பிளாஷ்பேக்: மறுவாழ்வு தந்தவரை மணந்த நடிகை
1941ல் வெளியான 'மதன காமராஜன்' படத்தின் மூலம் நடன மங்கையாக திரையில் தோன்றியவர் பி.எஸ். சரோஜா. 'மகா மாயா' படத்தில் நடனமாடும்போது அந்தப் படத்தின் நடன இயக்குனர் பண்டிட் போலோ நாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு 'விகட யோகி'படத்தில் நாயகியாக நடித்தார். 1949ல் வெளியான 'கீத காந்தி' படத்தில் சரோஜா தனது கணவர் போலேநாத் ஷர்மாவுடன் இணைந்து ஆடிய நடனம் புகழ்பெற்றது. இந்த நிலையில் படப்பிடிப்புக்காக சேலத்திற்கு கணவருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த சாலை விபத்தில் சரோஜாவின் கணவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். காயங்களுடன் உயிர்பிழைத்தார் சரோஜா.
இந்த நேரத்தில் அவரை இயக்குனர் டி.ஆர் ராமண்ணாவும், அவரது தங்கையும், நடிகையுமான டி.ஆர் ராஜகுமாரியும் கவனித்துக் கொண்டனர். கணவரை திடீரென்று இழந்து நின்றபோது இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்தார். சரோஜாவின் முடிவை அறிந்த ராமண்ணா, அவரை வற்புறுத்தி மீண்டும் நடிக்க வைத்தார்.
மலையாளத் திரையுலகின் முதல் வெள்ளிவிழா காவியமாக அமைந்த 'ஜீவித நவுகா'படத்தில் நடித்தார். பிறகு தன் மீது பரிவுகாட்டி, அன்பு செலுத்திய டி.ஆர். ராமண்ணாவை மறுமணம் செய்துகொண்டார் சரோஜா. அதன் பிறகு பிரேம் நசீர், எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்ற நடிகை ஆனார்.