சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பரிமளா அண்ட் கோ'. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இதில் ஜெயராமும் ஊர்வசியும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பதுடன், கலகலப்பான காமெடியாகவும் இந்த படம் உருவாகியுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்தில் ஊர்வசியின் நடிப்பு குறித்து நெகிழ்ச்சியான தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெயராம்.
ஊர்வசி பற்றி அவர் கூறும்போது, இந்த கதையை என்னிடம் இயக்குநர் சொல்லும்போது, முடிந்தால் கதாநாயகியாக ஊர்வசியை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறினேன். 'ஊர்வசியை ஒப்பந்தம் செய்துவிட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கிறோம்' என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு அவருக்குப் பொருத்தமான கதாபாத்திரம். ஒரு நாள் படப்பிடிப்பின்போது, மாலை நேரத்தில் அவரது சகோதரர் கமல்ராய் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அவர், அன்று மாலையே கோவையிலிருந்து கேரளா கிளம்பிச் சென்று சகோதரரின் இறுதி காரியங்களில் கலந்துகொண்டார்.
'என்னால் படப்பிடிப்பு தடைபட வேண்டாம்' என்று சொன்ன அவர், மறுநாள் மாலையே மீண்டும் பிளைட் பிடித்து படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார். இத்தனைக்கும் அன்று அவர் நடிக்க வேண்டியது அதிரடியான நகைச்சுவை காட்சி. அதனால் அவரை கொஞ்சம் கொஞ்சமாகத் தேற்றி, சகோதரரின் இழப்பிலிருந்து திசை திருப்பி அந்த காட்சியில் நடிக்கத் தயார் செய்தோம். அவரும் ஒரு பண்பட்ட நடிகையாக துக்கத்தை மறைத்துக்கொண்டு அந்த காட்சியில் மிகச் சிறப்பாக நடித்தார். நடிப்பு மீது ஒரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒருவரால் மட்டுமே இது முடியும் என்று நெகிழ்ந்து போய் கூறியுள்ளார் ஜெயராம்.