உள்ளூர் செய்திகள்

தி பாரடைஸ்

தயாரிப்பு : எஸ்எல்வி சினிமாஸ்
இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓடேலா
நடிப்பு : நானி, கயாடுலோஹர், மோகன்பாபு, சோனாலிகுல்கர்னி, ஈஸ்வரிராவ் , ராகவ்ஜூயல்
ஒளிப்பதிவு : சாய்
இசை : அனிருத்
வெளியான தேதி : செப் 25, 2026
நேரம் : 2 மணிநேரம் 54 நிமிடம்
ரேட்டிங் : 1.75 / 2

செகந்திராபாத் அருகே உள்ள பாரடைஸ் என்ற பகுதியில் சவாரி என்ற இன மக்கள் சில நுாற்றாண்டுகளாக கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியர்கள் என்ற குடியுரிமை கூட மறுக்கப்படுகிறது. காரணம், அவர்களை தனது சாராயம் தயாரிக்கும் தொழிலுக்கு அடிமைகளாக வைத்திருக்கும் ஜமீன்தாரர். அந்த கூட்டத்தில் பிறந்து பல அவமானங்களை சந்திக்கும் நானி, தனது இனத்துக்கு எப்படி விடுதலை வாங்கிக் கொடுக்கிறார். சவாரி மக்களை இந்திய குடிமக்கள்களாக எப்படி மாற்றுகிறார் என்பது தி பாரடைஸ் கதை. தெலுங்கில் வெளியான இந்த படம் தமிழிலும் டப்பாகி உள்ளது

அடிமைகளை மீட்கும் ஹீரோ கதை என்ற ஒன் லைன். எத்தனையோ படங்களில் பார்த்ததுதான். என்ன, இதில் ஆக் ஷனை அதிகம் கலந்து, சென்டிமென்டை உருக்கி கொடுத்து இருக்கிறார்கள். முழுக்க, முழுக்க நானி ஹீரோயிசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். அவரும் ஆக் ஷன் காட்சிகளில் அனல் பறக்க விடுகிறார். என்ன, அவரின் கேரக்டர் பின்னணிதான் செட் ஆகவில்லை. அம்மாவை தப்பாக நினைப்பது, கையில் கெட்டவார்த்தை பச்சை குத்தி இருப்பது இதெல்லாம் மாஸ் ஹீரோவுக்கு செட் ஆகுமா என இயக்குனர் யோசிக்கவில்லை. ஒரு காரணத்துக்காக அவர் சடை வளர்க்கிறார். அதனால், அவரை சடையன் என அழைக்கிறார்கள். கிளைமாக்சில்தான் அவரின் நிஜப்பெயர் தெரிய வருகிறது. தனது அம்மாவை கொல்ல வரும் வில்லன் டீமை துவம்சம் செய்யும் சீன், ஒரு குழந்தைகளுக்காக போடும் கிளைமாக்ஸ் சண்டை ஆக் ஷன் பிரியர்களுக்கு பிடிக்கும். வில்லன் மோகன்பாபு, அவர் மகன் ராகவ்விடம் சண்டைக்குபோய் ஜெயிக்கிறார் ஹீரோ. அதெல்லாம் நானி ரசிகர்கள் ரசிப்பார்கள் இடையில் பிட் படத்தில் நடிக்கும் கயாடு லோஹரை காதலிக்கிறார். சினிமா ஆசையில் இருக்கும் கயாடு லோஹர் ஹீரோவுடன் சேர்ந்து தம்மடிக்கிறார். என்ன மாதிரியான படம் என்று புரியவில்லை.

ஒரு இன மக்கள் எப்படி அடிமை ஆகிறார்கள், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்னென்ன போன்ற விஷயங்கள் கண்களில் நீரை வரைக்கிறது. அந்த இன மக்களுக்காக, நானி அம்மாவான சோனாலி குல்கர்னி போராடுவது, அவரின் பிடிவாதம், அவமானம் இதெல்லாம் நல்ல சீன். ஆனாலும், அம்மாவை வேறு மாதிரி காண்பிப்பதும், அதற்கு விளக்கம் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கயாடு கவர்ச்சியாக வருகிறார். அவருக்கு நடிக்க அதிகம் வாய்ப்பில்லை. ஒரு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் கெட்டஆட்டம் போடுகிறார்.

மாலிக் என அழைக்கப்படும் அந்த வில்லன் டீம், வில்லன்கள் செய்யும் அட்டகாசம், கொடுமைகள் ரொம்பவே ஓவர். அவர்களை பழிவாங்கும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் ஓகே என்றாலும், ஓவர் டோஸ். படம் முழுக்க வன்முறையும், சண்டைக்காட்சிகளும், ரத்தமும், கொலையும் ஓவரோ ஓவர். அதை குறைத்திருந்தால் படத்தை ஓரளவு ரசிக்கலாம். எப்ப பாரு வில்லன், அவர் டீம் ஏதாவது டார்ச்சர் செய்து கொண்டே இருக்கிறார்கள். அந்த மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது தலைவலியை உருவாக்குகிறது. சாய் கேமரா வொர்க் பிரமாதம். ஆனால், அனிருத் இசையில் பிளஸ் இல்லை. காது வலிக்கும்அளவுக்கு பின்னணி இசை, பாடல்காட்சி இருக்கிறது. மனதில் நிற்கும் பாடல் இல்லை.

அம்மா சென்டிமென்ட் கலந்த கொத்தடிமைகளை மீட்கும் ஹீரோயிச கதை. தன் இன மக்களை ஹீரோ எப்படி மீட்பார், எதிரிகளை அழிப்பார் என முதலிலேயே தெரிந்துவிடுகிறது. அதனால், படத்தில் ஆர்வம் இல்லை. நேர்த்தி இல்லாத திரைக்கதை, ஹீரோயிச பில்டப், எப்ப பாரு சண்டை, அடிதடி, அவமானம், பழிவாங்கல் ஆகியவை படத்தை பின்னோக்கி இழுக்கிறது. ஒருகட்டத்தில் படம் எப்படா முடியும். இது இன்னொரு டாக்ஸிக் மாதிரி இருக்கிறதே என்ற மனநிலை பார்வையாளர்களுக்கு வந்துவிடுகிறது.

‛தி பாரடைஸ்' - ‛டாக்சிக்'கின் இன்னொரு வெர்சன்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

A ELANGO
2026-09-27 10:14:04

2க்கு 1.75 அதிகம்