ஜெயிலர் 2, ரணபாலி : அவதூறு கருத்துக்களுக்கு நீதிமன்றத் தடை
இந்தியத் திரையுலகத்தில் சமீப காலங்களில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் அல்லது பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது, சமூக வலைத்தளங்களில், ஆன்லைன் இணையதளங்களில் பகிரப்படும் அவதூறு கருத்துக்களுக்கு நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக சினிமா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் இணையதளங்களில் உள்ள 'ரேட்டிங், ரிவியூஸ்' ஆகியவை வெளியாவதற்கும், எக்ஸ், யு டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் உள்ளிட்ட தளங்களில் பதிவாகும் அவதூறு கருத்துக்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு, ''தி பாரடைஸ், டாக்ஸிக், தி டெவில், மார்க், 45” ஆகிய படங்கள் இந்த மாதிரியான தடை உத்தரவைப் பெற்றுள்ளன. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்து இன்று வெளியாகி உள்ள 'ரணபாலி' படத்திற்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்புவதற்கு பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் தடை விதித்துள்ளது. அது போலவே 'ஜெயிலர் 2' படத்திற்கும் தடை உத்தரவு பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வழக்கு விசாரணை நீதிமன்றம் குறித்த தகவல் கிடைக்கப் பெறவில்லை.
இதன் காரணமாக ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளத்தில் இந்த இரண்டு படங்களுக்கான ரேட்டிங் மற்றும் ரிவியூஸ் ஆகியவை நீதிமன்ற உத்தரவுப்படி முடக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.