நெஞ்சம் மறப்பதில்லை : உண்மை கதையை தழுவி உருவானது
ஸ்ரீதர் இயக்கிய மிக முக்கிய படங்களில் ஒன்று 'நெஞ்சம் மறப்பதில்லை'. இந்த படத்தில் கல்யாண்குமார், தேவிகா, எம்.என்.நம்பியார், எஸ்.வி. சஹஸ்ரநாமம், நாகேஷ், மனோரமா, பத்மினி பிரியதர்ஷினி, மாலி, கரிகோல் ராஜு மற்றும் மகாலிங்கம் ஆகியோர் நடித்தனர். விஸ்நாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர்.
காதலுக்கு எதிரான ஜமீன்தாரான நம்பியாரின் மகன் கல்யாண் குமார். அவர் தாழ்த்தப்பட்ட பெண்ணான தேவிகாவை காதலிப்பார். இது பிடிக்காத நம்பியார் தேவிகாவை சுட்டு கொன்று விட்டு மகனை வீட்டுச் சிறையில் அடைத்து விடுவார். 'எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களை சேர விட மாட்டேன்' என்று சபதம் எடுப்பார். அந்த சிறையிலேயே உயிரிழப்பார். மறுபிறவியில் கல்யாண் குமாரும், தேவிகாவும் பிறந்து ஒருவரை ஒருவர் காதலிப்பார்கள். 100 வயதை கடந்து நம்பியார் இப்போதும் உயிரோடு இருப்பார். இந்த பிறவியிலும் அவர் காதலர்களை பிரிக்க முயற்சிப்பார் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் மறுபிறவியை அடிப்படையாக கொண்டதால் படத்திற்கு அப்போது சில எதிர்ப்புகளும் இருந்தது. ஆனால் இது முழுக்க முழுக்க கற்பனை கதையல்ல. நிஜத்தில் நடந்த ஒரு நிகழ்வோடு கற்பனை கலந்து உருவானது.
டில்லியில் வசித்து வந்த சாந்தா தேவி என்ற ஒன்பது வயது சிறுமி, தனது முற்பிறவி குறித்த அனைத்து விவரங்களும் தனக்கு நினைவிருப்பதாகக் கூறினார். அந்த முற்பிறவியில் அவர் டில்லியிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரா என்ற சிறிய நகரத்தில் வாழ்ந்ததாகத் தெரிவித்தார்.
தனது முற்பிறவி கணவரின் பெயர் 'கேசி' என்றும், தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், அதன்பிறகு தான் இறந்துவிட்டதாகவும் கூறினார். அந்த சிறுமியை அவர் சொன்ன ஊருக்கு அழைத்துச் சென்றபோது தான் முன்பின் அறியாத அந்த ஊரை பற்றிய தகவல்களை துல்லியமாக சொன்னார். தனது முற்பிறவி கணவனையும் அடையாளம் காட்டினார். இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டே ஸ்ரீதர் 'நெஞ்சம் மறப்பதில்லை' கதையை எழுதினார்.