தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்
மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹபீபி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் கஸ்துாரி ராஜா முக்கியமான வேடத்தில் வருகிறார். இதில் கலந்து கொண்டு இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், ''இந்த படத்தில் கஸ்துாரிராஜா நன்றாக நடித்து இருக்கிறார். முதலில் படம் பார்த்தபோது அவரை யார் என தெரியவில்லை. தனுசை விட நன்றாக நடித்து இருக்கிறார். அவர் தனுசை விட 100 மடங்கு நன்றாக நடித்து இருக்கிறார்.
எனக்கு தனுசை ரொம்ப பிடிக்கும். அவரை விட இவர் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால், கஸ்துாரிராஜா படங்கள் எனக்கு பிடிக்காது. அவர் மோசமான படங்கள் எடுத்து இருக்கிறார். அவர் தனது படங்களில் இளையராஜாவை அழைத்து வருவார். ஆனால் இப்போது இந்த படத்தால் தான் வாழ்ந்து அடையாளத்தை பெற்றுவிட்டார். அவர் நடிப்பில் கூடுவிட்டு கூடு பாய்ந்து இருக்கிறார். நான் சில சமயம் எனக்காக ஒரு படம் எடுக்கிறேன். அந்த படத்தால் நஷ்டம் வரும். அடுத்து என் பாக்கெட்டை நிரப்ப, கடனை அடைக்க இன்னொரு படத்தை எடுப்பேன். அது கமர்ஷியல் படமாக இருக்கும். குரங்கு, பன்னி சினிமாவுக்கு போகாது. மனிதன்தான் போவான்.
இப்போது நாம் செல்போனுடன் வாழ்கிறோம். நண்பர்களுடன் பேசுகிறோம். எதாவது எழுதுகிறோம். எல்லா சிக்னல்களிலும் எந்த மனிதனும், சக மனிதனை திரும்பி பார்ப்பது இல்லை. இந்த படம் மனிதர்களை பார்க்க வேண்டும் என்று சொல்லி தருகிறது. நான் எமோஷனலாக பேசினால் பெந்தகொஸ்து பாதிரியார் மாதிரி பேசுவேன். என் மனைவி பெந்தகொஸ்து சேர்ந்தவர். அவரை விட்டு, இப்போது சினிமாவை திருமணம் கொண்டு விட்டேன்'' என்றார்.