கிராமத்து சடங்குகளை திரைக்கு கொண்டு வந்த சின்னக் கவுண்டர்
ஆர்.வி.உதயகுமார் இயக்கதில் விஜயகாந்த் நடித்த 'சின்ன கவுண்டர்' ஒரு வெள்ளி விழா படம். இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரின் மாமா ஒரு கிராம பஞ்சாயத்து தலைவர், அரசு பணத்தோடு தன் சொந்த பணத்தையும் செலவு செய்து ஊரை காத்தவர். அவரை மனதில் வைத்து உருவானதுதான் சின்ன கவுண்டர் படம்.
இந்த படத்தின் மூலம் பல கிராமத்து சடங்குளை திரைக்கு கொண்டு வந்தார் உதயகுமார். ஒரு நபரை அடமானம் வைத்து மீட்பது, அரசுக்கு கட்டுப்படாத கிராம பஞ்சாயத்துகளும், அதன் தீர்ப்புகளும், ஊரே கூடி ஒருவரை தண்டிப்பது, மன்னிப்பது இப்படியான பல விஷயங்கள் திரைக்கு கொண்டு வரப்பட்டது.
முக்கியமான ஒன்று 'மொய் விருந்து'. தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சுற்றி அறுபதுகளில் உருவானதொரு பழக்கம். பொருளாதார ரீதியாகச் சிரமத்தில் இருப்பவர்களுக்கு அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மறைமுகமாக நிதியுதவி செய்யும் சடங்கு இது.
இதற்காக ஆடு வெட்டி, கறி விருந்து நடத்தப்படும். ஆயிரக்கணக்கில் மக்கள் திரளாக வந்து மொய் செய்வார்கள். மொய் பெற்றுக் கொண்டவர்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு பதில் மொய் கட்டாயமாக செய்ய வேண்டும். இதைச் செய்ய முடியாமல் அவமானப்பட்டவர்களும் உண்டு. இப்போதும் மொய் விருந்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சடங்கு என்ற பெயரில் நடத்தப்படும் இவற்றை உயர்த்தி பிடிப்பது தவறு என்றும், ஒரு சமுதாயத்தை உயர்த்தியும், இன்னொரு சமுதாய் மக்களை அவர்களின் அடிமையாக சித்தரித்தும் படம் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனமும் உண்டு. இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி படம் மாபெரும் ஹிட்டாக அமைந்ததோடு விஜயகாந்த்தின் திரைப்பயணத்தில் முக்கிய படமாகவும் இடம் பிடித்தது.