன என பண்ணினேன். இந்தளவுக்கு 'ரீச்' ஆகும் என நினைக்கவில்லை.
பட வெற்றி விழாக்களுக்கு செல்லுமிடங்களில் பெரியவர்கள் அழைத்து தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்கிறார்கள். தியேட்டர் என பார்க்காமல் கட்டி பிடித்து அழவும் செய்கிறார்கள். பாட்டி ஒருவர் படத்தை பார்த்து விட்டு பாராட்டியதுடன் முந்தானையில் முடித்து வைத்திருந்த நுாறு ரூபாயை கொடுத்தது நெகிழ்ச்சியை தந்தது. அந்த பணத்தை செலவு செய்ய மனம் இன்றி பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.
சிம்பு, தனுஷ் படங்களை பார்த்து பரவசப்பட்டிருக்கிறேன். அவர்களே என்னை அழைத்து பாராட்டியது மறக்க முடியாது. கமல், சூரி, கார்த்திக் சுப்புராஜ் என பலரும் பாராட்டினர்.
பொதுவாக என் அம்மா இதுவரை என்னிடம் எதுவும் கேட்டது இல்லை. அப்படி இரு... இப்படி இரு என கூறியதும் கிடையாது. அவனுக்கென ஒரு ஆசையிருக்கு. விட்டு விடுங்க என எனக்காக பேசுவார். அவர் படத்தை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். தம்பி மாரியும் எனக்காக எங்கள் ஊரில் கட் அவுட் எல்லாம் வைத்தான்.
தொடர்ந்து படங்களை இயக்க உள்ளேன். இந்தளவுக்கு பாராட்டு பெற இத்தனை வருஷங்களாகி விட்டது. சென்னை வந்து படித்து முயற்சி செய்து கொண்டே இருந்ததால் இயக்குனராக முடிந்தது. நடிக்கிறது ஈஸியில்லை. ஆனால் எண்ணம் இருக்கிறது. என்னை தயார்படுத்திக்கிட்டு பண்ணுவேன்.
பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற விழா காலங்களில் அம்மா, தம்பியுடன் தான் ஊரில் இருப்பேன். சொந்தகாரங்களும் வந்துவிடுவர். ஆனால் தற்போது படவாய்ப்பு என ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் தீபாவளியை அம்மா, தம்பியுடன் தான் கொண்டாட சென்று விடுவேன் என்றார்.