கொச்சின் ஹனிபா மறைந்து 16 வருடங்கள் கழித்து சொந்த வீடு கட்டி குடியேறிய மனைவி, மகள்கள்
பிரபல மலையாள குணச்சித்திர மற்றும் காமெடி நடிகரும், இயக்குனருமான கொச்சின் ஹனிபா கடந்த 2010ல் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழில் இரண்டு படங்களை இயக்கியுள்ளதுடன், 'முதல்வன்', 'சிவாஜி' என பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு பாசிலா என்கிற மனைவியும், சபா மற்றும் மர்வா (ட்வின்ஸ்) என்கிற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கொச்சின் ஹனிபா மறைந்து 16 வருடங்கள் ஆன நிலையில் இதுநாள் வரை வாடகை வீட்டில் வசித்துவந்த அவரது மனைவியும் மகள்களும், தற்போது கொச்சி வெண்ணலாவில் ஒரு புதிய வீடு கட்டி குடியேறியுள்ளனர்.
கொச்சின் ஹனிபா மறைந்தபோது அவரது இந்த இரண்டு மகள்களுக்கும் வெறும் நான்கு வயதுதான். ஹனிபாவின் சில சொத்துக்கள் மற்றும் சேமிப்புகள் இவர்கள் 18 வயதை எட்டிய பிறகு கிடைக்கும் வகையில் சட்ட சிக்கலில் இருந்தன. தற்போது அந்த சொத்துக்கள் மீதான உரிமைகள் மற்றும் சேமிப்பு தொகைகள் ஆகியவை ஹனிபாவின் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இவர்கள் மூன்று தளங்களுடன் 5 படுக்கையறைகள் கொண்ட பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி குடியேறி உள்ளனர். இந்த நிகழ்வில் நடிகர் திலீப் உள்ளிட்ட பல மலையாள திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.