சீதையாக நடித்த அனுபவம்: சென்னையில் சாய்பல்லவி உருக்கம்
சென்னையில் நேற்று 'ராமாயணா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர், சீதையாக நடிக்கும் சாய்பல்லவி, ராவணனாக நடிக்கும் யஷ் மற்றும் இயக்குனர் நிதேஷ் திவாரி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர் பேசுகையில், ''ராமாயணம் நம்முடன், நம் கலாசாரத்துடன் தொடர்பு உடையது. ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து இரண்டு படங்கள் பணியாற்றியது மைல் ஸ்டோன்'' என்றார்.
சாய்பல்லவி பேசியதாவது: ஏ.ஆர்.ரஹ்மான் இசை என் பள்ளி, கல்லூரி நினைவுகளுடன் தொடர்பு உடையது. ராமாயணா படத்தில் நான் 3 ஆண்டுகளாக வேலை செய்து இருக்கிறேன். தமிழ் உச்சரிப்பு, தமிழ் டயலாக் கூட பக்காவாக வந்து இருக்கிறது. ஜப்பான், சைனீஸ் மொழியில் கூட இந்த படம் வருகிறது.
நான் நடித்த 'அமரன்' மட்டுமல்ல, 'மகாராஜா, பத்தா' என ஏகப்பட்ட படங்களை பார்த்து இருக்கிறார் ரன்பீர் கபூர். இதில் ராமராக அவ்வளவு அமைதியாக, அழகாக நடித்து இருக்கிறார். இந்தியாவில் இந்த நிகழ்ச்சியுடன் ராமாயணா விளம்பர நிகழ்ச்சிகள் முடிகிறது. ராமாயணாவில் சீதை போன்ற ஒரு தெய்வீகக் கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. கடவுளாக நடிக்க வேண்டும் என்றால் அதற்கு பெரும் கண்டிப்புடன், நம் மனதையும் ஆன்மாவையும் முழுமையாக ஒப்படைத்தால் மட்டுமே சிறந்த நடிப்பு வெளிப்படும்.
சீதையாக நடிப்பதற்காக நான் தினமும் படப்பிடிப்பு தளத்தில் தியானம் செய்தேன். ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடிக்க சீதா தேவி தனக்கு வழிகாட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டேன் இந்தத் திரைப்படத்தில் தமிழில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாகவும், ஒரு நேரடித் தமிழ்ப் படத்திற்கு எப்படி இருக்குமோ அதே போன்ற நளினத்துடனும் நேர்த்தியாக அமைந்துள்ளது. இவ்வாறு பேசினார்.
ஏ.ஆர்.ரஹ்மானை அவர் இசையை, சின்ன வயதில் தான் கேட்ட அவர் பாடல்களை புகழ்ந்து பேசினார் யஷ். அடுத்து அக்டோபர் 27ம் தேதி லாஸ் ஏஞ்சலில் 'ராமாயணா' படத்தின் சிறப்பு பிரிமியர் நடக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 5ம் தேதி பல ஆயிரம் தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகிறது.