உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 46வது ஆண்டில் அந்த 7 நாட்கள் : பாலக்காட்டு மாதவனை, வசந்தியை மறக்க முடியுமா?

46வது ஆண்டில் அந்த 7 நாட்கள் : பாலக்காட்டு மாதவனை, வசந்தியை மறக்க முடியுமா?

கே. பாக்யராஜ் இயக்கி நடித்த 'அந்த 7 நாட்கள்' படம், கடந்த 1981 அக்டோபர் மாதம் 26ம் தேதி திரைக்கு வந்தது. அந்த வகையில் இந்த படம் 46வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அம்பிகா, ராஜேஷ், காஜா செரீப், கல்லாப்பெட்டி சிங்காரம் உட்பட பலர் நடித்த அந்த 7 நாட்கள் தமிழில் வந்த முக்கியமான படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. படத்தின் கரு மட்டுமல்ல, கிளைமாக்ஸ் கூட இன்றும் பேசப்படுகிறது.

அந்த 7 நாட்கள் குறித்த 7 முக்கியமான தகவல்கள்...

* பிரபல காமெடி நடிகர் சந்திரபாபு தனது மனைவி ஷீலா ஒருவரை காதலித்து இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு, அந்த காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்து இங்கிலாந்து அனுப்பி வைத்ததாக தமிழ் சினிமாவில் ஒரு நிஜக்கதை உலாவி வருகிறது. அதை மையமாகக்கொண்டு அந்த 7 நாட்கள் கதையை பாக்யராஜ் உருவாக்கியதாக தகவல். இதை அவரே ஒரு பேட்டியில் உறுதி படுத்தியிருக்கிறார்.

* ''என்ட காதலி உங்களுக்கு மனைவியாகிட்டு வரும். ஆனா, உங்க மனைவி எனிக்கு காதலி ஆகிட்டு வராது. சாரே நீங்கள் பறைஞ்ச கதைக்கு ஈ கிளைமாக்சே கரெக்ட். இது குறைச்ச ஓல்டு கிளைமாக்ஸ்தான். பட் கோல்டு'' என கிளைமாக்சில் அழுதுகொண்டே பாக்யராஜ் பேசும் வசனம் இன்றும் பிரபலம். இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் தமிழில் மட்டுமல்ல, இந்தியாவில் பல மொழிகளில் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தாலி சம்பந்தப்பட்ட கிளைமாக்சை உருவாக காரணமாக இருந்தவர் எம்ஜிஆர், பானுமதி கதை இலாகாவில் இருந்த ரவீந்தர் என்று பாக்யராஜ் ஒரு இடத்தில் நன்றியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

* படத்தில் ஒரு கட்டத்தில், “ஏன் ஆசானே... அண்ணியோட காதலை நீங்க புரிஞ்சுக்கவே மாட்றீங்க. அவங்களை இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணிக்கலாம்ல? என்பது போல் அவர் சீடன் காஜா கேட்கும்போது, 'எடோ கோபி... நான் ஒரு மலையாளி. இப்படி வந்த இடத்துல லவ் பண்ணி திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அது அத்தனை மலையாளிகளையும் பாதிக்கும்” என்று கண்ணியமானதொரு விளக்கம் சொல்வார் 'பாலக்காட்டு மாதவன்'. இந்த வசனத்தை அனைத்து தரப்பும் ஏற்று ரசித்தது.

* அந்த 7நாட்கள் கேரக்டர் பெயரான மாதவனை பிடித்துபோனதால் கடைசிவரை மாதவா என்றுதான் பாக்யராஜை அழைப்பார் அம்பிகா. வசந்தி என பாக்யராஜூம் அவ்வப்போது கிண்டல் செய்வார். மலையாளியான அம்பிகா கதைப்படி தமிழ் பெண்ணாகவும், தமிழகத்தில் பிறந்த பாக்யராஜ் மலையாளியாகவும் நடித்தது படத்தில் முக்கியமான விஷயம்

* அந்த 7 நாட்கள் கிளைமாக்சை மட்டும் நீங்க இயக்கி தர முடியுமா என்று குருநாதர் பாரதிராஜாவிடம் கேட்டு இருக்கிறார் பாக்யராஜ். அவரோ, 'படத்தோட ஸ்கிரிப்ட் பக்காவாக இருக்கும். கிளைமாக்சை மட்டும் நான் இயக்கினாலும், படத்தை நானே இயக்கியதாக தகவல் பரவும். அது உன் திறமையை பாதிக்கும். நீயே இயக்கு' என்று அட்வைஸ் செய்து இருக்கிறார்.

* முதலில் டாக்டராக நடித்த ராஜேஷ் கேரக்டரில் தான் பாக்யராஜ் நடிக்க இருந்தாராம். ஆனால், எம்எஸ் விஸ்வநாதன், அவர் உதவியாளர் பிரசாத் செல்ல சண்டைகளை நேரில் பார்த்து தான் மலையாளி இசையமைப்பாளர் என காமெடி கலந்த கேரக்டரில் நடிக்கலாம் என திரைக்கதையை உருவாக்கினாராம்.

* தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'அந்த 7 நாட்கள்' படம், தெலுங்கில் 'ராதா கல்யாணம்' (1981), ஹிந்தியில் 'வோ சாத் தீன்' (1983), கன்னடத்தில் 'லவ் மாடி நோடு' (1989) என ரீமேக் செய்யப்பட்டது. சமீபத்தில் கூட இதே தலைப்பில் இன்னொரு கதை வந்தது. அந்த படத்திலும் அமைச்சராக நடித்தார் கே. பாக்யராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

kamalino, Bangalore
2026-10-27 15:27:15

காதல் ஓவியம், அந்த ஏழு நாட்கள், Dude — இந்த மூன்று படங்களுக்கும் இடையே சொல்லப்படாத ஓர் இணைப்பு இருக்கிறது.


kamalino, Bangalore
2026-10-27 15:26:41

காதல் ஓவியம், அந்த ஏழு நாட்கள், டியூட் — இந்த மூன்று படங்களுக்கும் இடையே சொல்லப்படாத ஓர் இணைப்பு இருக்கிறது.