உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசாணை வந்ததுமே காலை 6 மணி காட்சிகளுக்கு 'புக்கிங்' ஆரம்பம்

அரசாணை வந்ததுமே காலை 6 மணி காட்சிகளுக்கு 'புக்கிங்' ஆரம்பம்

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் அதிகாலை காட்சிகள், காலை காட்சிகள் ஆகியவை 2023ம் ஆண்டு பொங்கல் வெளியீடுகளுடன் நிறுத்தப்பட்டது. அந்த வருடப் பொங்கலுக்கு வெளியான 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி சென்னை, கோயம்பேட்டில் உள்ள ஒரு தியேட்டரில் நடந்த போது அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து தவறி விழுந்து இறந்து போனார்.

அதையடுத்து அதிகாலை, காலை 6 மணி சிறப்புக் காட்சிகளை நடத்துவது குறித்து பொதுமக்களிடம் எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைத்தளங்களிலும் பலர் அதற்கு எதிராகப் பதிவு செய்தனர். அதையடுத்து அரசு தரப்பிலிருந்து அந்தக் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டது. காலை 9 மணிக்குத்தான் காட்சிகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.

விஜய் நடிகராக இருந்து முதல்வராகப் பதவியேற்ற பின்பு வெளிவந்த அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' வந்த போது கூட காலை 6 மணி காட்சியை நடத்தவில்லை. காலை 9 மணி காட்சிக்குத்தான் அனுமதி அளித்தார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் நடத்திய அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரையுலகத்தினர் அவரிடம் காலை 6 மணி காட்சிக்கான கோரிக்கையை முன் வைத்தனர். அதற்கடுத்த ஒரு வாரத்திலேயே நேற்று அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

முன்பெல்லாம் படம் வெளியான அன்று மட்டுமே காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது புதிய படங்கள் வெளியான ஒரு வாரத்திற்கும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த அரசாணை வெளியானது. அதற்கடுத்த சில மணி நேரங்களிலேயே ஆன்லைன் இணையதளங்களிலும், சில தியேட்டர்களிலும் காலை 6 மணி காட்சிக்கான முன்பதிவு ஆரம்பமானது.

ஒரு வாரத்திற்கு இப்படியான அனுமதி கிடைத்துள்ளதால் தியேட்டர் வட்டாரங்களிலும், தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம், சமூக வலைத்தளங்களில் இப்படி காலை 6 மணி காட்சிக்கே அனுமதி அளிக்கப்பட்டது குறித்து ஒரு சாரர் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த அனுமதி மூலம் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதன் தாக்கம் எப்படி இருக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !