தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை தவிர்க்க நடிகர்கள் முன் வர வேண்டும்: தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன்
தமிழ் சினிமாவில் கடந்த மூன்று வருடங்களில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலைஞர்களின் சம்பளங்கள் அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிட்டது. பல தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். அதனால், நடிகர்களும் வருமானத்தில் பங்கு என்ற முறையில் படங்களில் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். இதை வலியுறுத்தி நேற்று தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.
இது குறித்து பிரபல தயாரிப்பாளரும், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில், “இந்த வேலை நிறுத்தத்தின் நோக்கமே, இப்போது இருக்கிற ஒரு நிச்சயமற்ற சூழலில், என்ன வியாபாரம் நடக்கும் என்பதே தெரியாமல் உள்ளது. அதனால், இந்த வியாபாரத்தில் நடிகர்களும் பங்கு கொள்ள வேண்டும். ஒரு நிலையான சம்பளத்தை நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் மட்டும் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள். நடிகர்கள், நடிகைகள், முன்னணி இயக்குனர்கள் ஒரு கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள் இதில் அடங்குவர்.
அவர்களுக்கான ஒரு வருவாய் நிச்சயமாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால், படத்தின் வியாபாரத்திற்கு ஒரு நிச்சயமற்ற நிலைதான் இருக்கிறது. வியாபாரத்தில் அவர்களும் பங்கு பெற வேண்டும், வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நேற்று தயாரிப்பாளர்கள் தரப்பில் நடத்திய வேலை நிறுத்தம்.
நாங்கள் ஏன் இதில் பங்கு கொள்ள வேண்டும் என நடிகர்களும், நடிகைகளும் கேட்பது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த சில பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள். இதைத் தவிர்த்தே ஆக வேண்டும்,” என்கிறார்.
ஹிந்தித் திரையுலகத்தில் கடந்த 15 வருடங்களாக முன்னணி நடிகர்களான அமீர்கான், சல்மான் கான், ஷாரூக்கான், அக்ஷய் குமார், அஜய் தேவகன் மற்றும் தெலுங்குத் திரையுலக முன்னணி நடிகர்கள் பலரும் இப்படி வருமானத்தில் பங்கு என்ற முறையில்தான் நடித்து வருகிறார்கள் என்பதை நடப்பு தயாரிப்பாளர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.