பிளாஷ்பேக்: வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து, வியக்க வைத்த “அதிர்ஷ்டம்” திரைப்படம்
ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வி என்பது, திரையில் தோன்றி நடிக்கும் திரைக்கலைஞர்ககளின் பங்களிப்பு, திரை மறைவில் இருந்து செயல்படும் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு என்ற இந்த இரண்டையும் தாண்டி, அத்திரைப்படத்தை எவ்வாறு தயாரிப்புத் தரப்பினர் விளம்பரப் படுத்துகின்றனர் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகுக்கின்றது என்பதை சினிமாவை நேசிக்கும் யாவரும் அறிந்த ஒன்று.
இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப சினிமா சந்தைப்படுத்துதலுக்கு முன்னர், ஒலிபெருக்கிகள் கட்டிய அலங்கரிக்கப்பட்ட வேன்களிலும், ரிக்ஷாக்களிலும் அத்திரைப்படத்தின் சுவரொட்டியை வைத்து தெருக்களில் வலம் வந்து விளம்பரம் செய்வது, திரையரங்கின் முன் படத்தின் நாயகர்களின் பிரமாண்ட கட்-அவுட்களை வைத்து விளம்பரம் செய்வது என அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்றவாறு விளம்பர உத்திகளில் பல வித்தியாசங்களை கையாண்டு வந்த நம் தமிழ் திரையுலகம், 1939ம் ஆண்டிலேயே ஒரு நூதன முறையில் விளம்பரம் செய்து வியக்க வைத்த ஒரு திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “அதிர்ஷ்டம்”.
1939ம் ஆண்டு சினிமா பிரவேசம் செய்த கவிஞர் ச.து.சு யோகி, கதை, வசனம், பாடல்கள் எழுதி “அதிர்ஷ்டம்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். கொத்தமங்கலம் சுப்பு, வி வி சடகோபன், கே ஆர் செல்லம் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “சிறு பெண் ஏழை என்றால் மனமிறங்காதா?” என்ற பாடல் அந்நாளில் பெரிய ஹிட் அடித்திருந்தது. ரயிலிலும், பேருந்து நிலையங்களிலும் பிச்சைக்காரப் பெண்கள் இந்தப் பாடலைப் பாடி யாசிக்கத் தொடங்கியிருந்த அளவிற்கு வெகு பிரபலமாகியிருந்தது அந்தப் பாடல்.
இந்தத் திரைப்படத்தின் விளம்பரத்தைத்தான் நூதன முறையில் கையாண்டு ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர் படத் தயாரிப்புத் தரப்பினர். சினிமா பத்திரிகைகளில் இதன் விளம்பரத்தைத் தலைகீழாக வெளியிடச் செய்திருந்தனர். கவனக் குறைவாக தலைகீழாக படத்தைப் போட்டுவிட்டீர்கள் என்று பத்திரிகை ஆசிரியருக்கு அப்போது ஏராளமான கண்டனக் கடிதங்களும் வர ஆரம்பித்திருந்தன. இது தவறுதலாக ஏற்பட்டதல்ல. எல்லோரது கவனத்தையும் ஈர்க்கவே தலைகீழாக பிரசுரம் செய்யப்பட்டது என அடுத்த இதழில் ஆசிரியர் விளக்கம் எழுதி மேலும் விளம்பரப்படுத்தப்பட்ட படமாக வெளிவந்து, ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம்தான் இந்த “அதிர்ஷ்டம்” திரைப்படம்.