நான் டாக்டர் ஆகியிருக்கணும் : நடிகர் ஆனந்த்பாபு
சைதன்யா சங்கரன் இயக்கத்தில் மறைந்த நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபு கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக சாஜிதா நடித்துள்ள படம், ‛இது நம்ம குடும்பம்'. படம் குறித்து ஆனந்த்பாபு கூறுகையில், ‛‛இது ஒரு வித்தியாசமான படம். இது நம்ம குடும்பம் என்பதற்கான அர்த்தத்தை மக்களை உணர வைக்க படத்தில் பல காட்சிகள் இருக்கிறது. நானும் வாழ்க்கையில் டாக்டர் ஆகியிருக்க வேண்டும், ஆகாதது விதி.
நான் பெங்களூரில் மருத்துவம் படிக்க வேண்டியது. ஆனால், நான் டான்சை, நண்பர்களை விரும்பினேன். பெங்களூர் செல்ல விரும்பவில்லை. அப்போது தான் எனக்கு பட வாய்ப்பு கிடைத்து, அந்த படங்கள் பெரிய வெற்றி பெற்றதால் நடிகனாகி விட்டேன். எனக்கு அப்பா சொல்லிக் கொடுத்த ஒரே பாடம், அவர் எதற்குமே திருப்தியாக மாட்டார், நன்றாக சீன் வர வேண்டும் என நடித்துக் கொண்டே இருப்பார். அதே மாதிரி ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு படி, ஒரு மைல்கல்' என்றார்.
இதில் ஹீரோயினாக நடித்த சாஜிதா பேசுகையில், ‛‛இந்த படத்தில் நடித்து முடித்தவுடன் கேன்சர் என்ற பெரிய விஷயம் என் வாழ்க்கையில் வந்தது. நான் இங்கு வந்து நிற்பேன் என்று நினைக்கவே இல்லை. இப்போது கேன்சரை ஜெயிச்சு இங்கு வந்திருக்கிறேன்'' என்றார்