'கந்தன் கருணை' முதல் 'சிந்து பைரவி' வரை: சிவகுமார் நடிப்பில் பிரபலமான படங்கள்
தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் சிவகுமார் இன்று (அக்.,27) தனது 85வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1965ம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிக்க, திருலோகசந்தர் இயக்கிய 'காக்கும் கரங்கள்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சிவகுமார். பழனிசாமி என்ற பெயரை இந்த படத்தில்தான் சிவகுமார் என மாற்றினார்கள். இதுவரை 193 படங்களில் சிவகுமார் நடித்து இருக்கிறார். 2001ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் உன்வாசம்' படத்துக்குபின் நடிப்பதை நிறுத்திவிட்டார். சிவகுமார் நடித்த படங்களில் மக்களின் மனதில் நிற்கும் டாப் 10 கேரக்டர்கள் எது தெரியுமா?
1) முருகப்பெருமான் / கந்தன் கருணை
ஏ.பி.நாகராஜன் இயக்கிய கந்தன் கருணை படத்தில் முருக கடவுள் வேடத்தில் நடித்தார் சிவகுமார். இன்றைக்கும் சினிமாவில் முருகன் என்றால் சிவகுமார்தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு அவர் தோற்றம் அந்த படத்தில் பொருந்தியது. 'அறுபடை வீடு கொண்ட' பாடலில் அவரை திரையில் பார்த்தவர்கள் தங்களை அறியாமல் கை கூப்பி வணங்கினார்கள். குறிப்பாக, குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் படத்தில் இடம் பெற்ற 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், மனம் படைத்தேன்' ஆகிய பாடல்கள் பாடல்கள் இன்றும் பிரபலம். பிற்காலத்தில் சிவகுமார் மகன்களான சூர்யா, கார்த்தி ஆகியோரும் முருகனாக படங்களில் சில சீன்களில் வந்தது தனிக்கதை.
2) ஜே.கே.பி / சிந்து பைரவி
கே. பாலசந்தர் இயக்கத்தில் சிவகுமார் நடித்த இந்த படம் 1985ல் வெளியாகி, 3 தேசிய விருதுகளை பெற்றது. கர்நாடக சங்கீத பாடகராக, குடிகாரனாக நடிப்பில் மிரட்டினார் சிவகுமார். பாலசந்தர் இயக்கத்தில் நடிப்பது சுகமான அனுபவம், ஜேசுதாஸ், எஸ்பிபி, இளையராஜா ஆகியோர் அந்த கேரக்டருக்கு உயிர் ஊட்டினார்கள். நான் நடித்த படங்களில், என்னை உலகம் அறிய செய்த படங்களில் சிந்துபைரவி முக்கியம் என சிவகுமாரே சொல்லியிருக்கிறார்.
3) செம்பட்டையன் / ரோசாப்பூ ரவிக்கைகாரி
இது சிவகுமாரின் 100வது படம். தேவராஜ்-மோகன் இயக்கினார்கள். ஸ்ரீகிருஷ்ண அலனஹள்ளியின் குறுநாவலை அடிப்படையாகக் கொண்ட 1978ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'பரசங்கட கெண்டேதிம்மா' தாக்கத்தில் படம் உருவாக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் வசிக்கும் வண்டிச்சோலை என்ற மலைகிராமத்தில் வசிக்கும் அப்பாவி வாலிபனாக சிவகுமார் நடித்து இருந்தார். நாகரீகமான, அழகான மனைவியின் துரோகத்தால் பாதிக்கப்பட்டவராக சிவகுமார் வருவார். அவர் கெட்அப், நடிப்பை பாராட்டாதவர்கள் கிடையாது. இளையராஜா இசையில் 'வெத்தல வெத்தல' பாடல், 'உச்சி வகுந்தெடுத்து' பாடல்கள் ஹிட்டாகின. இந்த படத்தின் 100வது நாள் விழாவில் எம்ஜிஆர் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
4) டாக்டர் சுகுமார் / பாசப்பறவைகள்
கொச்சி ஹனீபா இயக்கத்தில் 1988ல் வெளியான படம். முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதினார். அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாகக்கொண்ட கோர்ட் ரூம் டிராமா. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, திருப்பங்கள், சிவகுமார் நடிப்பு பேசப்பட்டது. அண்ணன், தங்கை பாசத்தில் சிவகுமார், ராதிகாவும் சிறப்பாக நடித்து இருந்தனர்.
5) கஜா / வண்டிச்சக்கரம்
கே.விஜயன் இயக்க, வினுசக்ரவர்த்தி கதை, வசனம் எழுதிய இந்த படத்தில் சிவகுமார் கெட்அப்பே முரட்டு மீசை, வெள்ளை ஜிப்பா, சிகரெட் என வித்தியாசமாக இருக்கும். மார்க்கெட் தாதா கஜாவாக வருவார். அவருக்கு ஜோடி சரிதா. மனைவியின் அன்புக்காக மாறும் ரவுடியாக நடித்த சிவகுமாருக்கு சில விருதுகள் கிடைத்தன. இந்த படத்தில்தான் சில்க் ஸ்மிதா அறிமுகம் ஆனார்.
6) அரவிந்தன் / அக்னிசாட்சி
கே. பாலசந்தர் இயக்கத்தில் சிவகுமார், சரிதா நடித்த படம். மனநிலை பாதிக்கப்பட்ட சரிதா கணவராக வருவார். ஆரம்பத்தில் இயல்பான மனிதர் மாதிரி தெரிந்தாலும் கோபப்பட்டாலும், மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை தெரிந்தவுடன் சிவகுமார் கேரக்டர் மாறும். அந்த இடங்களில் சிவகுமார் நடிப்பு அருமை. 'வா மச்சான் வா, வண்ணாரப்பேட்டை' பாடல் ஹிட்டானது.
7) தியாகராஜன் / அன்னக்கிளி
ஆயிரத்து 400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவின் முதல் பட ஹீரோ சிவகுமார்தான். இதில்
பள்ளி ஆசிரியராக வருவார். ஆர்.செல்வராஜ் கதை எழுத, பஞ்சு அருணாசலம் வசனம் எழுத, தேவராஜ் மோகன் இயக்கியிருந்தனர். அழகான காதல் கலந்த குடும்ப கதை.
8) பழனியப்பன் / இன்று நீ நாளை நான்
மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய சற்றே உணர்வுபூர்வமான கதை. சிவகுமாரும், லட்சுமியும் பல சீன்களில் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருப்பார்கள். சி.ஏ.பாலனின் 'துாக்குமர நிழலில்' என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவாகப்பட்ட படம். குறிப்பாக, ஜெயில் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் சிவகுமாரின் நடிப்புக்கு நல்ல உதாரணம்.
9) வேம்பு அய்யர் / மறுபக்கம்
கே. எஸ். சேதுமாதவன் இயக்கிய இப்படம், இந்திரா பார்த்தசாரதியின் 'உச்சிவெயில்' நாவலை அடிப்படையாகக் கொண்டது. இதில் சிவகுமார் மற்றும் ஜெயபாரதி ஆகியோரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் (தங்கத்தாமரை) படம் பெற்றது. வேதங்களைக் கற்றுத் தேர்ந்த, பழமைவாத எண்ணங்கள் கொண்ட ஒரு பிராமணத் தந்தையாகவும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுத் தன் கடந்த கால நினைவுகளுடன் போராடும் ஒரு முதியவராகவும் மிகச் சிறந்த நடிப்பை இதில் அவர் வெளிப்படுத்தியிருப்பார்.
10) மாணிக்கம் / ஏணிப்படிகள்
பி.மாதவன் இயக்கத்தில் வெளியான படம். ஒரு துப்புரவு தொழிலாளி எப்படி சினிமா நட்சத்திரம் ஆகிறார் என்பது கதை. ஷோபாவும், சிவகுமாரும் சிறப்பாக நடித்து இருந்தனர். சக துப்புரவு தொழிலாளியாக, கிராமத்தானாக சிவகுமார் வருவார். ஷோபா ஸ்டார் ஆக ஏணிப்படியாக இருப்பார் என கதை செல்லும்
இந்த படங்கள் தவிர, 'பசும்பொன், பூவெல்லாம் உன் வாசம், சேது, ஆட்டுக்கார அலமேலு, காதலுக்கு மரியாதை, பொன்னுமணி, வாட்ச்மேன் வடிவேலு, புவனா ஒரு கேள்விக்குகுறி, உயர்ந்தமனிதன், உன்னை நான் சந்தித்தேன், இல்லம், பத்திரகாளி' ஆகிய படங்களிலும் சிவகுமார் நடிப்பு பாராட்டப்பட்டது.