சிக்மா
தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: ஜேசன் சஞ்சய்
நடிப்பு: சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, சம்பத், அன்பு, ஷிவ் பண்டிட்
ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்
இசை: தமன்
வெளியான தேதி: அக்டோபர் 1, 2026
நேரம்: 2 மணி 26 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5
பிரபல போதை மருந்து கடத்தல் டான் சம்பத் பல நூறு கோடி பணத்தை தாய்லாந்தில் ஒரு கண்டெய்னரில் பதுக்கி வைக்கிறார். அதை திறக்கும் சாவி சென்னையில் ஒரு சூதாட்ட கும்பல் கையில் சிக்குகிறது. பின்னர் பல்வேறு கைகளுக்கு மாறுகிறது. அதை தேடி சம்பத், ஷிவ் பண்டிட், இன்னொரு டீம் அலைகிறது. ஒரு கட்டத்தில் கடன் பிரச்னையால் தவிக்கும் ஹீரோ சந்தீப் கிஷனிடம் அது கிடைக்கிறது. அதை தேடி மற்ற கும்பல் அவரை துரத்துகிறார்கள். அதனால் அவருக்கு என்ன பிரச்னை வருகிறது. கடைசியில் அந்த தாய்லாந்து கண்டெய்னர் என்ன ஆனது என்பது ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா கதை.
பல நூறு கோடி பணத்தை கைப்பற்ற துடிக்கும் சில கும்பல்களின் ஆட்டமே சிக்மா கதை. இதை சில கிளைக்கதைகள் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஜேசன் சஞ்சய். ஹீரோ சந்தீப் கிஷன், யூ டியூப் சேனல் நடத்துபவராக, கடனில் தத்தளிப்பவராக, ஹீரோயினை காதலிப்பவராக வருகிறார். அவர் சூதாட்டத்தில் பணத்தை இழக்க, சூதாட்ட கிளப் பற்றிய சில உண்மைகள் தெரிகிறது. ஒரு பென் டிரைவ் மூலம் சில உண்மைகள் புரிகிறது. அதை பயன்படுத்தி சில கேம் ஆடுகிறார். அவரை சூதாட்ட கிளப் ஓனர் ஷிவ் பண்டிட், தாதா சம்பத், அடியாள் யோக் ஜேக்பி துரத்துகிறார்கள். இப்படியாக கதை ஆக்ஷனுக்கு விரிகிறது. சந்தீப் நடிப்பு, ஆக்ஷன் ஓகே. ஆனால் அவர் கேரக்டரில் ஹீரோயிசம் இல்லை.. அவர் நடிப்பில் பயர் இல்லை. சில இடங்களில் அவரை விட வில்லன், அந்த டீமுக்கு முக்கியத்துவம் அதிகம். காதல் காட்சிகளிலும் ஸ்கோர் பண்ணவில்லை. பைட் சீனில் மட்டும் திறமை கான்பித்து இருக்கிறார்.
ஹீரோயின் பரியா அழகாக இருக்கிறார். அவருக்கு கதையில் அதிக முக்கியத்துவம் இல்லை. ஏன் உருப்படியான கலர்புல் பாடல்காட்சி கூட இல்லை. சில இடங்களில் வந்து போகிறார். காமெடியனாக அன்பு வருகிறார். சில இடங்களில் கலகலப்பு ஏற்படுத்துகிறார். மற்றபடி சிரிப்பு வரவில்லை.
சம்பத், ஷிவ் பண்டிட், ஜேக்பி என 3 வில்லன்கள். சம்பத் நடிப்பு ஓகே. ஷிவ் கம்பீரமாக இருக்கிறார். ஆனால் நடிப்பு வரவில்லை. ஜேக்பி கேரக்டர் மனதில் நிற்கிறது. டாக்டராக, ஹீரோ நண்பராக வந்து கடுப்பேற்றி இருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம். ஹீரோ அம்மாவாக வரும் ஷீலா ராஜ்குமாருக்கு சில சீன்கள். வசந்த் ஒளிப்பதிவு ஓகே.
படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை. ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார் கேத்ரின் தெரசா.
ஆரம்பம் முதல் கடைசிவரை சூதாட்டம், போதை மருந்து, கிளப், சாவி, பென் டிரைவ், கண்டெய்னர் என செல்லும் கதையில் விறுவிறுப்பு சுவாரஸ்யம் இல்லை. திரைக்கதையில் புதுமை இல்லை. என்ன சொல்ல வருகிறார்கள் என்பதில் தெளிவு இல்லை. நேர்த்தியாக கதை சொல்லப்படாமல் சுற்றி வளைத்து வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த பாணியில் ஏகப்பட்ட கதைகள் தமிழில் மற்ற மொழிகளில் வந்து இருக்கின்றன. அதை புது கோணத்தில் சொல்வதில் புது இயக்குனராக ஜேசன் சஞ்சய் திணறி இருக்கிறார். நிறைய நடிகர்கள், பெரிய பட்ஜெட் இருந்தும் படம் எங்கேயும் ஈர்ப்பு ஏற்படுத்தவில்லை. குழப்பான திரைக்கதை, சுமாரான டயலாக், திருப்பங்கள், விறுவிறுப்பு இல்லாததால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்மா பெரிய ஏமாற்றத்தை தருகிறது.
பல வெற்றி பாடல் கொடுத்த இசையமைப்பாளர் தமன் கூட ஹிட் பாடல் கொடுக்கவில்லை. முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் அவர் அனுபவம் இன்மையால் திணறி இருக்கிறார். வழக்கான சில கமர்ஷியல் விஷயங்கள் கூட சிக்மாவில் மிஸ்ஸிங். வெற்றிகரமான டைரக்டர் ஆக இன்னும் நிறைய கற்கணும், அதிகம் உழைக்கணும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
சிக்மா - வழக்கமான கதை