தனுஷ் மினி மாநாடு நடத்துகிறாரா? : அவர் கட்சி பெயர் இதுவா?
கடந்த சில வாரங்களாக நடிகர் தனுஷ் குறித்து மீடியாவில், சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட செய்திகள். சினிமா தவிர அரசியல் செய்திகளும் அதிகம் வருகின்றன. அதற்கேற்ப அவர் தனது ரசிகர் மன்றத்தை, நற்பணி இயக்கமாக மாற்ற, அது இன்னும் அதிகமானது.
இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்பு டில்லிக்கு போய் வர, தனது அரசியல் கட்சியை பதிவு செய்யவே சென்று இருக்கிறார். சில அரசியல் கட்சி தலைவர்களை ரகசியமாக சந்தித்தார் என்று கூறப்பட்டது. வலது சாரி தலைவர்களை சந்தித்தார். அதை தொடர்ந்து சென்னையில் ரசிகர்களை சந்திக்கப் போகிறார். போட்டோ எடுக்கப் போகிறார், மினி மாநாடு நடத்தப்போகிறார். அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முக்கிய இடத்தை பிடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் கசிந்தன.
என்னதான் நடக்கிறது என அந்த தரப்பில் விசாரித்தால், தனுஷ் நற்பணி இயக்கம் உருவானது உண்மைதான். ஆனால் அரசியல் விஷயத்தில் அவர் அடக்கி வாசிக்கிறார். டில்லியில் என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. இப்போதைக்கு அதிமுகவில் சேருவது, சட்டசபை தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போதைக்கு அவர் ஓம் படத்தில் கவனம் செலுத்துகிறார். அந்த படத்தை வெற்றி படமாக்க, ரசிகர்கள் ஆதரவை விரும்புகிறார். அதனால், அடுத்த வாரம் சென்னையில் அவர்களுடன் போட்டோ எடுக்கப்போகிறார். பெண்கள் தனியாக போட்டோ எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இடம் தேதி, இன்னமும் முடிவாகவில்லை.
இப்போதைக்கு அவர் கவனம் சினிமாவில்தான். அடுத்த ஆண்டுக்குபின் அரசியலில் இன்னும் ஆர்வம் காண்பிக்கலாம் என்கிறார்கள். இதற்கிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை பிரிந்தாலும், அவருடன் நட்பில் இருக்கிறார். அடுத்த மாதம் கீரிசில் நடக்கும் அனிருத் திருமணத்திற்கு ஐஸ்வர்யா, மகன்களுடன் குடும்பத்துடன் செல்லப்போகிறார். அதேப்போல் அனிருத்துக்கும் அவருக்கும் இடையே சில ஆண்டுகளாக இருந்த உரசலும் இந்த திருமணத்தால் சரியாகவிட்டது. அடுத்து தனுஷ், அனிருத் கூட்டணியில் படங்கள் வரலாம் என்கிறார்கள்.
தனுஷ் கட்சிக்கு ‛தமிழர் ஜனநாயகப் பேரவை', ‛தமிழர் எழுச்சிக் கழகம்' என்ற பெயர் ஆலோசிக்கப்பட்டன. ஆனால், எதுவும் முடிவாகவில்லை. தமிழர் ஜனநாயகப் பேரவை என்றால் ஆங்கிலத்தில் ‛டிஜேபி' என்றும் தமிழர் எழுச்சி கழகம் என்றால் ‛டிஎல்கே' என்று வருகின்றன என்றும் தகவல்கள் கசிகின்றன.