பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா
இயக்குனர் விட்டலாச்சாரியா என்றாலே அவர் இயக்கிய மாயாஜால படங்கள் எல்லாம் நினைவுக்கு வரும். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் அவர் பெரும் சமுதாயப் புரட்சி படங்களை இயக்கியவர். அதில் முக்கியமான படம் 'பெண் குலத்தின் பொன் விளக்கு'.
இந்தப் படம் மூன்று பெண்களைப் பற்றியது. ஒரு சிறந்த மனைவியாகவும் பெண்மையின் இலக்கணமாகவும் திகழும் பார்வதி, இவரது கணவரின் தங்கை கலா பெண் விடுதலையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். கலாவின் தோழி லலிதா, பெண்கள் அவர்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வாழலாம் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்ற கருத்து உடையவர். இப்படி மூன்று விதமான பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் உள்ளே வரும்போது என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்ன பிரச்னைகள் உருவாகிறது உண்மையில் யார் சிறந்த பெண் என்பதுதான் இந்த படத்தின் கதை.
அசோகா பிக்சர்ஸ் சார்பில் சென்ன கேசவன் தயாரித்திருந்தார். மாஸ்டர் வேணு இசையமைத்திருந்தார். ஜெமினி கணேசன், எம்.என்.நம்பியார், எம். என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அவர் ஜாலிக்காக ஒரு மாயாஜால படம் இயக்கினார் அது சூப்பர் ஹிட்டாகவே அதே பாணியில் படங்களை இயக்க தொடங்கினார்.