உள்ளூர் செய்திகள்

பாரிஸ் கபே

தயாரிப்பு : தண்டர் மீடியா, எல்.வி.என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : சாரஜ் சீலன்
நடிப்பு : குரு சோமசுந்தரம், அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா, பிபின்குமார்
ஒளிப்பதிவு : சதீஷ் ஜி
இசை : கே
வெளியான தேதி : செப் 18, 2026
நேரம் : 1 மணிநேரம் 57 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

பிரபல டாக்டர் குரு சோமசுந்தரமும், சமூக ஆர்வலரான அவர் மனைவி அனு மோலும் சில கருத்து வேறுபாடுகளால் பிரிகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் அவர் மகள் அர்ச்சனாவும், அவர் காதலன் விஜய் விஷ்வாவும் இந்தியா வந்து அவர்களை சேர்த்து வைக்க போராடுகிறார்கள். அவர்கள் பிரிவுக்கு ஒரு இளம் ஜோடிகள் கொலை என தெரிய வருகிறது. அதற்கும் இவர்கள் பிரிவுக்கும் என்ன காரணம். பாரிஸ் டூர் செல்லும் குரு சோமசுந்தரம் அங்கே ஒரு போட்டோ பார்த்துவிட்டு என்ன முடிவெடுக்கிறார். அதனால், ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பது சாரஜ் சீலன் இயக்கிய படத்தின் கரு.

பல படங்களில் குண சித்திர வேடங்களில் நடித்த குரு சோமசுந்தரம் இதில் கதை நாயகனாக வருகிறார். அவருக்கே உரிய இயல்பான நடிப்பு, மென்மையான பேச்சு கதைக்கு பெரிய பிளஸ். அவருக்கும் மனைவிக்குமான பாண்டிங், மகள் பாசம், நீதிக்காக தைரியமாக நிற்கும் விஷயங்கள் படத்தை வலு ஆக்கி இருக்கிறது. ஒரு டாக்டராக இருந்ததை விட பல இடங்களில் ஆக்டராக பல சீன்களில் முத்திரை பதித்து இருக்கிறார். ஆனாலும் முக்கியமான எமோசனல் சீன்களிலும் அதே ஆக்டிங்கை தருவதை, சில அதிமுக்கியமான சீன்களில் அவர் நடிப்பு காமெடி டோனுக்கு மாறுவதையும் தவிர்த்து இருக்கலாம். ஒரு மீட்டருக்கு மேல் அவர் நடிப்பும், உணர்ச்சி ஏறுவதும் இல்லை, இறங்குவதும் இல்லை. அது சலிப்பு.

அவர் மனைவியாக வரும் அனு மோலின் பெண்ணியவாதி, சமூக ஆர்வலர் கேரக்டரும், அவரின் பண்பட்ட நடிப்பு பாரிஸ் கபேயை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. குறிப்பாக ஆணவ கொலைக்கு எதிராக பொங்குவதும், அவர் எடுக்கிற அதிரடி முடிவுகளும், பெண்கள் உரிமைக்காக பேசுவதும் ஓகே. எந்த இடத்திலும் மிகைப்பட்ட நடிப்பு இல்லாமல், அந்த பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.

சோஷியல் மீடியா பிரபலமான அர்ச்சனா இவர்களின் மகளாக வருகிறார். அமெரிக்காவில் வசிக்கும் அவரிடம் இருந்துதான் படமே தொடங்குகிறது. அவரின் காதல் காட்சிகள், பாடல்கள் படத்தை கலர்புல்லாகி இருக்கிறது. அர்ச்சனாவுக்கே உரிய துறுதுறு பேச்சு, பாடிலாங்குவேஜ் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அவர் காதலனாக வரும் விஜய் விஷ்வா நடிப்பு ஓகே. இவர்களை தவிர இன்னொரு காதல் ஜோடியாக, ஆணவக் கொலையால் பாதிக்கப்படுபவர்களாக நயனா, சாய் விக்கி வருகிறார்கள். அவர்கள் சந்திப்பது, மோதுவது, காதல், திருமணம், அடுத்து ஏற்படும் பிரச்னைகள் படத்தின் இன்னொரு பிளஸ். ஆனால் அவர்களின் பெற்றோர்களாக வருபவர்கள், அந்த திருமணத்துக்கு தடையாக இருக்கும் பிபின் குமார் கேரக்டர், எத்தனையோ படங்களில் பார்த்தது. இதே பாணியில் திருமணம், கொலை, தண்டனை என பல கதைகள் வந்து விட்டன. அந்த விஷயத்தில் இயக்குனர் புதுசாக யோசித்து இருக்கலாம். சதீஷ் ஜி ஓளிப்பதிவில் குறை இல்லை. இன்னும் சிறப்பாக பாடல்கள் இசையை கே கொடுத்து இருக்கலாம்.

படத்தின் சில காட்சிகள் அமெரிக்காவில் , பாரிசில் நடிப்பது மாதிரி காண்பிக்கப்படுகிறது. அதில் உண்மை தன்மை இல்லை. கிராபிக்ஸ் விஷயமும் அதில் பெரிதாக செட் ஆகவில்லை. ஜாதி வெறி பிடித்த அப்பா, பாதிக்கப்படும் அம்மா, பலியாகும் ஜோடிகள் என்ற விஷயத்தை, வேறு கோணத்தில் இன்னும் உணர்வுபூர்வமாக காண்பித்து இருக்கலாம். கிளைமாக்ஸ் இப்படிதான் முடியப்போகிறது என்பது வெளிப்படையாக முன்பே தெரிந்துவிடுகிறது. இன்னும் எத்தனை படங்களில்தான் தப்பான அரசியல்வாதி, மோசமான போலீஸ் ரொம்ப சீரியசாக கதை போகும் நிலையில், குரு சோமசுந்தரம் துப்பாக்கி எடுப்பது, தவறு செய்யும் ஒரு போலீஸ் அதிகாரியை மிரட்டுவது, அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பது என்பதெல்லாாம் நாடக பாணியாக இருக்கிறது. முதற்பாதியில் ஓரளவு தாக்குபிடிக்கும் விறுவிறுப்பு, அடுத்த பாதியில் காணாமல் போகிறது.

பாரீஸ் கபே - ஆணவ கொலை பின்னணியில் இன்னொரு படம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !