பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர்
பாலிவுட் குணச்சித்திர நடிகர் அனுபம் கெர், தான் நடத்தும் நாடகங்களில் மட்டும் புதுமை செய்பவர் அல்ல, நடைமுறையில் உள்ள விஷயங்களிலும் அதைச் செய்து காட்டுவேன் என்று சமீபத்தில் ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாகப் பிரதமர் மோடி, தனிநபருக்கான வாகன போக்குவரத்தைக் குறைத்துக்கொண்டு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள் என்று சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய அனுபம் கெர், சமீபத்தில் ஜெய்ப்பூரிலிருந்து டெல்லிக்கு கார் பயணத்தைத் தவிர்த்து, வந்தே பாரத் டிரெயினில் பயணித்துள்ளார்..
கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தூரமும் நான்கு மணி நேரப் பயணமும் கொண்ட இந்த பயணத்தின்போது, வீடியோ ஒன்றையும் எடுத்துத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள அனுபம் கெர், பிரதமர் கூறியது முற்றிலும் சரி. எரிபொருளைச் சேமிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும். இது ஒன்றும் பெரிய தியாகம் கிடையாது. நாம் அனைவரும் நமது பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களைச் செய்தாலே அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு பொறுப்பான குடிமகன் என்பது வெறும் பேச்சோடு நின்றுவிடக் கூடாது, செயலில் காட்ட வேண்டும். எல்லைகளில் பாதுகாப்பு செய்வது மட்டுமே தேச சேவை அல்ல; நமது தினசரி வாழ்க்கையில் செய்யும் இதுபோன்ற சிறிய நற்செயல்களும் தேச சேவையே என்று அவர் கூறியுள்ளார்.