இளையராஜாவுடன் வெற்றியைக் கொண்டாடிய 'டோரதி' குழுவினர்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் 'டோரதி'.
இப்படம் நிதானமான ஒரு வெற்றியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. ஒரு சாரார் இப்படம் குறித்து எதிர்ப்புகள் தெரிவித்தாலும் மறுபக்கம் எதிர்மறை கருத்துக்களை மீறி படம் வரவேற்பைப் பெற்றது.
படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமான இளையராஜா, ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சிக்கான சுற்றுப் பயணத்தில் இருந்தார். சென்னை திரும்பிய அவரை படக்குழுவினர் அவரது ஸ்டுடியோவிற்குச் சென்று சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர். அவருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இந்நிகழ்வின் வீடியோவையும் அவர் பகிர்ந்து, “டோரதி'யின் வெற்றியை சாத்தியமாக்கிய அந்த ஜாம்பவானுடன் கொண்டாடுகிறோம். அனைத்திற்கும் நன்றி மேஸ்ட்ரோ இளையராஜா சார். டோரதி என்பது ராஜா சம்பவம், டோரதி என்பது ராஜாவின் ஆழ்ந்த ஈடுபாடு, டோரதி என்பது ராஜாவின் பேரின்பம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.