வாசகர்கள் கருத்துகள் (1)
One main reason - taking 2 years to shoot a movie - imagine financing cost !!!Then hype they give b4 release another jack for failure
'அஞ்சாறு ஸ்டேட்கள்ல ஆயிரம் கோடி அடிக்கணும்'.. இது ஏதோ நேஷனல் லெவல் பெரிய கோஷ்டிகளின் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்துவிட வேண்டாம். கதை தயாராவதற்கு முன், நட்சத்திர தேர்வுகள் முடிவடைவதற்கு முன், ப்ரி புரடக்ஷன் பணிகள் கூட தொடங்கப்படாத நிலையில் பான் இந்தியா படக் குழுவினரின் பேராசை இந்த ஆயிரம் கோடிதான்.
ஜெயிலர் முதல் பாகம் சுமார் 600 கோடி வசூலை எட்டியிருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் எப்படியாவது ஆயிரம் கோடியைத் தொட்டுவிட வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கும் 'ஏ' சர்டிபிகேட்டை இம்முறை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்பதுதான் ரஜினியின் இப்போதைய தவிப்பு என்கிறார்கள்.
கட்டம் சரியில்லை
ஆனால் 'ஏமாந்த குழுவினரில் நானும் ஒருத்தன்' கதையாக சமீபகாலமாக பான் இந்தியா படங்களுக்கு கட்டம் சரியில்லை. தொடர்ந்து நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் என்பதுதான் கள நிலவரம். அதிலும் குறிப்பாக சமீபத்தில் அடுத்தடுத்து ரிலீஸாகி பாக்ஸ் ஆபிஸில் தோல்விகளை சந்தித்ததோடு, விமர்சகர்கள், ரசிகர்களின் எகத்தாள கமெண்டுகளையும் சந்தித்த இரு படங்கள் 'டாக்ஸிக்' மற்றும் 'பாரடைஸ்'.
இந்த கமெண்டுகளால் மனம் புண்பட்டு இரு படக்குழுவினருமே சோஷியல் மீடியாக்களில் தங்கள் படம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிடக்கூடாது என்று கோர்ட்டை அணுகிய பரிதாபங்களும் நடந்தேறின. ஆனால் இந்தப் படங்களை இடது கையால் புறந்தள்ளின அதே ரசிகர்கள்தான் 'காந்தாரா', 'புஷ்பா', 'கே.ஜி.எப்' போன்ற கொண்டாடி தியேட்டர்களில் சில்லரைகளை சிதறவிட்டார்கள் என்பதை மேற்படி படக்குழுவினர் மறந்துவிடக்கூடாது.
தோல்வி எங்கே துவங்குகிறது
இந்த பான் இந்திய படங்களின் தோல்வி எங்கே துவங்குகிறது என்பதை தயாரிப்பாளர்கள் ஆராய வேண்டிய நேரம் இது. ஒரு படத்தை பான் இந்தியா படம் என்கிற பிராண்டுக்குள் கொண்டுவர முயலும்போதே இதன் தோல்வி துவங்கி விடுகிறது. இதற்கான கதையை முடிவு செய்யும்போது ஏழெட்டு மாநில மக்களை ஒருசேர ரசிக்க வைக்கிற கதையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இயக்குநர் தள்ளப்படுகிறார். நாமோ ஒரு நாலு தெரு இருந்தால் அங்கே ஏழு விதவிதமான கலாசாரத்தை பின்பற்றுகிற அளவுக்கு விசேஷமானவர்கள்.
‛நீ கட்டும் சேலை மடிப்புல நான் கிறங்கிப் போனேன்டி' என்று சேலை மடிப்பை வைத்தே 'பொண்ணுக்கு எந்த ஊரு?' என்று கண்டுபிடிப்பவர்கள். ஆந்திர வேஷ்டிக் கட்டை வைத்து டப்பிங் படம் என்று கண்டுபிடிப்பவர்கள். ஸோ… ஒரு கதைக்குள் ஏழெட்டு மாநில கலாசாரம் மிக்ஸ் பண்ணப்படுகிறபோது ரசிகர்கள் மிக சீக்கிரமாகவே வெக்ஸ் ஆகிவிடுகிறார்கள். குறிப்பாக 'காந்தாரா' வெற்றியடைந்ததால் பெரும்பாலான பான் இந்திய படங்கள் காவல் தெய்வங்கள், மலை தெய்வங்கள், முன்னோர் வழிபாடு என்று அரைத்த மாவையே அரைக்கத்தொடங்கின.
இந்த தெய்வ எபெக்டுகளுக்காக மட்டுமின்றி, கதை, இசை, ஒளிப்பதிவு, நடிகர்களைத் தாண்டி பெரும்பாலான பான் இந்திய படங்கள் கிராபிக்ஸை அதிகம் நம்பி அதற்காக பல கோடிகளை விரயம் செய்வதும் இன்னொரு மைனஸ்.
வலிய திணிக்கப்படும் நடிகர்கள்
இதன் அடுத்த அங்கமாக பான் இந்திய படங்களில் நாலைந்து மாநில முன்னணி நடிகர்கள் வலிந்து திணிக்கப்படுகிறார்கள். ஒரு நாகார்ஜுனாவோ, ஷாருக் கானோ, மோகன்லாலோ படத்துக்குள் கொண்டு வரப்படுகிறபோது, அவர்களுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் சில காட்சிகளை வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டியிருப்பதால் ஒரிஜினல் கதைக்கு சேதாரம் ஏற்படுகிறது.
இப்படி பல மாநில சூப்பர் ஸ்டார்கள் ஒரே படத்தில் குவிக்கப்படும்போது, அவர்களுக்கான சம்பளமே பெரும் பட்ஜெட் ஆகிவிடுவதால் படத்துக்கு நியாயமாக செய்ய வேண்டிய செலவுகள் தவிர்க்கப்பட்டு கதையை பலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.
இதே பலவீனத்தின் தொடர்ச்சியாக, இந்த பான் இந்தியா படத்தயாரிப்பாளர்கள் படத்தின் தரத்தை விளம்பரத்தை அதிகம் நம்புகிறார்கள். இப்பட புரமோஷன்கள் பெரும்பாலும் ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டிகளுடன் படு ஆரம்பரமாக நடத்தப்படுகின்றன. இந்தியா முழுதும் உள்ள பத்திரிகையாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த புரமோஷன் செலவுகள் பல சமயங்களில் பல கோடிகள் ஆகிவிடுகின்றன.
நல்ல கதை ஜெயிக்கும்
சுருக்கமாக சொல்வதானால், இந்த பான் இந்தியா படங்கள் நல்ல கதை சொல்வது என்ற டிராக்கிலிருந்து மாறி 'கதையடிப்பது' என்ற டிராக்கிற்கு மாறிவிட்டார்கள் என்பதால் இந்த தோல்விகள் தொடர்கின்றன.
'பான் இந்தியா' என்ற பிராண்ட் நேம் புழக்கத்தில் இல்லாதபோதே நல்ல கதைகள் கொண்ட அத்தனை மொழி படங்களும் டப்பிங் செய்யப்பட்டோ, ரீ மேக் செய்யப்பட்டோ இந்தியா முழுக்க ஹிட் அடித்திருக்கின்றன என்பதற்கு ஆதாரமாக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைப் பட்டியலிட முடியும்.
இனியாவது கதை சொல்லுங்க… கதை விடாதீங்க.
One main reason - taking 2 years to shoot a movie - imagine financing cost !!!Then hype they give b4 release another jack for failure