20 ஆண்டுகளாக வெற்றிக்கு காத்திருக்கும் பிரஜின்
சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் 'அந்தரன்'படம் ஜூன் 25ல் வெளியாகிறது. இதில் இவானா, வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், விஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இதில் பிரஜின் பேசுகையில், ''இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறேன். சினிமா வாழ்க்கையில் ஏற்ற இறங்கங்கள், வெற்றி, தோல்வி மாறி, மாறி வருகிறது. ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள். நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர். பலரிடம் பழகி இருக்கிறேன். அதில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் பிக்பாஸ் வீட்டில் விக்ரமுடன் தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன். யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ, அவர்களுடன் தான் உங்களுக்கு சண்டை வரும். அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும். என் மனைவி சான்ட்ராவும் என் வெற்றிக்காக காத்திருக்கிறார் என்றார்.
நடிகையும், பிரஜின் மனைவியுமான சான்ட்ரா பேசுகையில், ‛‛பல சமயங்களில் பிரஜின் அழுது இருக்கிறார். நான் உழைக்கிறேன், நேர்மையாக இருக்கிறேன் என புலம்பி இருக்கிறார். இந்த படம் வெற்றியை கொடுக்கும்'' என்று பேசினார்.
இந்த படவிழாவுக்கு முன்னதாக அதே தனியார் பிரிவியூ தியேட்டரில் பிரஜின் ஹீரோவாக நடித்த சம்ஹாரம் என்ற படத்தின் பிரஸ் ஷோ நடந்தது. அதில் பிரஜின் கலந்து கொள்ளவில்லை. அந்த படக்குழுவினர், இயக்குனர் பிரஜினை திட்டி தீர்த்து பேட்டி கொடுத்தனர், பிரஜின் தரப்போ சம்பள பாக்கி என்பதால் அந்த நிகழ்ச்சிக்கு அவர் செல்லவில்லை என்றது.