என்றும் பதினாறாக ஒலித்த கந்தர்வக் குரலோன் எஸ்பி பாலசுப்ரமணியம்
தென்னிந்தியத் திரையிசை உலகின் தெவிட்டாத தேன் குரலாய், அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக திரையிசை என்ற வானில் நித்தம் பல புத்தம் புது கானம் பாடி, நம் சித்தமெல்லாம் மகிழ்வித்த வித்தக கானக் குயில் எஸ்பி பாலசுப்ரமணியமின் பிறந்த தினம் இன்று…
தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், 1960களின் பிற்பகுதியில் தமிழ் திரையிசையில் பின்னணி பாடும் வாய்ப்பினைப் பெற்றார். இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் “ஹோட்டல் ரம்பா” என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகி எல் ஆர் ஈஸ்வரியோடு இணைந்து இவர் பாடிய ஒரு பாடல்தான் “அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு” என்ற பாடல். துரதிர்ஷ்ட வசமாக இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடராமல் கைவிடப்பட, இந்தப் பாடலும் வெளிவராமல் அவரது முதல் பாடலாக அமையாமல் போனது.
மீண்டும் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் 1969ஆம் ஆண்டு வெளிவந்த “சாந்தி நிலையம்” திரைப்படத்தில் நடிகர் ஜெமினி கணேசனுக்காக இவர் பின்னணி பாடிய “இயற்கை என்னும் இளைய கன்னி” என்ற பாடலின் மூலமாக தமிழ் திரையுலகில் ஒரு பின்னணிப் பாடகராக தடம் பதித்தார் எஸ்பி பாலசுப்ரமணியம்.
ஒரு முறை எம் ஜி ஆர் நடித்து, 1968ஆம் ஆண்டு வெளிவந்த “குடியிருந்த கோயில்” திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பாடல் பதிவு நடந்து கொண்டிருக்கையில், அந்தப் படத்தில் இடம் பெற்ற “உன் விழியும் என் வாளும் சந்தித்தால்” என்ற தெலுங்கு பதிப்பிற்கான பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிக் கொண்டிருக்க, அங்கு வந்திருந்த எம்ஜிஆர் அந்தப் பாடலைக் கேட்டு, அந்தப் பாடகர் யார்? என விசாரித்து, அதன்பின் அப்போது அவர் எடுத்துக் கொண்டிருந்த “அடிமைப் பெண்” திரைப்படத்தில் இடம் பெற்ற “ஆயிரம் நிலவே வா” என்ற பாடலைப் பாடுவதற்கு இந்தப் பையனை பயன்படுத்திக் கொள்ளலாமா? என்று இசையமைப்பாளர் கேவி மகாதேவனிடம் கேட்க, பாடுவதற்கு மிகவும் கடினமான பாடல் என்று தெரிந்தும், இசையமைப்பாளர் கேவி மகாதேவனும் சரி என தலையசைக்க, அந்தப் பாடல் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டது. பின்னணிப் பாடகி பி சுசீலாவுடன் இணைந்து மிக அற்புதமாக பாடியிருப்பார் எஸ்பி பாலசுப்ரமணியம்.
எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் வந்த “சாந்தி நிலையம்” திரைப்படம் தான் தமிழில் அவர் அறிமுகமான முதல் திரைப்படம் என்றாலும், வெளியீட்டில் முந்திக் கொண்டது என்னவோ “அடிமைப் பெண்” திரைப்படமே. எனவே எஸ்பி பாலசுப்ரமணியத்தின் முதல் தமிழ் திரையிசை பிரவேசமாக ஆனது “ஆயிரம் நிலவே வா” என்ற “அடிமைப் பெண்” படப்பாடல்.
எம் ஜி ஆருக்காக பின்னணி பாடிய எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு சிவாஜிக்காக பின்னணி பாடும் ஓர் அரிய வாய்ப்பும் கிடைக்கப் பெற்றார். 1971ம் ஆண்டு இயக்குநர் சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் சிவாஜி நடிக்க, எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த “சுமதி என் சுந்தரி” என்ற திரைப்படத்திற்காக பாடும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருந்தாலும், ஒரு பெரிய நடிகருக்காக பின்னணி பாடப் போகின்றோம் என்ற ஒரு சிறு அச்சமும் அன்றைய வளரும் பாடகராக இருந்த எஸ் பி பாலசுப்ரமணியத்திற்குள்ளும் இருந்திருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. பாடல் பதிவு நாளன்று அங்கு வந்த நடிகர் சிவாஜி கணேசன், எஸ்பி பாலசுப்ரமணியத்தை அழைத்து, நீ எனக்காக பாடுவதாக நினைத்து உன் குரலில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். நீ பாடுவதை பாடிவிடு. உன் குரலுக்கேற்றவாறு நான் என் உடல் மொழியை மாற்றி நடித்து விடுகின்றேன் என்று அவரை உற்சாகப்படுத்த, பின் பாடல் பதிவானது. இன்றும் அந்தப் பாடலைக் காட்சி வடிவில் பார்க்கும் போது அன்றைய இளம் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் குரலும், அதற்கேற்ற வசீகரமான நடிகர் சிவாஜி கணேசனின் உடல் மொழியும் பார்ப்போரின் கண்களையும், மனதையும் வருடி, குளிர்விப்பது போலவே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
1970களின் பிற்பகுதியில் தென்னிந்திய திரையிசையின் போக்கை மடை மாற்றம் செய்து, ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணியவர்தான் இளையராஜா. எஸ் பி பாலசுப்ரணியம் - இளையராஜா என்ற இந்த இணை 1980 மற்றும் 90களில் ஒரு இசை ராஜாங்கமே நடத்தி, திரையிசை ரசிகர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்றால் அது மிகையன்று.
“இளைய நிலா பொழிகிறதே”, “நிலாவே வா”, “மன்றம் வந்த தென்றலுக்கு”, “வா வெண்ணிலா உன்னைத்தானே”, “வளையோசை கல கல கலவென”, “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, “பச்சமல பூவு நீ உச்சிமல தேனு” என மனதை வருடும் காதல் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கர்நாடக சங்கீத பாணி, மேற்கத்திய இசை பாணி, சோகப் பாடல்கள் என அனைத்து ரக பாடல்களையும் பாடி, இனி ஆச்சர்யப்படவோ, அதிசயித்துப் போகவோ ஏதுமில்லை எனும் அளவிற்கு தேன் மழையால் நம்மை நனைய வைத்து, இந்தக் கூட்டணி வழங்கிய தெவிட்டாத திரைகானங்கள்தான் எத்தனை! எத்தனை!!
திரையிசையின் பரிமாணம் வேறொரு உச்சத்தை எட்டிய காலமாகப் பார்க்கப்பட்ட காலம்தான் 1990களின் காலம். “காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே” என்று ஏஆர் ரஹ்மான் என்ற இளம் இசையமைப்பாளரோடு கைகோர்த்தார் எஸ்பி பாலசுப்ரமணியம் “ரோஜா” என்ற திரைப்படத்தின் மூலமாக ஏஆர் ரஹ்மானின் வரவிற்குப் பின் புது பின்னணிப் பாடகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கவே செய்திருந்தது என்றாலும், தனது முக்கியமான பல ஆல்பங்களுக்கு அவரது தேர்வாக இருந்தது எஸ்பி பாலசுப்ரமணியத்தின் குரல் மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை எனலாம்.
“காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே”, “என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்”, “மானூத்து மந்தையிலே”, “பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ”, “என் காதலே என் காதலே”, “அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி”, “மின்னலே”, “தொடத் தொட மலர்ந்ததென்ன”, “ஒருவன் ஒருவன் முதலாளி”, “கப்பலேறிப் போயாச்சு”, “மாயா மச்சீந்திரா”, “என்னைக் காணவில்லையே நேற்றோடு”, “தங்கத் தாமரை மகளே”, “சுத்தி சுத்தி வந்தீக”, “என் பேரு படையப்பா”, என இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இவர் மட்டுமே பாட வேண்டிய ஆல்பங்கள் என அடையாளப் படுத்தப்பட்டவையாகவே இருக்கும் என்பதை நம்மால் அறிய முடியும்.
இவர்கள் தவிர, தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என்று இவரது இசைப்பயணம் நீண்டு, இன்றிருக்கும் இளம் இசையமைப்பாளரான அனிருத் வரை பயணித்து, “தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ” என்று அவர் பாடிய பாடல் போலவே தனது குரலுக்கு என்றுமே வயோதிகம் இல்லை என்பதை நிரூபித்துச் சென்ற ஒரு அபூர்வ பாடகர்தான் எஸ் பி பாலசுப்ரமணியம். காலங்கள் மாறலாம், கலைஞர்கள் மாறலாம் ஆனால் கானம் பாடி மகிழ்வித்த இந்த கந்தர்வக் குரலோனின் குரலுக்கு மட்டும் மாற்றம் என்பது என்றுமே இருந்ததில்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது.