உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 6 மணி காட்சிக்கு அனுமதி: தமிழக அரசுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

6 மணி காட்சிக்கு அனுமதி: தமிழக அரசுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி


தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கு முன்பு அனுமதி இருந்த நிலையில், 2023ல் 'துணிவு' பட வெளியீட்டின்போது ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து தவறி விழுந்து இறந்து போனார். அப்போது இருந்து அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் அதிகாலை 6 மணி முதல் இரவு 2.30 வரை படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு தினமும் 6 காட்சிகள் திரையிட அனுமதி அளித்து விஜய் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் திரைப்படங்களுக்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்த் திரையுலகிற்கு சமமான வாய்ப்பை ஏற்படுத்திய முதல்வர் விஜய்க்கு நன்றி.

கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தமிழ் திரைப்படங்கள் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டு வந்த நிலையிலும், தமிழகத்தில் காலை 9 மணிக்கே திரைப்படங்கள் தொடங்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், தமிழ்த் திரைப்படங்களுக்கு மற்ற மாநிலங்களுடனும், வெளிநாடுகளுடனும் சமமான வெளியீட்டு வாய்ப்பு இல்லாத நிலை உருவானது.

குறிப்பாக, வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் காலை 6 மணிக்கே திரைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள், தமிழ்நாட்டில் திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் மீதான தங்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தும் நிலை ஏற்பட்டது.

இந்த முக்கியமான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சமீபத்தில் தமிழக அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து சங்கங்கள், அமைப்புகளும் ஒருமித்த குரலில், தமிழகத்தில் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. இந்தக் கோரிக்கையை மிகுந்த அக்கறையுடன் பரிசீலித்த அமைச்சர் ராஜ்மோகன், முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்துள்ளார்.

இந்த முடிவு, பண்டிகைக் காலங்களில் புதிய திரைப்படங்களுக்கு கூடுதலாக ஒரு காட்சியை வழங்குவதோடு, உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழ் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரையிடப்படுவதற்கும் வழிவகுக்கும். இதன் மூலம், தமிழ் திரைப்படங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஒரு முக்கியமான சமநிலையற்ற நிலை சரிசெய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !